வெப்ப அலை: ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்!
வெப்ப அலையால் கோடைக்காலங்களில் மக்கள் பாதிக்கப்படுவதால் மத்திய அரசு தனது பேரிடர் மேலாண்மை திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற பேரிடர்களை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. நடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதன்படி, 'மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் உள்ளிட்டவற்றை சேர்க்க இந்த குழு பரிந்துரைக்கிறது. பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிசெய்ய, வல்லுனர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து, பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவ வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையிலும், இந்திய வானிலை ஆய்வுத்துறை பல்வேறு பகுதிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ள நிலையிலும், நாடு முழுவதும் உள்ள தனது வலைப்பின்னல் நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வெப்ப அலை விழிப்புணர்வு குறித்த நிகழ்வு ஜாம் நகரை அடிப்படையாக கொண்ட ஆயுர்வேதம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் இன்று (2025 மார்ச் 20) நடத்தப்பட்டது. இங்குள்ள மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்பை தடுப்பது குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.
செய்யக்கூடியவை:
அதிக அளவில் தண்ணீர் அருந்துவது, இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அருந்துவது, நேரடியான சூரிய வெப்பத்தை தவிர்ப்பது, வெளியே செல்லும் போது குடை அல்லது அகண்ட விளிம்பைக் கொண்ட தொப்பிகளை பயன்படுத்துவது, தொளதொளப்பான பருத்தி ஆடைகளை அணிவது, எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்வது, தண்ணீரை குளிர்ச்சியாக்கும் வெட்டிவேர் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவது, அதிக நீர்சத்து கொண்ட வெள்ளரி போன்ற காய்கறிகள், தர்ப்பூசணி, திராட்சை, முலாம்பழம், போன்ற பழங்களை எடுத்துகொள்வது உள்ளிட்ட தகவல்கள் அவற்றில் இடம் பெற்றிருந்தன.
செய்யக்கூடாதவை:
வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பது, வெறுங்காலுடன் வெளியே செல்லாமல் இருப்பது, பகல் பொழுதில் மிகுதியான வெப்பம் உள்ள நேரத்தில் உணவு தயாரிப்பதை தவிர்ப்பது, அவசியம் ஏற்பட்டால் புகை போக்கியை பயன்படுத்துவது, தேநீர், காபி போன்ற சூடான பானங்களை தவிர்ப்பது போன்ற தகவல்கள் துண்டு பிரசுரங்களில் இடம் பெற்றிருந்தன.