ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்த, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, கவர்னரைச் சந்தித்து முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய உத்தரவிட்டார். பின்னர் அவர் பிர்சா முண்டா மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில், நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜேஎம்எம் எம்எல்ஏக்களின் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து முதல்வர் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்க ஹேமந்த் சோரான் ஆளுநரிடம் கோரினார்.
இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், ஹேமந்த் சோரன் இன்று மாலை ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சராக ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகியிருப்பது அம்மாநிலத்தில் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் என இந்தியா கூட்டணியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்