மழை வரும் முன்னே செய்ய வேண்டியது இதுதான்!
மழை வெள்ளத்துக்கும் எங்கள் வீட்டுக்கும் நாற்பதாண்டு கால நட்பு. தார்சாலைகள் உயரமாகி வீட்டு வாசலின் 3 படிகளை விழுங்கிவிட்டதால், சின்ன மழைக்கே ஹலோ கூட சொல்லாமல் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடும். இந்த வருடம் முன்னெச்சரிக்கையாக சுற்றுச்சுவரை உயரப்படுத்தினோம். தெருவில் ஓடிய மழை நீர் உள்ளே பாயவில்லை. ஆனால் மொசைக் தரையிலிருந்து ஊற்றெடுத்து வீடு முழுக்க நீர். கடும் ஜுரத்துடன் தற்காலிக கொத்தனாராக மாறி, ஊற்றெடுத்த பகுதிகளை அடைத்தேன். ஆனால் கிச்சனில் அடைத்தால் ஹாலில் தண்ணீர் கொப்பளித்தது. ஹாலில் அடைத்தால் வராண்டா... ஜுரம் அதிகமாகி கொத்தனார் வேலையை கைவிட்டபோது, நல்ல வேளையாக மழை நின்று விடிந்துவிட்டது. ஆனால் வீடு முழுக்க தரையில் இன்னமும் நீர்க்கொப்பளிப்பு.
மழைக்கால பிரச்சனைகள் எல்லோருக்கும் பொதுவானதல்ல என்பதை வலியுறுத்தவே இதனைச் சொல்கிறேன். மேம்பாலத்தில் காருக்கு இடம்பிடித்தல், முதல் மாடிக்கு தப்புதல், முகாம்களில் தங்குதல் என ஆளாளுக்கு ஒரு தீர்வு. எனவே மெழுகுவர்த்தி, பிரட்பாக்கெட், சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் என்பதைத் தாண்டி வீட்டுக்கு வீடு மழைக்கால இடருக்கான முன்யோசனைகள் மாறுபடும் என்பதை நாம் உணரவேண்டும்.
மழைக்காலங்களில் அரசியல் அழுத்தங்களால் முதல்வர் உட்பட அரசு இயந்திரம் முழுக்க மழை நீரில் நின்று வீடியோ வெளியிடுகிறார்கள். உண்மையில் இந்த முனைப்பு மழைக்காலங்களுக்கு முன்புதான் தேவைப்படுகிறது. மாவட்டவாரியாக பொதுத் தீர்வும், ஒவ்வொரு தெருவுக்கும் ஏற்ற தனித்தனித் தீர்வும் தேவைப்படுகிறது. கவுன்சிலர்கள் அளவில், ஒவ்வொரு ஏரியாவாசிகளுடனும் கலந்தாலோசனை செய்து பிரச்சனைகளை கண்டறிந்தால், மைக்ரோலெவல் அளவில் பிரச்சனைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
மழை வந்தால் நீர் வரும், சற்று நேரமாவது தேங்கும். பூமி தன் சக்திக்கு ஏற்ப அதனை உள்வாங்கிக்கொள்ள சற்று நேரம் ஆகும், இந்த அடிப்படையை நாம் உணர வேண்டும். ஆனால் மழை வந்ததுமே ஐயைய்யோ என்று அஞ்சுவது, இயற்கையை விட்டு நாம் வெகுதூரம் விலகிவிட்டோம் என்பதையே உணர்த்துகிறது. கிழிந்த குடையுடன் ரிப்போர்டிங் செய்யும் பொறுப்பற்ற ஊடகங்கள் இந்த அச்சத்தை அதிகப்படுத்துகின்றன. எனவே மழைக்காலங்களில் இவர்களைத் தவிர்த்துவிட்டு நம் வீட்டுப் பிரச்சனை என்ன என்பதற்கு ஏற்ப அடுத்த மழைக்காலத்துக்குத் தயார் ஆவோம்.