For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தென்னகத்தை முடக்கி மிதக்க வைத்தது கனமழை!

06:34 AM Dec 18, 2023 IST | admin
தென்னகத்தை முடக்கி மிதக்க வைத்தது கனமழை
Advertisement

மிக்ஜாம் புயலையொட்டி கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி பெய்த அதிகன மழையின் காரணமாக வட தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களை புரட்டிப் போட்ட துயரம் விலகும் முன்னர், நேற்று காலை முதல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் விடாது பெய்து வரும் பேய் மழையின் காரணமாக நான்கு மாவட்டங்களில் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதன் காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. பலமணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனி, டவுன் வ.உ.சி. தெரு,பாரதியார் தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் முடங்கின. நாகர்கோவில் மீனாட்சி கார்டன், வடசேரி புளியடி, பாரைக்கால் மடம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டனர். அஞ்சுகிராமம், செட்டிகுளம் பகுதிகளில் சாலைகள் ஆறுபோல காட்சியளித்தன. இதனால் அப்பகுதியிலும், திருவனந்தபுரம் சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. பழையாற்றில் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஊட்டுவாழ் மடம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடங்கியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

Advertisement

நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீர் காரணமாக வீட்டில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் ரப்பர் குழாய்கள் உதவியுடன் மீட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அங்கு மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதே போல் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால், குற்றாலம் அருவிகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து அபாய அளவை தாண்டியும் வெள்ளம் பாய்ந்தோடி வருவதால், அருவியின் அருகே சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் நீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால், மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய விமானங்கள், மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.

வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே நிலவி வரும் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

நேற்று மாலை வரை கடந்த பனிரெண்டு மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பத்து சென்டி மீட்டர் முதல் இருபது சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் வரும் அதிகன மழை இன்னமும் தீவிரமாக இன்று இரவு வரை அல்லது நாளை காலை வரை நீடிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு பிரதீப் ஜான் கூறியுள்ளது அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்த அதிகன மழையின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் சூழ்ந்த தண்ணீரில் மிதக்கும் மக்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க மாநிலப் பேரிடர் மேலாண்மை படை மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் விரைந்து சென்று கொண்டுள்ளனர்.4 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனாவும் ஆலோசனை நடத்திஉரிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

Tags :
Advertisement