இந்தியும் தமிழகமும்….!
இந்தி மொழியில் உள்ள ஒரேயொரு இலக்கியமாகச் சொல்லப்படுவது, துளசிதாசரின் இராமாயணம். அதற்குத் துளசிதாசர் வைத்த பெயர், ‘இராமதரிசமானஸ்’. ஆனால், துளசிதாசர் அதை தேவநாகிரி எழுத்து வடிவில் எழுதினாலும் இந்தி மொழியில் எழுதவில்லை. சமஸ்கிருதக் கவிஞரான அவர், வால்மீகியால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணம், பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக அப்பொது பேச்சு வழக்கில் இருந்த ‘அவதி’ மொழியில்தான் எழுதினார். இது நடந்தது 16-ஆம் நூற்றாண்டு. அப்போதுகூட இந்தி, மக்களின் மொழியாக மாறவில்லை.
சமஸ்கிருதத்தின் நேரடி வாரிசான இந்தி மொழி, 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தோன்றியிருந்தாலும் ஆரம்பத்தில் மிகவும் நோஞ்சானாகத்தான் இருந்திருக்கிறது. மிகக் குறைந்த மக்களாலேயே பேசப்பட்டிருக்கிறது. 11-ஆம் நூற்றாண்டில்தான் சமஸ்கிருதத்தின் தேவநாகிரி எழுத்து வடிவத்தை இந்தி பயன்படுத்த ஆரம்பித்தது. அதையும் இந்தி மட்டுமே பயன்படுத்தவில்லை. மராத்தி, போரா, கொங்கணி போன்ற மொழிகளும் அதே எழுத்து வடிவத்தைத்தான் பயன்படுத்துகின்றன. உருது, பாரசீகம், அரபு என்று பலமொழிகளிலிருந்தும் சொற்களைப் பெற்று இந்தி, கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டம் பெற ஆரம்பித்தது.
ஆங்கிலேயர் காலத்தில், 1937-ம் ஆண்டில் சென்னை ராஜதானியில் முதன்முதலாக வெற்றி பெற்ற காங்கிரஸ், மூதறிஞர் இராஜாஜி தலைமையில் ஆட்சியமைத்தது. உடனே, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது. அதை, எதிர்க்கட்சியான நீதிக் கட்சி கடுமையாக எதிர்த்துப் போராடிது. பெரியாரும் போராட்டத்தில் குதித்தார். போராட்டத்தில், இருவர் உயிரிழந்தனர். பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர் போராட்டங்கள் காரணமாகக் காங்கிரஸ் அரசு 1939-இல் பதவி விலகியது. அப்போது, சென்னை மாகாண கவர்னராக இருந்த எர்ஸ்கின் பிரபுதான் 1940-இல் கட்டாய இந்தியை விலக்கினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, 1950, ஜனவரி 26-இல் இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி, 1965-லிருந்து அரசின் பணிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை எதிர்த்து, இந்திபேசாத மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்தில் அப்போராட்டத்தை திமுக முன்னெடுத்து நடத்தியது. அதன்காரணமாக, அன்றைய பிரதமர் நேரு, 1963-இல் கொண்டுவந்த அரசுப் பணிமொழிச் சட்டத்தில், இந்தி எனச் சொல்லப் பட்டிருந்தாலும் 1965-க்குப் பிறகு ஆங்கிலமும் அரசு மொழியாக விளங்கும் என வாக்குறுதி கொடுத்தார். ஆனாலும் திமுக திருப்தியடையவில்லை.
அதனால், 1965, குடியரசு தினம் நெருங்கும் நேரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜனவரி 25-ஆம் தேதியன்று மதுரையில் போராடிய மாணவர்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பெருங்கலவரமாக வெடித்தது. அது மாநிலமெங்கும் பரவி, அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்தது. அப்போது, பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனாக இருந்த நானும், ‘தமிழுக்கு மேடை; இந்திக்குப் பாடை’என்றும் ‘இந்தி அரக்கியே ஒழிந்து போ’ என்றும் ஊர்வலத்தில் கோஷமிட்டுச் சென்றது இன்றும் நிழலாடுகிறது.
இப்படி, முளைத்து மூன்று இலைகூட விடாத என்போன்றோரெல்லாம் ஊர்வலம் போவதை அரசால் தாங்கிக் கொள்ள முடியுமா? அடக்குமுறையைக் கையாண்டது. அதன்காரணமாகவே வன்முறை, தடியடி, தீவைப்பு, துப்பாக்கிச் சூடு என நடந்ததில், அதிகாரபூர்வ தகவல்படி 70 பேர் மாண்டு போனார்கள். அதன்பிறகுதான் அப்போதைய பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, அரசுப்பணிகளில் ஆங்கிலமும் இணை மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியைக் கொடுத்தார். அதன்பிறகே போராட்டம் ஓய்ந்தது.இதன் காரணமாகவே, 1967-இல் நடந்த பொதுத் தேர்தலில், திமுக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அப்புறம் தமிழகத்தில் எழவே முடியவில்லை.
எனவேதான், அத்தேர்தலில், மத்தியில் வெற்றி பெற்றுப் பிரதமரான இந்திரா காந்தி, இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளுமே அரசு மொழிகளாக இருக்கும் என பணிமொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். 1937-இல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய இராஜாஜி, 1967-இல் இந்திக்கு எதிராக மாறியிருந்தார் என்பதும் வரலாறு. காங்கிரஸும் அன்று சங்கித்தனம்… சாரி, சண்டித்தனம் செய்தது உண்மைதான் என்றாலும் பட்ட பிறகு பாடம் பெற்றுத் திருந்தி விட்டது. இன்று? பார்ப்போம்.