புயல் எவ்வாறு உருவாகிறது?
ஃபென்கல் என்ற ஃபெஞ்சல் புயலாக உருவாகும் சூழ்நிலையில் புயல் எவ்வாறு உருவாகிறது என்பதைக் குறித்து நான் பயின்றதைப் பகிர்கிறேன் . முதலில் புயல் உருவாகும் இடத்தைப் பார்ப்போம் .இந்திய தீபகற்பம் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கும் வெப்ப மண்டலத்தில் நமது இருப்பு இருக்கிறது. மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட நாடு நமது மேற்குக் கடற்கரையோரம் அரபிக் கடலும், கிழக்குக் கடற்கரையோரம் வங்காள விரிகுடா . இதில் அரபிக் கடலில் புயல்கள் தோன்றவதை விட நான்கு மடங்கு அதிகமாக வங்காள விரிகுடாவில் புயல்கள் தோன்றுகின்றனவாம். உலகில் உருவாகும் புயல்களில் 10% நமது வங்காள விரிகுடாவில் மட்டுமே உருவாகின்றன என்றால் ஏதோ சில அம்சங்கள் புயல் உருவாக ஏதுவான அமைப்பை உண்டாக்குவது புலனாகிறது.
புயல் மழை என்றால் நமக்கு பஜ்ஜி ,சூடாக டீ ,இளையராஜா பாடல்கள் என்று அவரவர்க்கு தேவை வேறு மாதிரி இருக்கிறது.ஆனால் ஒரு புயல் உருவாக என்ன வெல்லாம் தேவை? கடல் நீர் அதன் மட்டத்திலிருந்து சுமார் ஐம்பது மீட்டர் ஆழம் வரை வெப்பமாக வேண்டும். அதாவது ஒரு வானலியில் நீரை சூரியன் பார்க்க மொட்டை மாடியில் வைத்தால் நீர் சூடாகும் தானே? அப்படி கற்பனை செய்து கொள்ளுங்கள். பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் சூரியனின் கதிர்கள் எப்போதும்பட்டு வங்காள விரிகுடாவின் கடல் மட்ட வெப்பநிலை 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. இவ்வாறு நீர் வெப்பமாகும் போது அதற்கு மேல் பரப்பில் உள்ள காற்றும் சூடாகிறது. இவ்வாறு சூடான காற்று தன் வலிமை குறைந்து உயரே உயரே செல்ல எத்தனிக்கிறது. அந்த இடத்தில் சுற்றியிருக்கும் வளி மண்டவத்தின் அழுத்தத்தை விட குறைவாக இருக்கும். இதை காற்றழுத்த தாழ்வு பகுதி என்று அழைக்கிறோம்.
இப்படி வளி மண்டலத்தின் அழுத்தத்தில் ஒரு இடத்தில் தாழ்வு ஏற்படுவதை நிலப்பரப்பில் ஏற்படும் பள்ளம் போல எண்ணிக் கொள்ளலாம். எப்படி பள்ளம் நோக்கி நீர் ஓடி வருகிறதோ அது போல இந்தத் தாழ்வு நிலையை நோக்கி காற்று இழுக்கப்படும். இவ்வாறு நான்கு திசைகளில் இருந்தும் இழுக்கப்படும் காற்றில் உள்ள ஈரப்பதமும் கூடவே கடலின் நிலப்பரப்பில் இருந்து கிடைக்கும் வெப்பமும் சேர்ந்து கொள்கிறது. இது ஒரு இஞ்சின் ஓடுவதற்கு தேவையான எரிபொருள் போல செயல்படுகின்றன. சரி... இவ்வாறு ஒரு தாழ்வு நிலை உருவாகியாயிற்று பிறகு எப்படி சுற்றிச் சுழலும் புயலாக அது மாறுகிறது?
அதற்குக் காரணம் பூமி தான். பூமி சுற்றுவது நின்று விட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை தானே? பூமி சுற்றுவதால் அதன் மேல் இருக்கும் நகர்ந்து செல்லும் வளி மண்டலமும் அதனுடன் சேர்ந்தே சுற்றியாக வேண்டும்.இவ்வாறு ஒரு சுழலும் பொருளின் மேல் அதனையொட்டி சேர்ந்து சுழலும் பொருள் மீது ஒரு விசை வேலை செய்கிறது. அதற்குப் பெயர் "கோரியாலிஸ் விசை".இந்த விசையின் வேலையால் பூமத்திய ரேகைக்கு வடக்குப் பகுதிகளில் தாழ்வு நிலை நோக்கி வரும் காற்றை, எதிர் கடிகார திசையில் சுழலச்செய்யும்.அதுவே பூமத்திய ரேகைக்கு தெற்காக இருக்கும் பகுதிகளில் உள்வரும் காற்று கடிகார திசையில் சுழலச் செய்யும். இதன் விளைவாக "சுற்றிச் சுழலும் இஞ்சினாக" உருவெடுக்கிறது. இந்த இஞ்சினுக்குத் தேவையான எரிபொருள் கிடைக்கும் வரை நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கும்.இதற்கான எரிபொருள் நான் முன்பே கூறியது போல கடல் மட்ட நீரின் வெப்பம் தான்.
இந்த வெப்பத்தை உறிஞ்சி இழுத்து சுற்றிச் சுழல சுழல வேகமெடுத்துக் கொண்டே செல்லும் இதன் விளைவாக தாழ்வு பகுதி ( காற்றின் வேகம் < மணிக்கு 31.5 கிலோமீட்டர் ) தாழ்வு நிலையாக மாறி பிறகு தாழ்வு மண்டலமாகவும் ( காற்றின் வேகம் மணிக்கு < 50 கிலோமீட்டர் ) நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ( < மணிக்கு 62 கிலோமீட்டர்) என அதில் சுற்றிச் சுழலும் காற்றின் வேகத்தைப் பொருத்து உருமாறிக் கொண்டே இருக்கும்.இவ்வாறு தாழ்வு நிலையைச் சுற்றி தொடர்ந்து சுழலும் சூடான காற்று மேலே வளிமண்டலத்தில் எழும்பும் போது ட்ரோபோஸ்பியர் எனும் வளி மண்டல அடுக்கில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது நீராவி என்பது மீண்டும் நீராக மாறி மழை மேகங்களாக உருவெடுத்து நடுவே உள்ள தாழ்வு நிலை பகுதியைச் சுற்றி சுழல ஆரம்பிக்கும்.
இவ்வாறு மேலே வேகமாக எழும்பும் காற்றை அரணாகத் தடுக்குமாறு வளிமண்டலத்தின் மேல்பகுதிகளில் வலிமையான காற்றோட்டம் (Wind shear) இருந்தால் உருவாகும் புயல் மேல் கொட்டு வைப்பது போல புயல் அமைப்பை நிறுத்தி விடும். எனவே மேலே எழும்பும் வெப்பக் காற்றை தடுக்குமாறு மேல் மண்டலக் காற்று சுழற்சி இருக்கக் கூடாது. இதுவும் புயலாக உருமாறுவதற்கு முக்கியமான தேவையான அம்சமாகும்.இவ்வாறு வேகமெடுக்கும் காற்று சுழற்சி மணிக்கு 62 கிலோமீட்டர் என்ற வேகத்தைத் தாண்டினால் அது ஒரு புயலாக உருமாறியதென அறிவித்து அதற்க்குப் பெயரும் சூட்டப்படும்.இப்படியே சுற்றிக் கொண்டே இருக்க இருக்க வேகமேற்றி தீவிர புயல் (87-116 கிமீ வேகம்)அதி தீவிர புயல் ,மிகத் தீவிரமான புயல் (> 222 கிமீ)என்று மாற்றம் அடையலாம் .இப்படியே போயிக்கிட்டுருந்தா இதுக்கொரு எண்ட் இல்லையா என்று கேட்பது புரிகிறது.இருக்கிறது.வளி மண்டலத்தில் தோன்று புயல் ஒரே இடத்தில் தொடர்ந்து பல மணிநேரங்களில் பல நாட்கள் இருக்க முடியாது .இதற்கும் காரணம் பூமி சுழற்சி தான் .
பூமி சுழல்வதாக அதை போர்த்தியிருக்கும் காற்றும் ஒரு இடத்தில் டேரா போட முடியாது .எனவே வளி மண்டல சுழற்சியின் திசைக்கு ஏற்றவாறு புயல் நகர்ந்தே தீர வேண்டும். வேண்டுமென்றால் வேகமாக நகரமால் மெதுவாக ஆமை வேகத்தில் நகரலாம்.நமது பகுதியில் உள்ள வளி மண்டல காற்று சுழற்சி மேற்கு திசை நோக்கி இருப்பதால் வெப்ப மண்டலப் புயல்கள் மேற்கு நோக்கி நகரும் வண்ணமாகவே இருக்கும்.எனவே தான் வங்காள விரிகுடாவில் தோன்று புயல்கள் ஒன்று மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக கடற்கரை ஓரம் அல்லது வட மேற்காக நகர்ந்து ஆந்திரா ஒடிஷா மேற்க வங்கம் பங்களாதேஷ் என்று செல்கின்றன. புயல் கரையைக் கடக்கிறது என்றால் என்ன? புயல் கடலின் மேற்பரப்பில் இருக்கும் வரை அதன் இஞ்சின் நிற்கவே நிற்காது. காரணம் வெப்பமான நீரிலிருந்து எழும்பும் வெப்பமான காற்றை உணவாக உட்கொள்ளும் வரை அதற்கு அழிவே கிடையாது. ஆனால் வளிமண்டல நகர்வு காரணமாக நிலப்பரப்பை அடையும் போது அந்த வெப்பம் கிடைக்காமல் சற்று வலிமை இழக்கும்.
கூடவே தாழ்வு நிலையும் குறையும்.எனவே சுழற்சியின் வேகம் குறையும்.புயல் கடலின் மேற்பரப்பில் எத்தனை வேகத்தில் சுழன்றதோ நிலப்பரப்பை எதிர்கொள்ளும் போதும் கிட்டத்தட்ட அதே வேகத்தில் தாக்கும் என்பதால் சேதம் அதன் வேகத்துக்கு ஏற்றாற் போல இருக்கும். புயலின் கண் அல்லது மையப் பகுதி எங்கு கரையைக் கடக்கிறதோ அங்கு சேதங்கள் பலமாக இருக்க வாய்ப்பு உண்டு.தரையை அடைந்ததும் அதற்கு மேல் அதன் சுழலும் இஞ்சினுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் வலிமை குன்றி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ தாழ்வு பகுதியாகவோ மாறி கடலோர மற்றும் உள் மாவட்டங்களுக்கு மழையைத் தரும்.
இப்போது மீண்டும் பழைய கேள்விக்கே வருகிறேன்.ஏன் வங்காள விரிகுடாவில் அதிகமான புயல்கள் உருவாகின்றன?வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு புயல் உருவாகக் தேவையான வெப்பமான 26.5 டிகிரி செல்சியசை விட அதிகமாகவே எப்போதும் இருக்கிறது. இந்த விரிகுடாவின் மேலும் தொடர்ந்து பொழியும் மழையினாலும் இங்கு வீசும் கதகதப்பான காற்றும் இந்த வெப்பத்திற்கு காரணம் கூடவே வங்காள விரிகுடா ஆழம் குறைவானது. ஈரப்பதம் அதிகம் கொண்டதுஎ ன்பதால் எளிதில் கடலின் மேற்பரப்பு முதல் சற்று ஆழம் வரை சூடாகி எளிதில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
சுற்றி மூன்று திசைகளிலும் நிலப்பரப்பு இருப்பதால் தொடர்ந்து காற்று இந்த விரிகுடாவை நோக்கி பலமாக வீசுவது போன்ற பூகோள அமைப்பு.இத்தகைய அமைப்புகளால் வங்காள விரிகுடாவில் வெயில் காலம் மழைக்காலம் என்று பாகுபாடெல்லாம் இல்லாமல் புயல் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்ற நிலை இருக்கிறது.உலகின் 10% புயல்களைப் பார்க்கும் கடற்கரையோரம் வசித்துக் கொண்டு புயல் எப்படி உருவாகிறது என்பதைத் தெரியாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே பயின்றேன் . இங்கு எழுதுகிறேன்
நன்றி.