முழுமுதற்கடவுளாம் விநாயகர் சதுர்த்தி!
நம் இந்து மதத்தில் எல்லா தெய்வங்களுக்கும் விழாக்கள் உண்டு. பூஜை உண்டு. ஆனால், எந்த தெய்வத்தின் பூஜையாக இருந்தாலும் முதல் பூஜையாக ஒருவருக்கு உண்டு என்றால் அவர்தான் விநாயகர். வைஷ்ணவத்தில் மட்டும் விதிவிலக்கு. அவர்களுக்கும் பிரதான பூஜைக்கு முன்னால் முதல் பூஜை உண்டு என்றாலும் அது விஷ்வக்ஸேனர் ஆராதனம். ஆனால் மற்ற சம்பிரதாயத்தினர் முதல் பூஜையாக விநாயகர் பூஜையை செய்து விட்டுத் தான் பிரதான பூஜையைச் செய்வார்கள். காரணம், பிரதான பூஜை எதற்காகச் செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறவும் பிரதான பூஜை எந்த விக்னங்களும் இல்லாமல் நிறைவேறவும், விநாயகர் அருள் அவசியம் அல்லவா. எனவே விநாயகருக்கு முதல் பூஜை.
1. நவகிரகங்களும் விநாயகரும்
‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். நாயகன் என்றால் தலைவன் விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோயில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம:’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும். விநாயகரின் உடம்பில் நவகிரகங்களும் அடங்கியுள்ளன. விநாயகரின் தலையில் குரு பகவானும், நெற்றியில் சூரியன், வலது மேல் கையில் சனியும், இடது மேல் கையில் ராகு, வலது கீழ் கையில் புதன் அமர்ந்துள்ளனர். நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், இடது தொடையில் கேது என நவகிரகங்கள் வீற்றிருக்கின்றனர். ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும்.
2. விநாயகர் சதுர்த்தி
திதிகளிலே சதுர்த்தி திதியும், மாதங்களிலே சிரவணமாதமும் (ஆவணி மாதம்) விநாயகருக்கு ஏற்றது. ஆவணி மாதம் வளர்பிறையில் வருகின்ற நான்காவது திதியான சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அது இந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, ஆவணி மாதம் 22ம் தேதி, ஸ்திரவாரமான சனிக் கிழமை அன்று வருகிறது. அன்று காலை செவ்வாய்க்குரிய சித்திரை நட்சத்திரம். பிறகு ராகுவுக்குரிய சுவாதி. செவ்வாய்க்கு கிரக அந்தஸ்து கொடுத்தவர் விநாயகர் என்று ஒரு வரலாறு உண்டு. அதைப் போலவே இடுப்பில் நாகாபரணம் அணிந்த விநாயகரை வழிபட்டால், ராகு கேதுவால் வரும் தோஷம் நீங்கும். சதுர்த்தி செப்டம்பர் 6,2024 வெள்ளிக் கிழமை அன்று பிற்பகல் 03:01 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 7ஆம் தேதி சனிக் கிழமை மாலை 05:37 மணிக்கு முடிவடையும். விநாயகர் பூஜை நடத்த மங்களகரமான காலம், 7ம் தேதி காலை 11:03 முதல் மதியம் 01:34 வரை.
3. வெற்றியைத் தருகின்ற தலைவன்
விநாயகர் என்றால் வெற்றியைத் தருகின்ற தலைவன் என்று பொருள். கணங்களுக்கு நாதன், தலைவன் என்பதால் கணாதிபன் என்றும் கணநாதன் என்றும் அவருக்கு பெயர். வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு எளிமையான பெயர் பிள்ளையார். நாம் அவருக்கு பிள்ளையாக இருக்கின்றோம். அவரையும் நம் பிள்ளையாக பாவித்து மிகவும் குதூகலத்தோடு, ஒரு குழந்தையின் மனநிலையோடு, சதுர்த்தியைக் கொண்டாடுகின்றோம். பொதுவாகவே சதுர்த்தி என்பது சங்கடங்களை நீக்குவது. எந்தச் செயலும் விரைவாக நடைபெற வேண்டும் என்று சொன்னால், அது இடையூறுகள் இல்லாமல் இருக்க வேண்டும். இடையூறை நீக்குகின்றவர்தான் பிள்ளையார். விக்கினங்களை நீக்குகின்ற ஈஸ்வரன் என்பதால் அவருக்கு விக்னேஸ்வரன் என்றும் பெயர்.
4. எந்தப் பிள்ளையாரைப் பிடிப்பது படைப்பது?
யோக சாஸ்திரத்திலும், மூலாதாரக் கனலை மூட்டி தியானத்தின் உச்ச நிலையை அடையச் செய்பவர் பிள்ளையார். அப்படிப்பட்ட பிள்ளையாரை, பிள்ளையார் சதுர்த்தி அன்று சிலைவடிவில் ஆவாகனம் செய்து, வீட்டிலே அவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, மகிழ்ச்சியோடு கொண்டாடி, ஓரிரண்டு நாட்கள் நம்முடைய வீட்டிலே வைத்திருந்து, மூன்றாம் நாளோ, ஐந்தாம் நாளோ, புனர் பூஜை செய்து அவரை நீரில் கரைத்து விசர்ஜனம் செய்ய வேண்டும். எந்தப் பொருளிலும் பிள்ளையார் உருவம் செய்து படைக்கலாம். கரைப்பதற்கு எளிது என்பதால் களிமண் சிறப்பு. செவ்வாய்க்கு உரியவர் பிள்ளையார். செவ்வாய் பூமியைக் குறிக்கும். எனவே, களிமண்ணால் செய்த பிள்ளையாரைப் பிடிப்பது சிறந்தது. இந்த முறையில்லாமல், சிலர் பரம்பரையாக படைக்கக்கூடிய சிலையையோ, விக்ரகத்தையோ, வைத்திருப்பார்கள். அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து படைப்பார்கள். அதுவும் சரியான வழிமுறைதான்.
5. பிள்ளையாருக்கு நிவேதனங்கள்
பிள்ளையாருக்கு என்னென்ன நிவேதனங்கள் படைக்க வேண்டும் என்பது முக்கியம். எத்தனை நிவேதனங்கள் படைத்தாலும் அன்று மோதகம் எனப்படுகின்ற கொழுக் கட்டையைக் கட்டாயம் படைக்க வேண்டும். இது தவிர என்ன படைக்க வேண்டும் என்பதை முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அவ்வையார் ‘‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்’’ என்று பால், தேன், வெல்லப்பாகு, பருப்பு, இவைகளைக் கலந்து தருவதாக சொல்கிறார். இந்தக் கலவையானது மோதகம் என்று தெரிகிறது. அதைப் போலவே அருணகிரிநாதரும் தம்முடைய திருப்புகழ் பாடலில் விநாயகருக்கு படைக்க வேண்டியவை பட்டியல் இடுகின்றார். ‘‘கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி’’ என்ற பாடலில், அவருக்கு வைக்க வேண்டிய அப்பம், அவல், பொரிகடலை, கனி வகைகள் என்று பட்டியலிடுகிறார்.
6. கொழுக்கட்டை கதை
ஞானபாலி என்று ஒரு ராஜா இருந்தான். அவன் முழுமுதற் கடவுளான விநாயகரின் தீவிர பக்தன். நாட்டை நல்லமுறையில் ஆட்சிசெய்து வந்தபோதும், அவன் நாட்டில் ஒருமுறை பெரும் பஞ்சம் வந்துவிட்டது. மக்கள் கஷ்டப்பட்டுவிடக் கூடாதே என்று பலவகைத் திட்டங்களைத் தீட்டி, அவர்களைக் காப்பாற்றி வந்தான். எனினும் பஞ்சம் நீடித்ததால், குல குருவின் ஆலோசனைப்படி ருத்ர யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான். யாகத்தினைத் தடுக்க, அந்த வழியே சென்ற மேனகை, ஞானபாலியின் கண்களைக் கவர்ந்தாள். சிற்றின்ப ஆசையால் அரசன் வேள்வியை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து மேனகையின் பின்னே சென்றான். மேனகை பின்னே வந்த அரசனை எச்சரித்துவிட்டு மறைந்தாள். ஏமாந்து போன அரசன் ஞானபாலி மீண்டும் யாகம் செய்யும் இடத்துக்கு வந்தான். யாகம் பாதியில், பெரும் ஆபத்து நேரும் என்று குரு எச்சரித்தார். எனவே, மீண்டும் மற்றொரு நாள் யாகத்தை புதிதாகத் தொடங்கலாம் என்று சொன்னார். குருவின் சொல்லை மீறி, நின்று போன யாகத்தைத் தொடங்கிய ஞானபாலியை அஷ்டதிக் பாலர்கள் சபித்தனர். இதனால் ஒற்றைக் கண் பூதமாக மாறி அலையத் தொடங்கினான் ஞானபாலி. கண்ணில்பட்ட மனிதர்களை எல்லாம் பிடித்து உண்டான் ஞானபாலி. கொடிய அரக்கனாக மாறி சகல உயிரினங்களையும் வதைத்தான். தீராத பெரும்பசியால் உயிர்களை எல்லாம் விழுங்கினான். ஆனால் ஏனோ விநாயகப் பெருமானின் வழிபாட்டை மட்டும் தொடர்ந்தான்.
பூமிக்கே பெரும் அச்சுறுத்தலான ஞானபாலியை எந்தத் தேவர்களாலும் அழிக்க முடியவில்லை. அவனுக்கு கஜமுகனின் ஆசி இருந்ததே காரணம் என்று அறிந்துகொண்டார்கள். அவனை அடக்க கணபதியை வேண்டினர். தன் பக்தனான ஞானபாலிக்கு அருள் செய்யவும் பூவுலகைக் காக்கவும் கணபதி திருவுளம் கொண்டார். வேடனாக உருமாறி, ஞான பாலியை எதிர்க்க வந்தார் கணபதி. போர் நீண்டது, இறுதியாக வந்து இருப்பவர் கணபதி என்று கண்டுகொண்டான் ஞானபாலி. கண்ணீரோடு விழுந்து வணங்கி, தன்னை ரட்சித்து ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். தனது பெரும்பசியை போக்குவதுடன், தன்னையும் கணநாதராகிய பிள்ளையார் தம்மோடு வைத்துக் கொள்ளுமாறு வேண்டினான். பிறப்பிலா பெருவாழ்வைத் தந்து காக்குமாறு அழுதான்.பரம பக்தனான ஞானபாலியைக் கொல்லவோ, பூமியில் அப்படியே விட்டுச் செல்லவோ கடவுளுக்கு மனம் வரவில்லை. அவன் வேண்டியபடியே தன்னுடனேயே அவனை வைத்துக் கொள்ள எண்ணினார். அதே சமயம் அவனது பெரும்பசிக்கும் வழிசெய்ய திருவுள்ளம் கொண்ட கணபதி, விஸ்வரூப வடிவம் எடுத்து, ஞானபாலியைத் தன் கையால் பிடித்து, அவனை ஒரு கொழுக்கட்டை வடிவமாக்கி விழுங்கிவிட்டார். ஞானபாலி, கொழுக்கட்டை வடிவத்தில் விநாயகப் பெருமானின் வயிற்றில் அமர்ந்துகொண்டான். பெறுதற்கரிய இந்தப் பேற்றை பெற்று ஆனந்தம் கொண்டான். தேவர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். கணநாதரின் ஆணைப்படியே, ஞானபாலியின் பசியைப் போக்க, அவருக்குக் கொழுக்கட்டை படைக்கவும் ஒப்புக் கொண்டார்கள். அன்றிலிருந்து அவருக்குப் படைக்கப்படும் கொழுக்கட்டை யாவும் ஞானபாலிக்கே போய் சேர்ந்தன. நாமும் இன்று வரை ஞானபாலியின் நினைவாக கொழுக் கட்டையைச் செய்து படைத்து வருகிறோம்.
7. அருந்ததி தயார் செய்த மோதகம்
கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம் வந்து அருள்பவள் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார், விநாயகர். அவர் வருவதை முன்னரே தெரிந்துகொண்ட அருந்ததி, அவருக்காக மோதகம் தயார் செய்தார். பிரம்மம் இந்த அண்டமெங்கும் வியாபித்திருக்கிறது என்று, தான் அறிந்ததை இவ்வுலகுக்கும் உணர்த்தும் வகையில், வெள்ளை மாவினால் செப்பு செய்து அதனுள் அமிர்தமயமான பூர்ணத்தைப் பொதிந்துவைத்து மோதகம் தயாரித்து, வசிஷ்டரிடம் கொடுத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யச் சொன்னாள் அருந்ததி. அப்படி அவள் அளித்த பிரசாதத்தையும், அதன் தத்துவச் சிறப்பையும் உணர்ந்த பிள்ளையார், அதன் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறார். “மோதக ஹஸ்தன்’’ என்று ஒரு திருநாமம் அவருக்கு உண்டு.8
8. திருப்புகழில் நைவேத்யம்
அருணகிரிநாதர். “பக்கரை விசித்ரமணி” என்ற திருப்புகழ் பாடலில் விநாயகருக்கு படைக்க வேண்டியவை பட்டியல்
இடுகின்றார்.
“இக்கவரை நற்கனிகள்
சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரைஇளநீர்
வண்டெச்சில்பயறப்பவகை
பச்சரிசி பிட்டுவெளரிப்பழமி டிப்பல்
வகைதனிமூலம்மிக்கஅடி
சிற்கடலை பட்சணமெனக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும்அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடையபெருமாளே.”
“கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பவகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பலவகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்ல அருட் கடலே! கருணை மலையே! வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான சிவபிரான் பெற்றருளிய விநாயகனே! ஒற்றைக் கொம்பு (ஒரு கொம்பு மஹாபாரதம் எழுத உடைத்து விட்டார்) உடைய பெருமாளே!” என்பது பொருள்.
9. என்ன சொல்லி அர்ச்சனை செய்வது?
விநாயகர் சதுர்த்திக்கு நிறைய மந்திரங்கள் இருக்கின்றன.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
விநாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
10. எத்தனைப் பிள்ளையார்?
பிடித்து வைத்தால் பிள்ளையார். கையில் மட்டுமல்ல. மனதில் பிடித்து வைக்க வேண்டும். செய்யும் பொருளினால் அவருக்குப் பல பெயர்கள். மண் பிள்ளையார், சந்தனப் பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார், வெல்லப் பிள்ளையார், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு பிள்ளையாருக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். அத்துடன், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து நாம் வழிபட்டு வந்தால், எல்லா வசதி வாய்ப்புகளும் கிட்டுவதோடு, எடுத்த காரியங்களில் வெற்றி வசமாகும். மண்ணை எடுத்து பிள்ளையார் பிடித்து வழிபட்டு வந்தால், நல்ல பதவிகளைப் பெற்று சமூகத்தில் அந்தஸ்தும், வருவாயும் உயர்வது நிச்சயம்.
11. உப்புப் பிள்ளையார்
விபூதியைக் கொண்டு விநாயகர் பிடித்து வணங்கினால், உடலில் நோய்கள் நீங்கும். வேலையில் பதவி உயர்வுகள் கிட்டும். புற்று மண்ணைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்து வந்தோமெனில், நம் தொழிலில் லாபம் பெருகும். அத்துடன், ஆரோக்கியம் உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி லாபம் கிட்டும். சந்தனத்தைக் கொண்டு பிள்ளையார் செய்து வழிபட்டு வந்தால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். வெல்லத்தில் செய்து வைக்கும் பிள்ளையாரை வழிபட்டு வந்தால், எல்லாவித செளபாக்கியமும் கிட்டும். மிகக் குறிப்பாக, நம் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வரச் செய்வார். உப்பு வைத்து பிள்ளையார் செய்து வழிபட்டு வந்தால், எப்பேர்பட்ட எதிரியின் தொல்லையும் விட்டொழியும். வேப்ப மரத்தில் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபடுவதாலும் இத்தகைய பலன்கள் கிட்டும்.
12 வெள்ளெருக்கு பிள்ளையார்
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்துச் செய்து வழிபட்டு வந்தால், தோஷங்கள் அனைத்தும் அகலும் என்றும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்றும் ஞான நூல்கள் சொல்கின்றன. வெள்ளெருக்கில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கும் பட்சத்தில் நம்மிடம் தீய சக்தி ஏதும் அண்டாமல், நல்ல சிந்தனைகள் மேலோங்கி, சொத்துகள் பெருகுவது நிச்சயம். உங்களை வாட்டி வதைக்கும் நோய்களும், கடன்களும் தீர்ந்து உடலும் உள்ளமும் நலம் பெற வாழ வேண்டுமெனில், வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டு வாருங்கள். இதையெல்லாம்விட எளிமையானது பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜிப்பது. இப்படி பூஜித்தால் எண்ணியது நிறைவேறுவது நிச்சயம். அத்துடன், நோய்களை நீக்கி ஆரோக்கியத்துடன் வாழச் செய்வார் ‘பசுஞ்சாண பிள்ளையார்’. குறிப்பாக, சித்திரா பௌர்ணமி அன்று இந்தப் பிள்ளையாரை வழிபடுவது நற்பலனைத் தரும். பச்சரிசி மாவினால் பிடித்துச் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயிகளின் விளைச்சல் பெருகுவது நிச்சயம்.
13. நாம் வைப்பதுதான் பெயர்
பிள்ளையாருக்கு நாம் வைப்பதுதான் பெயர். அவர் அரசு மரத்தடியில் இருந்தால் அரசரடிப் பிள்ளையார். பூமிக்கு கீழே ஆழத்தில் இருந்தால் ஆழத்துப் பிள்ளையார். ஒவ்வொரு ஊரிலும் பல தெருக்கள் பிள்ளையார் பெயரில்தான் இருக்கும். ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு, ஒற்றை பிள்ளையார் கோயில் தெரு, உச்சிப் பிள்ளையார் கோயில் தெரு, செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெரு, முத்தாச்சி பிள்ளையார் கோயில் தெரு என்று தெருப் பெயர்கள் இருக்கும். உருவங்களைப் பொருத்தும் பெயர்கள் உண்டு. வாமன கணபதி, சங்கடஹர கணபதி, குமார கணபதி, ஊர்த்துவ கணபதி, அர்க கணபதி, சக்தி கணபதி, உத்தண்ட கணபதி, ஹரித்ரா கணபதி, உச்சிட்ட கணபதி, சிங்க கணபதி, மும்முக கணபதி, சிருஷ்டி கணபதி, துவிமுக கணபதி, யோக கணபதி, துர்க்கா கணபதி, வீரகணபதி, புஷ்ப கணபதி, ருண மோசன கணபதி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
14. சுக்லாம் பரதரம்
பிள்ளையார் பூஜைக்கு “சுக்லாம் பரதரம்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி பிள்ளையாரை ஆவாகனம் செய்து, மூல மந்திரத்தைச் சொல்லி வழிபடுவார்கள். வைணவத்திலும் இதே மந்திரம்தான். ஆனால், அடுத்த இரண்டு வரி மாறும். அவர்கள் விஸ்வக்சேன ஆராதனம் என்பார்கள். வைணவத்தில் கஜானனர் என்றொரு அமைப்புண்டு. தும்பிக்கை ஆழ்வார் என்று பல தலங்களில், மாடங்களில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இனி “சுக்லாம் பரதரம்’’ மந்திரம் என்ன என்று பார்ப்போம்
“சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே’’
சுக்லாம் பரதர – வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
விஷ்ணு – என்றால் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர்.
சசிவர்ண – நிலா போன்ற நிறம் உடையவர்.
சதுர்புஜ – நான்கு கை கொண்டவர்.
ப்ரஸந்த வதந – மலர்ந்த முகம் உடையவர்.
அவரை தியானிப்போம் என்பது பொருள்.
15. . தலையில் குட்டிக் கொள்வது ஏன் என்பது தெரியுமா?
நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக் கொள்வதால் மூளையில் உள்ள `பிட்யூட்டரி சுரப்பி’ நன்கு சுரக்கும். விநாயகர் முன்பு பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள். இதை முதலில் அறிமுகப்படுத்தியவர் அகஸ்தியர். இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அகத்தியர் வடநாட்டில் இருந்து தென் இந்திய நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த காவிரி நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார். பின்னர், அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை காக்க காவிரியை உருவாக்க அப்படிச் செய்ததாகக் கூறினார். தன் தவறுக்கு வருந்திய அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கம் வந்தது.
16. மனதில் இடம்தந்தால் போதும்
தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு மதித்து “அம்மா அப்பாதான் உலகம்” என்று உணர வைத்தவர் என்பதால், அவருக்கு பிள்ளையார் என பெயர் வந்தது. எல்லா கடவுளுக்கும் முதன்மையானவராக இருப்பதால், கோயிலில் முதல் ஆளாக அமர்ந்திருப்பவரும், முதலாவதாக வணங்கக் கூடியவராக பிள்ளையார் உள்ளார். பிள்ளையாரின் யானைமுகம், துதிக்கை, கண்களையும் நோக்கினால் “ஓம்’’ என்ற பிரணவம் தெரியும். கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக நடமாடியதால் தேவர்களும் முனிவர்களும், யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்? என்று கேட்டுக் கொண்டனர். அதுவே நாளடைவில் பெயராக மலர்ந்தது. பிள்ளையார் மிகவும் எளிமையானவர். இவருக்கு கோபுரமோ கொடிமரமோ மாட மண்டபமோ மதிற்சுவரோ தேவையில்லை. நம் உள்ளத்தில் ஓர் இடமளித்தால் போதும்.
17. காரிய சித்தி மாலை
விநாயகருக்கு எத்தனையோ துதி நூல்கள் உண்டு. பாடல்கள் உண்டு. அதில் முக்கியமானது “காரிய சித்தி மாலை”. இந்த கார்ய சித்தி மாலையை காஷ்யப மஹரிஷி வடமொழியில் இயற்றி, கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்து நமக்கு வழங்கி உள்ளார்கள். இவர் எழுதிய விநாயகர் புராண நூலில் உள்ளது காரிய சித்தி மாலை. இதிலுள்ள எட்டு பாடல்களை தினமும் படிப்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். கடன், நோய், பகை அண்டாது. செல்வம் சேரும். பதினாறு பேறுகளும் கிடைக்கும். அதில் ஒரு பாடல் இந்த விநாயக சதுர்த்திக்காக கீழே கொடுத்துள்ளோம்.
“இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம்’’.
பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாவங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னான திருவடிகளை (இந்த விநாயகர் சதுர்த்தியில்) சரணடைகின்றோம்.
நிலவளம் ரெங்கராஜன்