🦉ஹேப்பி பர்த்டே 'விக்கிபீடியா' ஜிம்மி💐
நமக்காக ஓடியாடி தகவல் திரட்டித் தரும் “விக்கி பீடியா” ஓனர் ஜிம்மி வேல்ஸ் பிறந்தநாள் இன்று!!
கூகுளுக்கு அடுத்தாக அனைத்து கம்யூட்டர் உலக வாசிகளுக்கு கைவந்த கலையாக திகழ்ந்து வருவது விக்கிபீடியாதான். இங்கு கிடைக்காத தகவல்களே இல்லை என்கின்ற அளவிற்கு தகவல்களின் களஞ்சியமாக அனைத்து மொழிகளிலும் திகழ்ந்து வருகின்றது.ஆனால், அந்த விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸினை எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அவருடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 7ம் தேதியான இன்றுதான் என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
வரலாறுகளின் வரலாற்றை எடுத்துரைக்கும் ஜிம்மியின் அப்பா ஒரு பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைப் பார்த்தவர். ஆகஸ்ட் 7, 1966ல் பிறந்தார் ஜிம்மி. வீட்டிலேயே கல்வி பயின்றுகொண்டிருந்த ஜிம்மி வேல்ஸ் மாண்டிசேரி கல்வியால் படித்து வளர்ந்தவர்.கல்லூரியில் பொருளாதாரம் படித்த ஜிம்மி, ஸ்டாக் எக்ஸேங்க் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்தார். அந்த வேலையின் தன்மை தன்னைக் கவராத காரணத்தினால் விலகிய அவர் நெட்ஸ்கேப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதுடன், கவர்ச்சிப் படங்களை தேடித்தரும் வகையிலான "போமிஸ்" என்ற தளத்தினை முதலில் நடத்தி வந்தார்.கொஞ்ச காலத்திலேயே முதன்முதலாக "நு பீடியா" என்ற தளத்தினை ஜிம்மி வேல்ஸ் துவங்கினார். அதில் பல்வேறு அறிவு மற்றும் சிந்தனைகள் சார்ந்த அருமையான கட்டுரைகளை பதிவிட்டார். கொஞ்சம் கச்சடா பிடித்த வேலையாகத்தான் அது இருந்தது. கட்டிங், ஒட்டிங், எடிட்டிங் வேலைகளுக்கு திண்டாடி போய்விட்டார் ஜிம்மி.
திடீரென்று ஒருநாள் எடிசனின் டங்ஸ்டன் பல்பு ஜிம்மி மண்டையில் எரிந்தது. அவ்வளவுதான் தளத்தை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று யார் வேண்டுமானாலும் எழுதலாம்....எடிட் செய்யலாம் என்று விக்கிபீடியா எனப் பெயர் மாற்றம் செய்து அறிவித்தார்.முதலில் காப்பி ரைட் பிரச்சனைகள் குறித்த பயம் எழுந்தாலும், மக்களின் கட்டுரை சப்போர்ட் அவரை பெரும் உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியது. விக்கி மீடியா என்ற அமைப்பின் மூலம் விக்கி பீடியாவிற்கான நிதியையும் திரட்ட ஆரம்பித்தார் ஜிம்மி.ஆனால், மனிதர் தெளிவான ஒன்றை செய்தார். அதுதான் "நோ விளம்பரம் ஒன்லி இலவசம்" என்கின்ற கொள்கை.
அதன்படி இன்று வரை விக்கி பீடியா பக்கத்தில் விளம்பரங்களின் மொய்ப்பு இல்லை. யார் வேண்டுமானாலும் இலவசமாக பார்வையிடலாம். ஆனாலும், இது மக்கள் தளம் என்று மறுத்து விட்டார் விளம்பரங்களை ஜிம்மி. கூகுள், பேஸ்புக், டுவிட்டர், யாகூவிற்கு அடுத்தபடியாக பல கோடிக்கும் மேலான மக்கள் இன்று விக்கி பீடியாவினை உபயோகித்து வருகின்றனர்.அவர் நினைத்திருந்தால் பில்லியன், ட்ரில்லியனில் சொத்து குவிந்திருக்கும்...ஆனாலும், ஜிம்மி பல லட்சங்களுக்கு மட்டுமே இன்றும் அதிபதி. காரணம் அவர் மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதை மட்டுமே விரும்பினார்...சொத்து சேர்ப்பதை அல்ல...அந்த எளிய மனிதருக்கு நம் அனைவர் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!