நான் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறேன்: பில் கேட்சிடம் பிரதமர் மோடி!
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலகப்பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் – ஏ.ஐ.), சுற்றுச்சூழல், பருவ கால மாற்றம், பெண்கள் முன்னேற்றம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்திப்பு நடந்தது.
பில்கேட்ஸ் எழுப்பிய சில கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். அப்போது அவர், ‘‘காசி தமிழ்சங்கமம் நிகழ்வில் எனது பேச்சு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது போல் எனது நமோ ஆப்பில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ‘டீப் பேக்’ தொழில்நுட்பம் மக்களிடையே எளிதாக குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடும். உதாரணத்திற்கு எனது குரல் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம். இந்த ‘டீப் பேக்’ வீடியோ அல்லது ஆடியோ ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நடைமுறைகளை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம்’’ என்றார்.இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடியது, செய்யக்கூடாததை நாம் வரையறுக்க வேண்டும். இது போன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பம் போதிய பயிற்சி இல்லாத நபர்களிடம் சென்றடையும்போது, அதை தவறான செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் மோடி கூறினார்.
மோடி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:–
‘‘இந்தியா அனைத்து துறைகளிலும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. கிராமங்கள் வரை தொழில்நுட்பம் சென்று வருகிறது. டிஜிட்டல் முறை இளையோர், பெண்களை கவர்ந்துள்ளது. சாட்ஜிபிடியை பலரும் பயன்படுத்த துவங்கி உள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமாக கற்க பெண்கள் தயாராக உள்ளனர். சைக்கிள் கூட ஓட்ட தயங்கிய பெண்கள் இப்போது விமானம் வரை ஓட்டுகின்றனர். தமிழகம், காசியில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகு ஓடத் துவங்கி உள்ளது. இந்திய ஒற்றுமைக்கு அரும்பாடு பட்டவர் சர்தார் படேல். இவர் 1930ல் நாடு முழுவதும் விஷ காய்ச்சல் பரவியது. அப்போதே படேல் தடுப்பூசி கட்டாயம் என உத்தரவிட்டார். இதன்படி கோவிட் காலத்திலும் நாங்கள் தடுப்பு வழிமுறைகளை சிறப்பாக கையாண்டோம்.வெஜிடேரியன் உணவுகளே சிறந்தது. இதனால் அதனை விரும்பி சாப்பிடுகிறேன். தானியங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. உணவு பதார்த்தங்கள் தயாரிப்பது எளிது. சூப்பர் சக்தி கிடைக்கிறது. நட்சத்திர ஓட்டலில் கூட தானியங்கள் உணவுகளை பட்டியலிட்டு விற்க துவங்கி உள்ளன. இரவு தாமதாக தூங்க சென்று விரைவில் எழுகிறேன். குறைந்த நேரமே தூக்கம். இருந்தாலும் எனது உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளது’’.``இவ்வாறு மோடி தெரிவித்தார்.
இதையடுத்து பில் கேட்ஸ் பேசுகையில், ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இதில் பல்வேறு சவால்கள் இருந்தாலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்கக்கூடியது என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி முத்து பரிசு
தமிழகத்தின் தூத்துக்குடி கடல் பகுதியில் எடுத்த முத்து, டார்ஜிலிங், நீலகிரியில் பயிரிட்ட டீத்தூளையும், களிமண்ணால் உருவான மண்குதிரைகள் ஆகியவற்றை பில்கேட்சுக்கு பரிசாக பிரமதர் மோடி வழங்கினார். இதனை கொடுக்கும் போது ‘‘உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்’’ என மக்களை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் பெருமை கிட்டும் என பில்கேட்சிடம் மோடி தெரிவித்தார்.