"வாழ்த்தி ஆசிர்வதிக்க வேண்டும்"- அர்ஜூன் நெகிழ்ச்சி!
ஆக்ஷன் கிங் என்று பேர் எடுத்த நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10 அன்று திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஜோடியின் ரிசப்ஷன் நடந்து முடிந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து புதுமணத் தம்பதி வாழ்த்துகளை பெற்றது. அப்போது ஐஸ்வர்யா- உமாபதியின் காதல் கதை குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் அர்ஜூன், பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், "உமாபதி பல திறமைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறார். இப்போது படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். என்னுடைய மருமகனாக எனது குடும்பத்துக்கு அவரை வரவேற்கிறேன். எனது மகளைப் பற்றி எப்போதுமே பெருமையாக நினைப்பேன். எனது இரண்டாவது மகள் ஒருநாள் என்னிடம் வந்து ஐஷூ ஏதோ என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார். காதல் விஷயம் என்று தெரிந்து கொண்டேன். ஆனால், யார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். உமாபதி என்று ஐஸ்வர்யா சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு முன்பு சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்தே உமாபதியை எனக்குப் பிடிக்கும். அதனால், நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். எனது மனைவியும் சரி என்றார்.
இதற்கு முன்பு நானும் ராமையா சாரும் நிறைய படங்கள் நடித்திருப்பதால் அவரைப் பற்றியும் எனக்கு தெரியும். நல்ல குடும்பத்திற்கு எனது மகள் மருமகளா சென்றது பெருமையான தருணம். எனது மகள் குழந்தையாக பார்த்த தருணம் நேற்று நடந்தது போல இருந்தது. ஆனால், இப்போது பெரிய பிள்ளையாகி விட்டது எமோஷனலாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு ஐஷூ நடிப்பார்களா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கை பெரிது. அதில் தொழில் சிறியது. எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவை ஐஷூதான் எடுப்பார். எங்கள் குழந்தைகளையும் நீங்கள்தான் வாழ்த்தி ஆசிர்வதிக்க வேண்டும்" என்றார்.
அடுத்து பேசிய நடிகர் உமாபதி, " அப்பாவையும் மாமாவையும் எப்படி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றீர்களோ அதே போல எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். கலக்குவோம்" என்றார். பின்னர் பேசிய நடிகை ஐஸ்வர்யா, "அப்பா சொன்னது மாதிரி, இப்படியான மேடையில் நிற்பது புதிதாக உள்ளது. நீங்கள் நான் குழந்தையாக இருக்கும்போதிருந்தே எங்களுக்குத் தேவை. எனக்கு உமாபதி குடும்பம் என் குடும்பம் போல எல்லா சுதந்திரமும் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்", என்றார்.
நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “ஐஸ்வர்யா எனக்கு இன்னொரு மகள். குழந்தை பிறந்து வளரும் அதன் நிம்மதி என்பது ஒவ்வொரு விஷயத்தைப் பொறுத்து மாறும். இப்போது எங்கள் மருமகள் அந்த நிம்மதியையும் சந்தோஷத்தையும் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். காலம் முழுவதும் அது நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.