ஹாலோவீன் தினமின்று☠
சர்வதேசம் முழுவதும் ஹாலோவீன் (Halloween) கொண்டாட்டம் களைகட்டும் ஒரு நாள் - இந்த அக்டோபர் 31. . இந்நாளில் மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வது, ஆகியவை கொண்டாட்டத்தில் இடம்பெறும். கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது. பிரிட்டனில்தான் முதன்முதலாகக் ஹாலோவீன் தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்ச காலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான ஹாலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச் செய்தல் என்ற கருத்துப்படும்.
பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரஞ்சு நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும். அத்தினத்தில் பேய்கள் பிசாசுகள் போலப் பெரியவர்களும், சிறியவர்களும் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வேடிக்கையாக விருந்து தரும்படி கேட்பார்கள். பெரியவர்கள் தெருவிலே நின்று கொள்ள, சிறுவர், சிறுமிகள் பேய் பிசாசுபோல வேடமிட்டு வாசலில் வந்து வேடிக்கையாக ஏமாற்றுவார்கள். சில சமயங்களில் வீட்டில இருப்பவர்களும் பயங்கரமான வேடமணிந்து விருந்து கேட்டு வந்த பிள்ளைகளுக்குப் பயம் காட்டுவார்கள். அதன்பின் பிள்ளைகள் கொண்டுவந்த தட்டிலே இனிப்பு, சொக்லட் போன்றவற்றைப் போடுவார்கள். மாலை 5 மணியில் இருந்து இரவு ஒன்பது, பத்து மணிவரை அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று (Tricks or Treats) இனிப்பு வகைகளைச் சேகரிப்பார்கள். இப்படிச் சேகரித்துக் கொண்டு வந்தவற்றைத் தரம் பிரித்து பிடித்தவற்றைத் தாங்கள் எடுத்துக் கொண்டு வேண்டாத மிகுதியைப் பெற்றோரிடம் தள்ளி விடுவார்கள்.
அதாவது பேய்களைப் பற்றிய பயம் உலகெங்கும் உள்ளது. இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள், திருப்தியடையாமல் உலவிவந்தால், அவை மனிதர்களைத் தாக்கும் என்ற நம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது. இனம், மொழி, நாடு, படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இன்றி பேய்களைப் பற்றிய பயம் இருந்துவருகிறது. கடவுளர்களுக்கு எல்லாம் நாம் திருவிழா கொண்டாடுவோம், இது இந்தியர்களின் வழக்கம். ஆனால், பேய்களுக்கு என்று ஒரு விழாவை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். அதுதான் ஹாலோவீன் திருவிழா.
பேய்களுக்கு ஏன் திருவிழா? என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அகாலமாக இறந்துபோனவர்கள், தம் தேவைகள் முடிந்துபோய், தங்கள் வினைகளுக்கு ஏற்ப சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் அலைந்துகொண்டிருப்பார்கள். இப்படிப் பேயாக அலைந்துகொண்டிருப்பவர்களை சந்தோஷப்படுத்தும் நன்னாள்தான், ஹாலோவீன் நாள் எனப்படுகிறது.
அலையும் ஆவிகளை இப்படிக் கொண்டாடி மகிழ்வதால், தங்களுக்கு எந்த விதமான கெட்டதையும் அவை செய்யாது என்பது மேற்கத்தியவர்களின் நம்பிக்கை. முதன்முதலில் இந்தப் பேய்களின் தினம் அயர்லாந்தில்தான் கொண்டாடப்பட்டது. அகாலமாக உயிர் நீத்த புனிதத் துறவிகளின் நினைவாகவே இந்த நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் கடைபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாளில்தான் முதலில் இந்த ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர், அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் இந்நாள் அக்டோபர் 31-ம் தேதியானது. பூச்சாண்டிகள் தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளில், ஆரம்பத்தில் உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவத்தியை வைத்து, மந்திரித்து,பேய்களை விரட்டினர். பின்னர், பெரிய பரங்கிக் காய்களை வெட்டி, பயங்கரமாக அலங்கரித்து, அதை வீட்டுக்கு வெளியே வைத்துப் பேய்களைத் துரத்த ஆரம்பித்தனர்.
காலம் செல்லச்செல்ல இந்த ஹாலோவீன் தினம் பயங்கரமான கற்பனை வடிவங்களால் சிறப்பைப் பெறத்துவங்கியது. காய்ந்த சருகுகள், எலும்புக்கூடுகள், சூனியக்கார பொம்மைகள், பிரமாண்ட சிலந்திகள், ஓநாய் பொம்மைகள் எனப் பலவிதமான உருவங்களைக்கொண்டு ஹாலோவீன் தினம் படு திகிலாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் 16 மாநிலங்களில் உள்ள ஹாலோவீன் அருங்காட்சியகங்களில் உள்ள உருவங்கள், இந்த நாளில் வீதிகளில் உலா வரத்தொடங்கிவிடும். இந்த நாளின் இரவு முழுக்க விதவிதமான பேய்களின் அலங்கார அணிவகுப்புகள், காண்பவரை மிரளச்செய்யும்.
ஹாலோவின் தினத்தின்று சூனியக்காரி, கறுப்புப் பூனை, வெளவால், ஆந்தை, சிலந்தி, சிலந்திவலை, எலும்புக்கூடு, மண்டை ஓடு, பூசணிக்காய், விளக்குமாறு, சூலம் போன்ற விளையாட்டுப் பொருட்களால் வீட்டின் வாசலை அலங்கோலம் செய்து வைத்திருப்பர். பெரிய பூசணிக்காயை (Jack-o-Lantern) எடுத்து அவற்றைப் பயங்கர முகங்களைப் போலச் செதுக்கி அதன் வடிவை மாற்றி வாசலில் வைத்திருப்பர். இருட்டில் இருக்கும் அவற்றில் மெழுகு திரிகளைக் கொளுத்தி மெல்லிய வெளிச்சத்தை ஏற்படுத்தியிருப்பர். பயங்கரமான இடத்தை நோக்கிப் போவது போன்ற ஒரு சூழலை இங்கே ஏற்படுத்தியிருப்பர். இந்த வாரத்தில் பெரியவர்கள் குழந்தைகளுக்குப் போய் பிசாசு கதைகள் சொல்வதிலும், அப்படியான பயங்கரப் படங்களைக் குடும்பமாகச் சென்று பார்ப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடுவர். நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாலோவீன் கேளிக்கை விருந்துகளுக்கு ஹாலோவீன் ஆடைகள் அணிந்து முகத்திற்கு மைபூசிச் செல்வர்.
பேய்களைத் திருப்திபடுத்தும் விழா என்பதைத் தாண்டி, இந்த விழா உற்சாகமூட்டும் ஒரு திகில் விழாவாகப் புகழ்பெற்றுவருகிறது. மறைந்தவர்களின் கல்லறைக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்ததைப் படைக்கும் வழக்கமும் இந்த நாளில் உள்ளது. இந்த நாள், நமது மயானக் கொள்ளை திருவிழாவைப்போல இருந்தாலும், அங்கு ஆர்ப்பாட்டம் அதிகம் எனலாம். கிறித்துமஸ் விழாவுக்கு அடுத்து, இந்த ஹாலோவீன் தினத்தில்தான் மேற்கத்திய நாடுகளில் விற்பனையும் உற்சாகமும் அதிகம் என்கிறார்கள். எப்படியோ, பேய்களின் மீதான பயம் ஒரு திருவிழாவாக உருவாகி, இன்று கோலாகலமான ஒரு திருநாளாக மாறிப்போய் உள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்