தமிழ்த்தாய் வாழ்த்தில் தவறாமல் ஒன்றைக் கவனிக்கிறேன்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் ஒவ்வொரு முறையும், அதில், ‘கெழிலொழுகும்’ என்ற சொல் வருகிறது.‘நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்றுதான் மனோன்மணியம் சுந்தரனாரும் தமிழ்த்தாய் வாழ்த்தில் எழுதியிருக்கிறார். நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரு வதனம்’ என்றால், ‘நிலம் என்னும் பெண்ணின் அழகு ததும்பி வழியும் முகம்’ என்று பொருள் கொள்ளலாம்.
இந்த கெழிலொழுகும் என்ற சொல்லை எழிலொழுகும் என்று மாற்றிப் பாடலாமே. பாடினால் இன்னும் நன்றாக இருக்குமே. எழிலொழுகும் என்று பாடும்போது பாடலுக்கான அர்த்தம் கேட்பவர்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும்.
தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாவுன்’ என்ற வரி நீக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. ‘வாழ்த்துப்பாடலில் போய் அழிந்து, ஒழிந்து, சிதைந்து என்ற வசைச் சொற்கள் இடம்பெறலாமா, என்ற எண்ணத்தில் அந்த வரி நீக்கப்பட்டதாக’ அண்மையில் ஒருவரது பதிவில் பார்த்தேன்.
அப்படியானால் மங்கல வாழ்த்து ஒன்றில், அமங்கலச் சொற்கள் இடம்பெறக்கூடாது என்ற எண்ணம் அந்த காலத்திலேயே திராவிடர்களுக்கு இருந்திருக்கிறது.அதாவது, மங்கலம், அமங்கலம் போன்றவற்றில் திராவிடர்களுக்கும் நம்பிக்கை இருந்திருக்கிறது என்ற வியப்பான செய்தியை அந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன? தெரிவியுங்கள்.