For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கொள்ளிடம் ஆற்றில் உயர்மின் அழுத்த கோபுரம் சாய்ந்து விழுந்தது!

06:37 PM Aug 02, 2024 IST | admin
கொள்ளிடம் ஆற்றில் உயர்மின் அழுத்த கோபுரம் சாய்ந்து விழுந்தது
Advertisement

ர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நிரம்பி விட்டதால், தற்போது மேட்டூர் அணைக்கு வரும் 1.50 லட்சம் கன அடி தண்ணீரும் ஒட்டு மொத்தமாக காவிரியில் திறந்து விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 35, 000 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீரும் திறந்து விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகளைத் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

Advertisement

இதில் திருவானைக்கோவில் - நெ. 1 டோல்கேட் இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் புதிய பாலத்தின் அருகே ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தின் அஸ்திவார தூண்கள் தண்ணீர் வேகத்தில் அடித்து செல்லப்பட்டதால் நேற்று காலை முதலே மெதுவாக சாய்ந்து கொண்டே இருந்தது. மின்வாரிய ஊழியர்கள் அதை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தண்ணீர் அதிகம் செல்வதன் காரணமாக தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை சாய்ந்திருந்த உயர் மின்னழுத்த கோபுரம் ஆற்றில் விழுந்தது. இதனால் உயர் அழுத்த மின் கோபுரங்களில் கட்டப்பட்டிருந்த மின் கம்பிகள் பாலத்தின் மீது விழுந்தன.முன்னதாகஎந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், உயர் மின்னழுத்த கோபுரம் சாயாமல் இருப்பதற்கு இரும்புக் கம்பிகள் கொண்டு அதனை வலுப்படுத்துவதற்கு மின்வாரிய ஊழியர்கள் இரவு என பாராமல் பணியைச் செய்து உயர்மின் கோபுரத்தை இரும்பு கம்பியால் இழுத்துக் கட்டினர்.

Advertisement

இருப்பினும், கடைசி நேரத்தில் தண்ணீரின் வேகம் தாங்க முடியாமல் நள்ளிரவு ஒரு மணி அளவில் உயர் மின் அழுத்தக் கோபுரம் தண்ணீரில் சாய்ந்தது விழுந்தது. இந்த நிலையில், இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "தற்போது கொள்ளிடம் ஆற்றில் 1.35 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் பாலத்தில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் 800 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட தடுப்புச் சுவரில் தற்போது 15 மீட்டர் அளவிற்கு சேதம் அடைந்துள்ளதாகக் கூறினார்.

மேலும், முழுமையாக நீர் வடிந்த பிறகு பாலம் உடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார். நீரின் வேகத்தால் இரண்டு மின்னழுத்த கோபுரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், தண்ணீர் ஒரு பக்கமே பாய்ந்தோடியதால் மண்ணரிப்பு ஏற்பட்டு மின் கோபுரங்கள் சாய்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மின் கோபுரங்கள் சாய்ந்திருந்தாலும் மாற்று ஏற்பாடு மூலம் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

Tags :
Advertisement