தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி - திருநாவுக்கரசர்!.
காங்கிரஸ் தொகுதியான திருச்சியும், ஆரணியும் இந்த முறை மாற்றப்பட்டது. இதில் ஆரணி எம்.பி.யான விஷ்ணு பிரசாத்துக்கு கடலூரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கு எங்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த நிலையில் திருநாவுக்கரசர் ஆதங்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். முன்னதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சு.திருநாவுக்கரசருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காதது வருத்தமளிப்பதாகக் கூறினார். இதைவிடப் பெரிய பதவி சு.திருநாவுக்கரசருக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
அதே சமயம் விஜயதாரணியை தொடர்ந்து திருநாவுக்கரசர் பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியானது. அந்த தகவலை மறுத்திருந்த நிலையில், தற்போது உட்கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் திருநாவுக்கரசர் அதிருப்தியில் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து திருநாவுக்கரசர் அடுத்த அதிரடி முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த தேர்தலில் திருச்சியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித்தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.
288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அனைத்து பணிகளிலும் எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும், ஆட்படாமல், நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.
இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகச் செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.''இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
திருநாவுக்கரசர்!இதுவரை கடந்து பாதை
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பிறகு, 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சு.திருநாவுக்கரசர்.
1980, 1984 தேர்தல்களிலும் இதே தொகுதியில் வென்றார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது 1989-ல் இதே தொகுதியில் ஜெ. அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
அதிமுகவில் இருந்து 1991-ல் விலகியவர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து, அறந்தாங்கி தொகுதியில் குடை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
1996-ல் அதிமுக சார்பில் அறந்தாங்கியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்ற ஒரே தமிழக எம்எல்ஏ என்ற அவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
பின்னர், அதிமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.
1998 எம்.பி. தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1999 எம்.பி. தேர்தலில், புதுக்கோட்டையில் திமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்ற எம்ஜிஆர் அதிமுக சார்பில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஜெயித்தவுடன் எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். பாஜக வேட்பாளராக 2009-ல் ராமநாதபுரம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பா.ஜ.க.,வில் ம.பி., மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,ஆனார். பதவிக் காலம் முடிந்ததும் உடனே பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.
2014 எம்.பி.தேர்தலில் ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.