தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அய்யே.. இந்த விஜய்-யின் இணையத்தள தில்லாலங்கடி!

10:42 PM Oct 30, 2024 IST | admin
Advertisement

டிகர் விஜயின் கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றி பரவலாக பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் இணையதளம் பற்றி பேசலாம் என நினைக்கிறேன்.

Advertisement

டிவிகே.பேமலி (https://tvk.family/) எனும் பெயரிலான அந்த இணையதளத்தில் அதன் குறைந்தபட்ச அம்சங்கள் கொண்ட வடிவமைப்புத் தவிர பாராட்டக்கூடிய அம்சங்கள் ஒன்று கூட இல்லை என்றே கருதுகிறேன். அதைவிட முக்கியமாக தவெக இணையதளம் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

முதல் அம்சம் இந்த தளம், இணைய ஜனநாயக தன்மை என்பதே இல்லாமல் ஒரு வழி பாதையாக இருக்கிறது. உறுப்பினர்களாகும் எண்ணம் கொண்டவர்கள் தவிர வேறு யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லாமல் சொல்வது போல அமைந்துள்ள இந்த தளத்தின் முகப்பு பக்கம், வணக்கம் தோழரே என வரவேற்று, உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய கேட்கிறது.மொத்த தளமும் அவ்வளவு தான். வேறு எந்த உள்ளடக்கமும் இல்லை. ( வரவேற்பு வாசகத்தோடு கட்சி கொடி மற்றும் தலைவர் படம் உள்ளது).உறுப்பினர் சேர்க்கையை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டது என்பதால், மொபைல் எண் பதிவுக்கான கோரிக்கையை புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த கோரிக்கை விடுக்கப்படும் விதம் முழு சர்வாதிகார தன்மையோடு அமைந்திருக்கும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

Advertisement

ஏனெனில், மொபைல் எண் சமர்பிக்க கோருவது அனுமதி நோக்கில் அல்லாமல், நிபந்தனையாகவே அமைந்துள்ளது. மொபைல் எண்ணை சமர்பிப்பது தவிர பயனாளிகளுக்கு வேறு தேர்வே கிடையாது. அதோடு, மொபைல் எண் கோரப்படுவதற்கான விளக்கமும் இல்லை. இந்த எண் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதற்கான தகவல்களும் இல்லை. முக்கியமாக மொபைல் எண் தவறாக பயன்படுத்தப்படாது எனும் உறுதியும் இல்லை.

தரவுகள் அறுவடை தொடர்பான சட்டப்பாதுகாப்பு வலுப்பெற்று வரும் காலத்தில், ஒரு இணையதளம் அதிலும் குறிப்பாக பொது நோக்கிலான இணையதளம், பயனாளிகளின் தகவல்களை திரட்டும் போது, அது தொடர்பான தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். (அனுமதி இல்லாமல் தரவுகளை சேகரிப்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்ட மீறலாக கருதப்படுவதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆனால் தவெக கட்சி இணையதளம், இத்தகைய இணைய நெறிமுறைகள் பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. வந்தீர்களா, உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்யுங்கள் என்கிறது. இது ஒரு வழி பாதை அணுகுமுறை மட்டும் அல்ல, வேறு வாய்ப்புகள் அளிக்காத வகையில் சர்வாதிகார தன்மையின் வெளிப்பாடும் தான்.

அதோடு, சிக்கலான டெலிகிராம் சேனல் வழி தகவல் தொடர்பை நாடியிருப்பதும் விமர்சனத்திற்கு உரியது.

முக்கியமாக இந்த தளத்தில், எங்களைப்பற்றி’ பகுதியும் இல்லை. ஒரு அதிகாரப்பூர்வ தளத்தின் நம்பகத்தன்மையை உணர்த்தும் அம்சங்களில் முக்கியமானது தளத்தை நடத்துவது யார் என தெரிவிக்கும் எங்களைப்பற்றி பகுதி. தவெக தளத்தில் இந்த தளம் இல்லை. இந்த தளம் தவெகவின் அதிகாரப்பூர்வ தளம் என்பதையும் உறுதி செய்து கொள்ள வழியில்லை. தொடர்பு கொள்வதற்கான மாற்று வழிகளும் இல்லை.

எங்களைப்பற்றி பகுதியே இல்லாத போது, கட்சியின் கொள்கை, நிர்வாகிகள், நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை எல்லாம் எதிர்பார்ப்பது வீண். தவெக தள நிர்வாகிகள் இது பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை.

ஒரு அரசியல் கட்சியின் இணையதளம் எப்படி அமையக்கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாக தவெக தளம் அமைந்துள்ளது.

இந்த குறைகளை சரி செய்து, முழு வீச்சிலான அரசியல் கட்சி தளமாக மாற்றி அமைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

இந்த குறைகள் தவிர, உண்மையில் தள அமைப்பில் அருமையான வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கத்தோன்றுகிறது. கட்சி மாநாட்டின் போது, இந்த தளத்தில் இருந்து அதிகாரப்பூர்வ நேரலை செய்திருக்கலாம். மாநாட்டிற்கு பின், முக்கிய செய்திகளை, தகவல்களை இதில் வெளியிட்டிருக்கலாம். எல்லாவற்றையும் விட பங்கேற்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பகிர வழி செய்திருக்கலாம். இவை எதுவும் இல்லாமல் வெறுமையாக வரவேறுகிறது தவெக இணையதளம்.

-(முழுக்க முழுக்க தளத்தின் முகப்பு பக்க தன்மையை மட்டுமே வைத்து இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துகள் அல்லது விளக்கம் வரவேற்கப்படுகிறது.)

சைபர்சிம்மன்

Tags :
VijayWebsiteஇணையம்த வெ கவிஜய்
Advertisement
Next Article