For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நாம் தவற விடும் ஆரோக்கிய உணவு!

06:55 AM Dec 29, 2024 IST | admin
நாம் தவற விடும் ஆரோக்கிய உணவு
Advertisement

பெரியவர்களுக்கு - குறிப்பாக 40, 50 மேல் - வர வேண்டிய பல வியாதிகள் இன்று 20 வயதுட்பட்ட இளைஞர்களுக்கு வருகிறது. அண்மையில் ஒரு மாணவி என்னிடம் தனக்கு fatty liver நோய் உள்ளது என்றார். என்னால் நம்ப முடியவில்லை. வயதானவர்கள், குண்டாக இருக்கிறவர்கள், குடிகாரர்கள், நீரிழிவு கொண்டவர்கள், அதிகமாக உடம்பில் கொழுப்பை ஏற்றி வைத்திருக்கிறவர்களுக்குத் தான் அது வரும் என நினைத்திருந்தேன். “எனக்கு சின்ன வயசிலிருந்தே இருக்குது சார்” என்று அடுத்தொரு குண்டைப் போட்டார். இன்னொரு மாணவரின் நிலைமை ரொம்ப பரிதாபம். அவருக்கு பெங்களூருக்கு வந்த பின்னர் ஏதோ ஒரு ஒவ்வாமை. இங்குள்ள மகரந்த துகள்கள் பலருக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தி மூச்சுத்திறணல் வரவழைக்கும். இவருக்கோ தோலில் கடுமையான அரிப்பு ஏற்படுத்தி விட்டது. உள்ளுக்குள் எதுவோ குடையும் உணர்வு நாள் முழுக்க இருக்கும். நிறைய ஸ்டிராயிட்ஸை மாத்திரைகளாக எடுத்துக்கொண்டே அவரால் ஒரு நாளை கடத்த முடியும். இரவு தூங்கவே முடியாது. பகல் முழுக்க உறக்க சடவு. தோல் சிவந்து பரிதாபமாக இருக்கும். அவ்வளவு நிம்மதியற்ற ஒரு பையனை நான் பார்த்ததில்லை. இன்னொரு மாணவரின் கை முழுக்க வீறல் வீறலாக இருந்தது. “என்னடா இது?” “சார், நானே சில நேரம் என்னை நகங்களால் கிழித்துக் கொள்வேன்.” அவருக்கு புது ஊருக்கு வந்து தனியாக வாழ ஆரம்பித்ததில் இருந்து மனப்பிரச்சினைகள் அதிகமாகிவிட்டன.

Advertisement

என்னுடைய நம்பிக்கை உணவு மாறியதாலே அவருடைய மனநிலையில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்பது. ஏனென்றால் ஊரில் நாம் உண்ணும் உணவானது நமது பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை காப்பாற்றுகின்றன. இவையே நமது மூளையை நிர்வகிக்கின்றன. உடலின் ஆரோக்கியத்தை காப்பாற்றுகின்றன. பல மாநிலங்கள் கடந்து புது ஊருக்கு பெயர்ந்து உணவும் மாறும் போது முதலில் இந்த நல்ல பாக்டீரியக்களே காவு கொடுக்கப்பட்டு தேவையில்லாத பாக்டீரியாக்கள் பெருங்குடலில் பெருகுகின்றன. உடலின், மனதின் சமநிலை குலைகிறது. பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது உடல் நம்மிடம் காட்டும் எதிர்ப்பு என நினைக்கிறேன். நாம் தான் அதை தவறாகப் புரிந்து கொண்டு மருத்துவர்களிடம் போய் நிற்கிறோம். மருத்துவர்களுக்குப் பின்னால் மருந்துக் கம்பெனிகளின் மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் நிற்கிறார்கள். கொசு கடித்தது என காட்டி பாருங்கள், ரெண்டாயிரம் ரூபாய்க்கு மருந்தும் களிம்பும் எழுதித் தருவார்கள்.

Advertisement

நான் கல்லூரியில் படித்த வேளையில் ஒரு மாணவர் கூட நலமற்று போய் லீவெடுத்து நான் பார்த்ததில்லை. நானே என் பதின் வயது வரை நான்கைந்து முறைகள் தான் மருத்துவரை பார்த்திருக்கிறேன். என் அப்பா தான் சாகும் வரை மாத்திரையே சாப்பிடவில்லை. இன்று இளைஞர்களுக்கு வாரம் ஒருமுறை ஜுரம் வந்து விடுகிறது. நோயெதிர்ப்பு சக்தி மிக மிக குறைவாக இருக்கிறது. இத்தனைக்கும் நல்ல வசதியான வீட்டுப் பிள்ளைகள். நான் முன்பு இவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் இனிப்புகளும் துரித உணவுகளுமே பிரச்சினை என நினைத்து வந்தேன். ஆனால் இப்போது அதுவல்ல முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. ஒல்லியாக இருப்பவர்களே அதிக வியாதிகளின் நடமாடும் ஆய்வகமாக இருக்கிறார்கள். வீட்டில் இருந்து வருகிறவர்களை விட விடுதியில் தங்கி சாப்பிடும் மாணவர்களே அதிக பலவீனமாக இருக்கிறார்கள். தினமும் வெளியே ஓட்டலில் சாப்பிடுகிறவர்கள் முழுநோயாளிகள் ஆகிவிடுகிறார்கள். எதை சாப்பிடுகிறோம் என்பதல்ல என்ன சாப்பிடவில்லை என்பதே பிரச்சினையின் துவக்கம்.

மூன்று உணவுகள் நமக்கு நோய் அண்டாதிருக்க முக்கியம்:

முதலாவதாக சொல்வதானால் பழைய சோறு, தயிர் போன்ற புரோ பயோட்டிக் உணவுகள். இவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

ஆம் .,பல நூற்றாண்டுகளாக, பழைய சோறு என்கிற நீராகாரம் இந்திய உணவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இதில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளது, இது ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது மற்றும் மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல் இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளை குணப்படுத்துகிறது. வெங்காயம் மற்றும் தயிர் கலந்த நீராகாரம் ப்ரீபயாடிக்குகளுக்கான ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். 12 மணி நேரம் புளிக்கவைக்கப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து சமைத்த அரிசியை விட 21 மடங்கு அதிகமாக இருக்கிறது.

இரண்டாவது ,காய்கறிகள். தினமும் இரண்டு மூன்று பெரிய கிண்ணங்களில் சாப்பிட வேண்டும். ஆம்.. மாவுச்சத்து, வைட்டமின் ஆகியவற்றைத் தாண்டி காய்கறிகள் முக்கியமாகத் தருவது, நார்ச்சத்து. இந்தக் குறிப்பிட்ட சத்து குறித்து மருத்துவ உலகம் பேசத்தொடங்கியது 1970-களில் தான். ‘Fiber Hypothesis' என்ற பெயரில் இது குறித்த ஓர் ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. நார்ச்சத்தை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் முதலியவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என அதில் தெரியவந்தது. அதன்பிறகே, நார்ச்சத்துமீதான கவனம் அதிகமானது. மலச்சிக்கலைத் தவிர்க்க இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே நார்ச்சத்து பற்றி நம் மக்களின் பொதுவான எண்ணமாக இருந்தது. அதையெல்லாம் தாண்டி இச்சத்திற்குப் பல்வேறு பயன்கள் உண்டு. காய்கறிகள் மற்றும் கீரைகளே நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள். சாதாரண அரிசியை விடுத்து, நார்ச்சத்து அதிகம் உண்டு என்பதற்காகவே சிவப்பு, கறுப்பு கவுனி அரிசிகளை மக்கள் சாப்பிடுகிறார்கள். ஆனால், பாரம்பரிய அரிசி வகைகளை முழுத்தட்டு அளவு சாப்பிட்டாலும் கிடைக்கும் நார்ச்சத்தின் அளவு வெறும் 2-3 கிராம்தான். எந்த ஒரு ஸ்பெஷல் தானியத்திற்கும் இதே நிலைதான். ஆனால், இரண்டு முழு கேரட் அல்லது 100 கிராம் முட்டைக்கோஸ் அல்லது காலிஃப்ளவரிலேயே 2.5 கிராம் நார்ச்சத்து கிடைத்துவிடும். அதேபோல 100 கிராம் அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய் முதலியவற்றில் 3-4 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.

மூன்றாவதாக நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் பாரம்பரியமாக ஊரில் உண்ட உணவுகளில் நமது நல்ல பாக்டீரியாவுக்கு பிடித்த உணவு எதுவோ அது. அதை நாமே பரிசோதனை முறையில் கண்டுபிடிக்க வேண்டும். கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் தமிழர்களின் உணவு முறையே சற்று மாறுபட்டது. அதற்கு காரணம், ‘உணவே மருந்து… மருந்தே உணவு’ எனும் முறை தான். அது மட்டுமின்றி அறுசுவை உணவுகளை ஒரே நேரத்தில் தமிழர்கள் உண்ணும் முறையை பின்பற்றுகின்றனர். அறுசுவை உணவாக இருப்பினும் மருத்துவ குணம் உள்ளதாகத்தான் தமிழர்கள் உண்ணும் உணவே இருந்தது.உணவே மருந்து என்ற ஒப்பற்ற பழக்கம் நம் உணவு பழக்கத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதற்கு நம் சங்ககால இலக்கியங்களே சான்று. இதை பற்றி எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை, போன்ற நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள சித்தர்கள் உணவு முறை பற்றி குறிப்பிடுகையில், “எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும். எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உனக்கு உணவாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.

பண்டைய தமிழர்கள், அவர்கள் வாழ்ந்த நிலத்திற்கு ஏற்ப உணவு முறைகள் அமைந்துள்ளன.

குறிஞ்சி: கிழங்கு வகைகள், மலையில் விளையும் காய்கறிகள், சில இறைச்சி வகைகள், வரகு, சாமை, திணை, கேழ்வரகு போன்றவையும் உண்டுள்ளனர்.

முல்லை: காட்டு விலங்கின் இறைச்சிகள், காட்டுக் காய்கறிகள், சில நெல் வகைகள், மாம்பழம், வாழைப்பழம் போன்றவை உண்டு வந்துள்ளனர்.

மருதம்: நெல் வகைகள், மரக்கறி வகைகள், ஊறுகாய், பயறு வகைகள் போன்றவை உண்டு வந்துள்ளனர்.

நெய்தல்: நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள், நண்டுக் கறி, மீன் வகைகள் போன்றவை உண்டு வந்துள்ளனர்.

இதில், கடுகு இட்டு காய்கறிகளை தாளிப்பது, பசுவெண்ணையில் பொரிப்பது போன்றவை பண்டைய காலத்திலேயே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. தரையில் சம்மணம் போட்டு வரிசையாக அமர்ந்து உண்ணுவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குடும்பத்தில் முதலில் பெரியவர்கள், வயதானவர்கள், குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி விட்டு அடுத்து இளைய தலைமுறை சிறுவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு, கடைசியாக வீட்டு பெண்கள் உணவு உண்கின்றனர். முன்பு எல்லோர் வீட்டிலும் வாழை மரங்கள் இருந்தன. அவ்வாறு வாழையிலை உணவு உண்ண பயன்படுத்த துவங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த வாழையிலையில் சூடான உணவு போட்டு சாப்பிடுகையில், குளோரோஃபில் (Chlorophyll) உணவுடன் கலந்து, உடலுக்கு ஊட்டச்சத்தை தருகிறது.இது பின்னாளில் தான் கண்டறியப்பட்டது. இந்நாட்களிலும், விருந்துகளிலும் விசேஷங்கள் போன்றவற்றுக்கும் இலையில் போட்டு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம்.

ஓட்டல் உணவுகளில் இந்த மூன்றும் இருக்காது என்பதை கவனியுங்கள். அவை வெறும் குப்பை. இன்னொரு பக்கம் டயட்டீஷியன்கள் “இதை சாப்பிடாதே, அதை சாப்பிடாதே, தலைகுப்புற நின்றால் எடையை குறைக்கலாம்” என குழப்பி அடிக்கிறார்கள். எந்த உடற்பயிற்சியும் டயட் உணவும் இன்றி ஊரில் தொப்பையுடன் இருந்த பல மனிதர்கள் எந்த வியாதியும் இன்றி ஆரோக்கியமாக 90-100 வயது வரை வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்றோ 60 கிலோ எடை கொண்ட சிக்கென்ற பல யுவதிகள் வாரத்திற்கு மூன்று முறை ஜுரம், fatty liver என நோயாளிகளாக இருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருக்கும் யுவன்கள் பை நிறைய மாத்திரைகளோட திரிகிறார்கள். ஒல்லியாக இருந்தால் போதும் என நினைக்கிற, ஆரோக்கியமாக எப்படி சாப்பிடுவது, நோயின்றி எப்படி வாழ்வது எனத் தெரியாத முழு பைத்தியங்களாக நவீன சந்தை நம்மை மாற்றிவிட்டது. எந்த அறிவியலும் தெரியாமலே நம் முன்னோர்கள் ஒழுங்காக சாப்பிட்டு நன்றாக இருந்தார்கள். இவ்வளவு படித்தும் நாம் வேடிக்கை மனிதர்களாக இருக்கிறோம். இந்த நவீன வாழ்க்கை ஒரு சாபக்கேடு!

அபிலாஷ் சந்திரன்

Tags :
Advertisement