நீட் முறைகேடுகளைத் தடுக்க உயர்நிலை குழு: உங்கள் யோசனையும் தேவையாம்!
பெரும் சர்ச்சையையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ள தேசிய தேர்வு முகமையை சீர்திருத்துவது தொடர்பான பரிந்துரைகளை மாணவர், பெற்றோர் தரப்பினரும் வழங்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது.மாணவர்கள், பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான innovateindia.mygov.in/examination-reforms-nta/ ஐப் பார்வையிடுவதன் மூலம் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை தங்கள் பரிந்துரைகள், பார்வைகள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
நரேந்திர மோடி 3.0 ஆட்சி பொறுப்பேற்றதுமே எழுந்த முதல் பிரச்சினையாக நீட்- நெட் ஆகிய தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இளநிலை மருத்துவ உயர்கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு விவகாரத்தில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது முதல், வினாத்தாள் கசிவு வரை பல்வேறு விவகாரங்கள் மத்திய அரசை சங்கடத்தில் ஆழ்த்தின. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான நெட் வினாத்தாள் கசிவு காரணமாக, அந்த தேர்வு முடிந்த மறுநாளே அது ரத்து செய்யப்பட்டது. இவற்றால் நீட், நெட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை கடும் நெருக்கடிக்கு ஆளானது. எனவே தேசிய தேர்வு முகமையை சீரமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது.
அவற்றின் அங்கமாக தேசிய தேர்வு முகமையை மறுசீரமைக்க உதவும் பரிந்துரைகளை தெரிவிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மத்திய அரசு கோரியுள்ளது. இதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. தேர்வுகள் வெளிப்படையாக, சுமுகமாக, நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையின் கீழ் 7 பேர் கொண்ட குழு செயல்பட இருக்கிறது. ராதாகிருஷ்ணனைப் பொறுத்தவரை அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஏவியனிக்ஸ் பொறியாளராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். விண்வெளி ஏவுதள அமைப்புகள், விண்வெளி பயன்பாடுகள் மற்றும் விண்வெளித் திட்ட மேலாண்மை ஆகிய துறைகளில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்திருக்கிறார். புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய சுனாமி எச்சரிக்கை அமைப்பில் முதல் திட்ட இயக்குநராகவும் இருந்திருக்கிறார். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் தலைவராகப் பணிப்புரிந்திருக்கிறார். நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சியின் இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது நீட் உயர்நிலை நிபுணர் குழு தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த தேசிய தேர்வு முகமை சீரமைப்பு தொடர்பான தங்கள் கருத்துக்கள், யோசனைகளை பெற்றோர், மாணவர் உள்ளிட்டோர் பதிவிடுவதற்கான சிறப்பு இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை 7 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.