ஊட்டி, கொடைக்கானலுக்கு காரில் செல்ல ஐகோர்ட் புதுக் கட்டுப்பாடு!
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வாகன நெரிசலை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களின் எண்களையும், வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளம் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு அதன்படி செய்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு பசுமை நிறைந்து காணப்படுவதால் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஊட்டிக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும். அதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
ஆனால், அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதே நேரம், இந்த கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என்றும், ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கு இ – பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், ஊட்டி, கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து மினி மின்சார பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கு ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.