இந்திய அரசியல் பிரளயத்தை ஏற்படுத்திய பி.வி. நரசிம்மராவ்!
வசீகரமிக்க தோற்றமில்லை, நேரு குடும்ப வாரிசில்லை. இக்கட்டான சூழ்நிலையில் சிறுபான்மை அரசாங்கத்தை ஐந்து ஆண்டுகள் நடத்துவதென்பது சாதாரண விஷயமல்ல. சிரிக்கத் தெரியாதவர் என்று பெயர் எடுத்தாலும், தெலுங்கு, மராத்தி, கன்னடம், உருது, இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் புலமை பெற்றவர். 17 மொழிகளில் பேச வல்லவர். தீவிர படிப்பாளி.புனைபெயரில் கட்டுரைகள் பல எழுதியவர். இன்சைடர் எனும் நாவலை 1998-ல் வெளியிட்டார். பொருளாதார சீர்திருத்தம் குறித்து பேசும்போது நிச்சயம் பாராட்டவோ, விமர்சிக்கவோ இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நினைவுகூரப்படுபவர் நரசிம்மராவ். இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில் பங்கேற்று, ஆட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிப் பணிகளில் அவருடன் மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமரானவர் (1991-1996). அது மட்டுமின்றி 1992 ஜுலை 17, டிசம்பர் 21 மற்றும்1993 ஜூலை 26 என மூன்று முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் நரசிம்ம ராவ்.
1921 ஜூன் 28-ல் வாரங்கல் மாவட்டத்தில் லகனேபல்லியில் இதே ஜூன் 28(1921) பிறந்தார். மெட்ரிக் தேர்வில் 1937-ல் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1938-ல் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.புனேவில் சட்டப்படிப்பும் முடித்தார். பின்னாளில் முதல்வரான பர்குல ராமகிருஷ்ணராவிடம் ஜூனியர் வழக்கறிஞராகச் சேர்ந்து பின் 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார்.
முதல் மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் உறுப்பினரிடம் தோல்வி கண்டாலும் 1957-ல் மந்தானி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1967-ல் சுகாதாரத்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சராக ஆந்திராவில் சிறப்பாகச் செயலாற்றினார். 1971-ல் ஆந்திர முதல்வரானார் ராவ். சோசலிஸ்டாக நிலச்சீர்திருத்தம் செய்தது, தெலுங்கானா பிரச்னை என சிறப்பாகப் பணிபுரிந்தாலும் சில காரணங்களால் 1973-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஏற்ற இறக்கத்துடன் அரசியல் பயணம் தொடர்ந்தாலும், காங்கிரஸ் மீதான விசுவாசமே அவருக்கு பெரிய பொறுப்பைப் பெற்றுத் தந்தது.
1977-ல் ஜனதா அலையும் மீறி ஹனம்கொண்டா மக்களவைத் தேர்தலில் வென்றார். அடுத்து 1980-லும் வென்று இந்திராவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சரானார். 1986 புதிய கல்விக் கொள்கையில் இவர் பரிந்துரைத்த பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. எந்த கோஷ்டியிலும் சேராமல் மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்றார்.
புதிய பொருளாதார சீர்திருத்தம்
நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்த காலகட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். பின் யாரும் எதிர்பாராத வகையில் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கினார். வர்த்தகத்தை ப.சிதம்பரத்துக்கு வழங்கியதுடன், தொழில்துறையை தானே நிர்வகித்தார். அமர்நாத் வர்மா, மான்டெக்சிங் அலுவாலியா போன்றோரை அருகில் வைத்துக்கொண்டார்.``அறிவினம் சேர்" எனும் வாக்கிற்கேற்ப தன்னைச் சுற்றி திறமையானவர்களை வைத்துக்கொண்டது, அவரின் சிறந்த மதிநுட்பத்தைக் காட்டியது.
"நோய் தீவிரமாக இருந்தால் சிகிச்சையும் தீவிரமாக இருந்தாக வேண்டியிருக்கிறது" என நரசிம்ம ராவின் வார்த்தைக்கு வலு சேர்க்கும் விதத்தில் நிதியமைச்சர் மன்மோகன் சிங், ஜூலை 24-ல் தன் பட்ஜெட் உரையில் வர்த்தக தொழில்துறை தாராளமயமாக்கல், போட்டிப் பொருளாதாரத்துக்கு வாய்ப்பளித்து, சந்தைப் பொருளாதாரம் முறை பின்பற்றப்பட்டது.
34 தொழில் துறையில் அந்நிய முதலீடு 40 முதல் 51 சதவிகிதமாக மாற்றம், மானியக்குறைப்பு, தனியார் தொழில் தடை நீக்கம், தனியார் முதலீடு ஊக்குவிப்பு எனப் புதிய பொருளாதாரக் கதவு திறந்தது. 49 எம்.பி-க்களிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்."ஐ.எம்.எஃப்பிடம் கடன் வாங்குவது, தாகத்துக்கு விஷத்தை குடிப்பது போல’’ என்றார் ஈ.எம்.எஸ். நம்பூத்ரிபாட்.
ஆனால் பணவீக்கம் குறைந்தது,10 வங்கிகள் தனியார்மயமாக்கம், ஏற்றுமதி அதிகரித்து, அந்நியச் செலாவணி அதிகரிப்பு, சர்வதேச நாட்டுடன் போட்டி, தொழில்நுட்பப் பெருக்கம் போன்றவை சாதனையாக இருந்தாலும் வேலையின்மை, வறுமை, விலைவாசி, இருமுறை ரூபாய் மதிப்புக்குறைப்பு என நோயாளி காப்பாற்றப்பட்டு நோய் நீடித்த கதையானது தனிக் கதை.
அத்துடன் 1992 டிசம்பர் 6-ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பும், மறுநாள் நடைபெற்ற இனக்கலவரமும் நரசிம்ம ராவின் ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தின.
அதே சமயம் பஞ்சாயத்து புனரமைப்பு நரசிம்ம ராவ் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று. 73-வது சட்டத்திருத்தத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் முறைக்கு புத்துயிர் ஊட்டினார்.1993 ஏப்ரல் 24-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அத்துடன் தனியார் தொலைக்காட்சி, தனியார் விமான சேவை மற்றும் ராஜீவ் காந்தியின் புதிய தொலைத்தொடர்பு கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்தவரிவர்.
நிலவளம் ரெங்கராஜன்