பட்டாசுகளை ஆன்லைனில் புக் பண்ணி இருக்கீங்க்களா?; இதோ சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியில் 1,000த்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன; 2,500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.தமிழகம் முழுதும் தற்காலிக நிரந்தர உரிமம் பெற்ற பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் களைகட்டி வருகிறது.அந்தந்த ஊரில் பட்டாசு விற்கப்பட்டாலும் சிவகாசியில் வாங்கினால் விலை குறைவு என, நேரடியாக வாங்குவதற்கு பலர் விரும்புகின்றனர்.இதற்காக ஒரு சிலர் ஆன்லைன் வாயிலாக, பட்டாசுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். பட்டாசு உரிமையாளர்கள், வியாபாரிகள் யாரும் ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்வதில்லை.
ஆனால், ஒரு சில புரோக்கர்கள் சிறிய அலுவலகம் அமைத்து, ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனை செய்கின்றனர். இதனால் கடைகளில் பட்டாசு வியாபாரம் பாதிக்கப்படுகிறது என வியாபாரிகள் குமுறுகின்றனர்.புரோக்கர்களில் சிலர் ஆன்லைன் வாயிலாக பணம் பெற்று வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு அனுப்பாமல் மோசடி செய்கின்றனர்.இதனால், சிவகாசி மீது வெளி மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையும் குறைந்து விடுகிறது. எனவே ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்
இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்ஸ்டாகிராம், யூடியூர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை எமாற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகும்.
இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் பட்டாசுகள் அல்லது பிற பண்டிகை பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க தள்ளுபடியை வழங்குகின்றன. இது ஆன்லைனில் பண்டிகை சலுகைகளை தேடுபவர்களை அதிகம்ஈர்க்கிறது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் தேசிய சைபர்கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் (wwwcybercrime.gov.in) இந்த பட்டாசு விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தீபாவளி காலத்தில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடிகள் அதிகரித்திருப்பதாக தமிழ்நாட்டின் சைபர்கிரைம் பிரிவு போலீசார் எச்சரிக்கின்றனர்.
மோசடி எவ்வாறு செயல்படுகிறது
இந்த மோசடி கும்பல், பண்டிகைக் கால ஷாப்பிங்கை குறிவைத்து, தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாகக் கவர்ச்சிகரமான லாபகரமாகத் தோன்றும் விளம்பரங்களை வடிவமைக்கின்றனர். மக்கள் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது கைப்பேசி அழைப்பு மூலமாகவோ இவர்களைத் தொடர்புகொள்கிறார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளும் பொழுது (www.kannancrackers.in, www.sunrisecrackers.com) போன்ற போலி இணையதளங்களில் பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர்.இந்த இணையத்தளங்கள் வெளிதோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும் இவை பணத்தைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும். இm பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்புபட்டியல்கள் விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களைக் காலாபிக்கும். பணம் செலுத்தும் பொழுது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்துகாண்பிக்கப்படும். ஆனால் பணம் செலுத்தியவுடன் ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை.
இவ்வாறான தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகிறார்கள். மேலும், இந்த வலைதளங்களிலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை பறிகொடுக்க நேரிடுறது. கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட நிதி தகவல்களைப் பகிர்வதன் மூலம் அவர்களது சுயவிவரங்களை மோசடிகாரர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்த வழிவகுக்கிறது. குறிப்பாக பண்டிகைக்காலங்களில் இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகும் போது பொது மக்களுக்கு ஏற்படும் மன ளைச்சல் அதிகமாகவே இருக்கிறது.
சைபர் பாதுகாப்புக்கான ஆலோசனை
1. பணம் செலுத்தும் முன் ஆன்லைன் விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து. அவர்களிடம் முறையான முகவரிகள் மற்றும் தகவல் தொடர்பு இருப்பதை உறுதிசெய்யவும்.
2. நம்பத்தகாத ஒப்பந்தங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடக விளம்பரங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
3. வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள் மற்றும் ‘வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள்” குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இவை பெரும்பாலும் மோசடிகளைக் குறிக்கின்றன.
4. தள்ளுபடிகள் உண்மையானவை என்பதை உறுதிசெய்ய, நன்கு அறியப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் இணையதளங்களில் விலைகளைச் சரிபார்க்கவும்.
5. நன்கு அறியப்பட்ட பிராண்டுகள், அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது பிரபலமான இகாமர்ஸ் தளங்களில் இருந்து வாங்குவதை விரும்புங்கள்
6. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது யூடியூப் போன்ற தளங்களில் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களைப் புகாரளிப்பதன் மூலம் மற்றவர்கள் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.
7. பாதுகாப்பற்ற தளங்களில் அல்லது WhatsApp வழியாக தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
புகார் அளிக்க
நீங்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யவும்.