அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாத்துளிகள்!
மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் , 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி கார் வென்று, இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார்.அதேபோல் 17 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் இரண்டாம் இடமும், 12 காளைகளை அடக்கி குன்னத்தூரைச் சேர்ந்த திவாகர் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரை பரிசாக வழங்கப்பட்டது..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், இன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 810 காளைகள் பங்கேற்றன. 650க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் மாலை 6:15 மணியுடன் நிறைவடைந்தன.முன்னதாக இந்த போட்டியில் வாடிவாசலில் இருந்து முதலாவது முனியாண்டி கோவில் சாமி கோவில் அவிழ்க்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக அரியமலை கெங்கையம்மன் கோவில் காளை அவிழ்க்கப்பட்டது. இந்த போட்டியின் முதல் சுற்றில் 1200 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் கலந்துகொண்ட நிலையில், அடுத்து வந்த ஒவ்வொரு சுற்றிலும் காளைகள், காளையர்கள் குறைவாகவே களமிறங்கினர்.
சிலர் தங்கள் காளைகள் மீது விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும், ஒரு லட்சம், ரூ.50,000 பரிசுப்பொருட்களையும் அறிவித்து அடக்கினால் அவற்றை வழங்குவதாக அறிவித்தார்கள். இந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால், சில காளைகள் ஜல்லிக்கட்டு களத்தில் புழுதியை கிளப்பி மாடுபிடி வீரர்களை நெருங்க விட வில்லை. அதையும் தொட்ட வீரர்களை, ‘என்னை தொட்டா கெட்ட’ என்கிற ரீதியில் கொம்புகளால் சுழற்றி தூக்கிப்போட்டது. அதில் பலர் காயமும் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற சென்ற போலீஸாரும், மற்ற சக மாடுபிடி வீரர்களும் காயம் அடைந்தனர். இத்தகைய காளை உரிமையாளர்களுக்கு உடனே அழைத்து மேடையிலேயே பரிசுப்பொருட்களும், பாராட்டும் விழா குழுவினரால் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு முதல் பரிசாக நிக்ஸான் மேக்னெட் கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் இருசக்கர வாகனம் வென்றார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டது. இந்த மாட்டிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.. தற்போது முதல் பரிசு பெற்றுள்ள கருப்பாயூரணி கார்த்தி, 2022ம் ஆண்டிலும் முதல் பரிசு பெற்றிருந்தவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தான் டிகிரி படித்திருப்பதாகவும் அரசு ஒரு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனவும் வழக்கம் போல் கோரிக்கை விடுத்துள்ளார்.