தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்ட படம் `வங்காள விரிகுடா`!

02:05 PM Apr 09, 2024 IST | admin
Advertisement

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'. நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திங்கட்கிழமை அன்று சென்னை கலைஞர் அரங்கத்தில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்' இசைத்தட்டினை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குகன் சக்வர்த்தியாரின் தாய் மற்றும் தந்தை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Advertisement

இந்நிகழ்வின் எழுத்தாளர் இயக்குநர் டி கே சண்முக சுந்தரம் பேசியது…

Advertisement

ஒரு இனிமையான விழா. 21 கிராப்ட்களை கையாண்டு அசத்தியிருக்கிறார் குகன் சக்வர்த்தியார். திரைப்படக் கல்லூரியில் படித்தவர், அதனால் தான் 21 கிராப்ட்களை கையாண்டுள்ளார். அவரிடம் அதற்கான அறிவு இருக்கிறது. ஒளிப்பதிவு செய்துள்ளார், பாடல் எழுதியுள்ளார், தத்துவ பாடலும் பாடியுள்ளார் பல விதங்களில் அசத்தியுள்ளார். இந்தப்படம் என்ன ஜானர் எனத் தெரியவில்லை, மர்மக்கதையோ என்று நினைதேன். தலைப்பு வித்தியாசமாக பல சிந்தனைகளை தூண்டி விடுகிறது. ஆனால் சமூக சிந்தனையை பேசியிருப்பது டிரெய்லரில் தெரிகிறது. மன்னர்கள் ஆண்ட வங்காள விரிகுடா, இப்போது குகன் சக்வர்த்தியார் வசமாகியுள்ளது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். ஒரு படைப்பு மக்களுக்கு பயன்பட வேண்டும், அம்மாதிரியான படைப்பாக இப்படைப்பு இருக்குமென நம்புகிறேன். குகன் சக்வர்த்தியாருக்கு வாழ்த்துகள்.

எழுத்தாளர் கலைமாமணி பிரபாகரன் பேசியது…

முயற்சி திருவினையாக்கும் எனும் பழமொழிக்கு உகந்தவர் குகன் சக்வர்த்தியார். எப்போது சந்தித்தாலும் இப்படம் பற்றித்தான் சொல்லிக்கொண்டிருப்பார். இப்படத்திற்காக மிக கடுமையாக உழைத்துள்ளார். முத்துராமனின் மகன் கார்த்திக்கை பாரதிராஜா அழைத்து நடிக்க வைத்த போது, இனிமேல் நீ பபூன், ஒரு எண்டர்டெயினர், இயக்குநர் என்ன சொன்னாலும் அதைத்தட்டாமல், மக்களுக்கு பிடிக்கும் படி செய்ய வேண்டுமென சொன்னதாக சொல்வார்கள். அது போல் குகன் தன்னை மாற்றிக்கொண்டு இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். நாம் நம்பும் விசயத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அது போல் இப்படத்திற்காக உழைத்திருக்கும் குகன் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.

பாடலாசிரியர் சினேகன் பேசியது…

இந்த மேடை மிக முக்கியமான மேடை, வெற்றி பெற்றவர்களை பற்றிப் பேசும் மேடையை விட வித்தியாசமான மேடை எனக் கருதுகிறேன். அதற்கு காரணம் மாப்பிள்ளை குகன் தான். அவருடன் பழக ஆரம்பித்த காலத்திலிருந்து, இன்று வரை ஒரு வெள்ளந்தியாக உற்சாகமாக இயங்கும் மனிதனாகவே அவரைப் பார்த்துள்ளேன். அவரது அயராத உழைப்பு தான் அவருக்கு இந்த உயரத்தை, மேடையை தந்துள்ளது. பல கஷ்டங்களுக்கு இடையில் இந்தப்படத்தை எடுத்துள்ளார். எத்தனை பிரச்சனை என்றாலும் குகன் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கும். சினிமா எல்லோருக்கும் வெற்றியை தந்துவிடுவதில்லை, ஆனால் அதில் விடா முயற்சியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் குகன். உழைப்பவன் என்றும் தோற்பதில்லை, வாழ்த்துகள்.

கருடானந்த சுவாமிகள் பேசியது...

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. நாம் இருக்கும் துறையில் சிறப்பாக இயங்குவது தான் நம் சிறப்பு, அந்த வகையில் திரைத்துறையில் 21 கிராப்ட்களை கையாண்டு அசத்தியிருக்கிறார் குகன். குகனை எனக்கு பல காலமாகத் தெரியும், கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் மிகவும் நட்போடு பழகுபவர். ஒரு சந்திப்பில் வங்காள விரிகுடா படத்தை எனக்கு போட்டுக் காண்பித்தார், அப்துல் கலாமின் சில காட்சிகள் என்னை நெகிழச் செய்தன. ஒரு காலத்தில் பாக்யராஜ், டி ராஜேந்தர் என, எல்லா கலைகளையும் கையாளும் திறமையாளர்களைப் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்போது அப்படியில்லை, இன்றைய காலகட்டத்தில் 21 கிராப்ட்களை கையாண்டிருப்பது மிகப்பெரிய விஷயம். அதிலும் சாதித்து காட்டியுள்ளார் குகன். எனக்கு குரு ஸ்தாணத்தை தந்து என்னை வாழ்த்த அழைத்து வந்துள்ள குகனுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உங்களை ஜெயிக்க வைக்க ஒரு மந்திரம் இருக்கிறது அது மாதா பிதா தான். தாய் தந்தையை போற்றுங்கள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எல்லோரும் இப்படத்திற்கு தங்கள் பரிபூரண ஆசிர்வாதத்தை தர வேண்டுகிறேன், நன்றி.

குகன் சக்கரவர்த்தியார் பேசியது...

எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை உங்களிடம் கொண்டு வர நினைத்தேன், அது தான் இப்படம். பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், அப்துல்கலாம் என அனைவரையும் ஒரே போஸ்டரில் கொண்டு வரும் ஐடியா தான் இந்தப்படம். அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. என்னை மாதிரி வாழாதீர்கள், இவர்கள் மாதிரி வாழுங்கள் என சொல்வது தான் இந்தப்படம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, கலைஞர், அண்ணா எல்லோரும் வாழும் இடம் வங்காள விரிகுடா. அது போல் இந்தப்படமும் வாழும். இந்தப்படத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். அப்துல் கலாம் மீது எனக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது என படத்தில் காட்சி வைத்துள்ளேன், அதை எல்லோரும் கண்டித்தார்கள். ஆனால் அது எதற்கு என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கலைஞர் பேசிய இந்த மேடையில் நானும் இன்று பேசுகிறேன் என்பதே எனக்கு பெருமை தான். காசு உள்ளவன் எல்லாம் படமெடுத்து விட முடியாது, அறிவு வேண்டும். நல்ல படம், அருமையான கதை, நல்ல பாடல்கள் என படம் நன்றாக வந்துள்ளது. படம் நன்றாக இருந்தால் நீங்கள் பாராட்டுவீர்கள். எந்த விஷயமும் எளிதாக நடந்து விடாது. நான் உழைக்கிறேன், பிழைக்கிறேன், வாழ்த்துங்கள், நன்றி.

Tags :
'Vangala Viriguda Kurunila Mannan'eventMovieMusicTrailer Launch
Advertisement
Next Article