தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

எப்படி இருந்த நாம் இப்படி மாறிக்கிட்டிருக்கோம்!

06:17 AM Dec 02, 2024 IST | admin
Advertisement

90களில் பக்கத்துவீட்டுக்காரர் நம்மை பார்த்து பொறாமைப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த டிவியை வாங்குங்கள் என ஒனிடா டிவி விளம்பரம் வரும். அப்போதெல்லாம் டிவி, டெலிபோன், புது உடை, பைக், கேட்ஜெட்ஸ், வீடியோ ப்ளேயர், படிப்பு மாதிரி விஷயங்கள் எல்லாம் பொறாமை தூண்டுகிறவையாக இருந்திருக்கின்றன. அதற்கு காரணம் அன்று அது அனைவருக்கும் கிட்டாத எட்டாக்கனியாக இருந்திருக்கிறது. ஒரு ஊருக்கு ஒரே ஒருவர்தான் புல்லட் வைத்திருப்பார். இரண்டு வீட்டில்தான் டிவி இருக்கும். அவர்கள் வைத்திருக்கிற பொருள்களாலேயே அழைக்கப்படுவார்கள். புல்லட்காரர், டிவிக்காரங்க வீடு என்பதை எல்லாம் நிறைய கேட்டிருப்போம். அதனாலேயே லோன் போட்டு பொருள் வாங்குவார்கள். சிங்கப்பூர் சித்தப்பா மலேசியா மாமாக்களை நச்சரித்து பொருள் வாங்கிவரச்செய்வார்கள்.

Advertisement

இன்று அப்படி பொருள்களால் பொறாமையை உருவாக்குவது எளிதல்ல. இன்று எல்லா பொருட்களுக்கும் எல்லாருக்கும் கிடைக்கிறது. எதற்கும் யாரும் காத்திருக்கத் தேவையில்லை. அன்றைக்கு ஒரு டெலிபோன் இணைப்புக்கும் கேஸ் இணைப்புக்கும் பல மாதங்கள் காத்திருக்கவேண்டும். ஆடம்பர சாமான்களுக்கு எல்லாம் அது ரிலீஸ் ஆகும்போதே மலிவு விலை பதிப்பு வந்துவிடுகிறது. இன்று டிவி வைத்திருப்பதோ, ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருப்பதோ, ஒரு புல்லட் வைத்தருப்பதோ ரோலக்ஸ் வாட்ச் அணிவதோ பொறாமையைத் தூண்டுவதில்லை. லக்கி பாஸ்கர் படத்தில் ஒரு காட்சி வரும், நாம பணக்காரன்னு காட்ட நிறைய பணம் வச்சிருந்தா பத்தாது, அதை நம்ம உடம்புல காட்டணும் என்பதுபோல. அது ஒரு 90ஸ் மனநிலை. இப்போதெல்லாம் அப்படி போட்டிருந்தால் அல்ப பய, அர்ப்பனுக்கு வாழ்வு வந்துடுச்சு என கிண்டல்தான் பண்ணுவார்கள்.

Advertisement

90களில் எதற்கெல்லாம் பொறாமை இருந்ததோ அதில் 99சதவீதம் இன்று எல்லோருக்கும் கிடைக்கத் தொடங்கிவிட்டது. (நான் சொல்வது நகரம் மற்றும் சிறுநகர நிலவரம்) உலக மயமாக்கல் ஒரு காரணம் என்றால் சீனப்பொருட்களின் வருகை இன்னொரு காரணம். மனிதர்களின் வருமானம் அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பு அதிகமாகி இருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை கல்வி. அது நமக்கு கடந்த இரண்டு பத்தாண்டுகளில் அளவில்லாத அளவில் வாய்ப்புகளை உருவாக்கி நம்மை எல்லாம் அப்பர் மிடில்கிளாஸ் ஆக்கி இருக்கிறது. என்னதான் கல்வி கற்றாலும், என்னதான் உயர்ந்தாலும் மனதில் அடுத்தவர் முன்னால் சீன் போடுகிற பொறாமை புத்தி மட்டும் போகவேயில்லை. சரி பொருள்களால் உருவாக்கமுடியாத பொறாமை எதனால் உருவாக்குவது. அனுபவங்களால் உருவாக்கலாம். நீ அனுபவிக்க முடியாத சந்தோஷத்தை எல்லாம் நான் அனுபவத்திருக்கிறேன் என வெளிக்காட்டிக் கொள்ளலாம்.

எந்த மாதிரி அனுபவம், இன்ப சுற்றுலா, பாட்டுக்கச்சேரிகள், சாகசங்கள் செய்வது, பயணம் போவது, நீண்ட விடுமுறை எடுத்துக்கொள்வது, இலக்கியங்களை படிச்சி கரைத்து குடித்தது போல பேசுவது, உலக சினிமாக்கள் மட்டுமே பார்ப்பவன் என மார்தட்டிக்கொள்வது இது மாதிரி இன்று இதற்காகவே ஒரு பெரிய சந்தை உருவாகிவிட்டது. மாசத்தில் பத்து இசையமைப்பாளர்களின் கான்செர்ட்கள் ஊர் ஊருக்கு நடந்துகொண்டே இருக்கின்றன. இயற்கை உணவுத்திருவிழாகள் நடக்கின்றன. ஏதேதோ விற்கிற திடீர் சந்தைகள் உருவாகின்றன. வெளிநாடு சுற்றுலா விற்பவர்கள் பெருகிவிட்டர்கள். இருபதாயிரத்தில் முடிகிற சுற்றுலாவை இரண்டு லட்சத்திற்கு தலையில் கட்டுகிறார்கள். அனுபவத்திற்கு எந்த விலையையும் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லோரும் பண்ணுகிற சினிமா பார்ப்பது, பாட்டு கேட்பதை தாண்டி பெரிய அனுபவம் தேவையாக இருக்கிறது. நான் இளையாராஜா கச்சேரியை நேர்ல கேட்டிருக்கேன் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை வந்துவிடுகிறது.

யூடியூபர் சித்து கூட ஊர் ஊருக்கு விருந்து வைக்கிறார். அதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கில் பணம் கட்ட லட்சக்கணக்கானோர் தயாராயிருக்கிறார்கள். யூடியூபில் காட்டிய ரோட்டுக்கடை பிரியாணியை தின்ன க்யூவில் நிற்கிறார்கள். அந்தக்கடை ஒரு கட்டணகழிப்பறைக்கு பக்கத்தில் இருந்தாலும் அங்கேயே நின்று சாப்பிடுகிறார்கள். ஐபிஎல்லில் தோனி ஆடுகிற இரண்டு மூன்று பந்துகளை பார்க்க ஆயிரகண்ணக்கில் கொட்ட தயாராயிருக்கிறார்கள். சாமியார்கள் இன்னொரு பக்கம் இதே ஆனந்த அனுபவ கூட்டங்கள் நடத்தகிறார்கள். இது அனைவரிடமும் ஒரு FOMO (FEAR OF MISSING OUT)ஐ உருவாக்குகிறது. இதன் அடிப்படை இருபக்க பொறாமை. ஒருபக்கம் தூண்டுதல், இன்னொரு பக்கம் அதற்கு பலியாதல். அதனால்தான் ஒழுங்கான சீட் இருக்காது, குடிக்க தண்ணீர் குடுக்க மாட்டார்கள், பார்க்கிங் வசதி இருக்காது, இருந்தாலும் இசையமைப்பாளர்களின் இன்னிசை கச்சேரிகளுக்கு போவார்கள். அங்கே ஒரு குறைந்த பட்ச மரியாதை கூட நமக்கு கிடைக்காது. என்னமோ ஓசியில் நமக்கு பாட்டு பாடுவது போல நடந்துகொள்வார்கள். ரஹ்மான் கச்சேரியின் போது ஆயிரக்கணக்காணோர் ஓலமிட்டதை ஊரே அறியும். இன்று அதே மாதிரி பல கச்சேரிகளில் உணவுத்திருவிழாக்களில் நடக்கிறது. எத்தனை பட்டாலும் புத்திவராமல் எது இவர்களை திரும்பத் திரும்ப இந்த இடங்களுக்கு செலுத்துகிறது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.

இந்த புது அனுபவங்கள் எல்லாம் எதற்காக தேவைப்படுகிறது? அதை நன்றாக அனுபவித்து ரசிக்க கொண்டாவா? அல்லது பந்தாவுக்கா? தான் இதையெல்லாம் அனுபவித்து விட்டேன் என எல்லோருக்கும் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் படமெடுத்து இன்ஸ்டாவில் வாட்ஸ்அப்பில் பகிர வேண்டும். அடுத்தவன் பார்த்தால் அடேங்கப்பா நீ போனியா என்று மூக்கில் விரலை வைக்கவேண்டும். ஒரு உணவுத்திருவிழாவில் 300 வகை உணவு பரிமாறப்படுகிறது என்றால் ஒரு மனிதன் ஒரேநேரத்தில் அவ்வளவு திங்க முடியுமா என்கிற கேள்விதானே முதலில் வரும்! ஆனால் வராது. ஐம்பதாயிரம் டிக்கட் விற்கிற ஒரு இசைக்கச்சேரியில் கடைசி ரோவில் உட்கார்ந்து பார்த்தால் புள்ளிமாதிரிதான் தெரியும், அருகில் இருக்கிற திரையில்தான் பார்க்கவேண்டும், எதிரில் அமர்ந்திருப்பவர் எழுந்து நின்றால் அதுவும் கூட தெரியாது! ஏன் அப்படி போய் பார்க்க வேண்டும். ஏன் ஆயிரக்கணக்கில் இதற்க்கெல்லாம் காசு செலவழிக்க வேண்டும். ஒரு வாய் கவளத்தை கூட ருசித்து சாப்பிட முடியாத மொபைல் பார்த்துக்கொண்டே சாப்பிடுகிற சமூகம் உணவுத்திருவிழாவில் போய் என்னத்தை தின்பார்கள்! நம்மூரில் மட்டும்தான் என்னமோ எல்லோரும் இதற்கு ஏமாறுகிறார்கள் என நினைக்கிறோம். உலகம் முழுக்க இன்று ஈவன்ட்ஸ் எகானமி ஒரு வளர்ந்துவரும் துறை. கோடி கோடியாக இதில் முதலீடு செய்கிறார்கள். அனுபவ வெறியை காசாக்க இணைய இன்ப்ளூயன்ஸர்களை பயன்படுத்தி நம் காதுகளில் ஓதிக்கொண்டே இருக்கிறார்கள். நம் பொறாமை தூண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இனி வரும்காலங்களில் நம் அனுபவ வெறியை காசக்க என்னவும் செய்வார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும்.

அதிஷா

Tags :
cullturesfoof festivalgenerationhabitshobbymoodsmusic concertyouths
Advertisement
Next Article