நீரிழிவு நோய் அறிகுறிகள் இதோ!
இரவு உறக்கத்தில் வழக்கத்துக்கு மாறாக சிலமுறை சிறுநீர் கழிக்க எழுதல். பசி அதிகம் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே இருத்தல். அவ்வளவு சாப்பிட்டும் பசி அடங்காமல் இருத்தல்.டயட் எதிலும் இல்லாமலும் உடல் பயிற்சி எதுவும் செய்யாமலும் திடீரென்று எடை குறைய ஆரம்பிப்பது சிறுநீர் கழித்த இடத்தில் வாசனை வருவது. எறும்பு மொய்ப்பது...நுரை நுரையாக சிறுநீர் வெளியேறுவது ,பாதங்கள் இரண்டிலும் எரிச்சல்/ மதமதப்பு தோன்றுதல் ,பிறப்புறுப்பில் புண் அடிக்கடி தோன்றுவது ,ஆண்களுக்கு முன்தோல் வெடிப்பும் புண்ணும் பெண்களுக்கு பிறப்புறுப்பைச் சுற்றி அரிப்பும் புண்களும் தோன்றுவது - என மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றுமாயின் எந்த வயதினராயினும் சரி...!
உடனே தாமதிக்காமல் காலை வெறும் வயிற்றிலும் உணவு சாப்பிட்ட இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகும் ரத்த க்ளூகோஸ் அளவுகளை பரிசோதனை செய்யவும். கூடவே HbA1c எனும் மூன்று மாத ரத்த சராசரி சர்க்கரை அளவையும் பார்த்து விடுங்கள்.
காலை வெறும் வயிற்றில் க்ளூகோஸ் 100mg/dl க்கு மேல் 125க்குள் /உணவுக்குப்பின் 140mg/dl க்கு மேல் 200க்குள் இருந்தால் Hba1c 5.6 முதல் 6.5 இருந்தால் உடலில் அனா ஆவன்னா எழுதியிருப்பது டயாபடிஸ் என்றறிக. இதை Prediabetes உணவு , உடற்பயிற்சி உள்ளடக்கிய வாழ்வியல் மாற்றத்தை உடனே செய்ய வேண்டும்.
வெறும் வயிற்றில் 126mg/dl க்கு மேல் இருந்தால் இரண்டு மணி நேர சர்க்கரை 200mg/dl க்கு மேல் HbA1c 6.5 க்கு மேல் என்றால் நீரிழிவு நம் உடலில் தனது சுய சரிதையை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம் .உடனடி வாழ்வியல் மாற்றங்களுடன் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த மாத்திரை மருந்துகளும் தேவைப்படும் . கட்டாயம் மருத்துவ நிபுணரிடம் முறையான கண்காணிப்பும் அவசியம் . மூடநம்பிக்கைகள் கொண்டு வதந்திகளை நம்பிக் கொண்டிருந்தால் நன்மை நேராது.நீரிழிவு நோயர்கள் அனைவரையும் மாவுச்சத்தை குறைத்து உண்ணும் உணவு முறைக்கு அழைக்கிறேன் .
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை