For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஏடிஎம் மெஷினுக்கு ஹேப்பி பர்த் டே!🌺

05:39 AM Jun 27, 2024 IST | admin
ஏடிஎம் மெஷினுக்கு ஹேப்பி பர்த் டே 🌺
Advertisement

ன்று ஏ.டி.எம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. 1967-ம் ஆண்டில் பார்க்லேஸ் ஏ.டி.எம் நிறுவப்பட்ட சில வாரங்களுக்குப்பிறகு உலகின் இரண்டாவது ஏ.டி.எம் ஸ்வீடனில் நிறுவப்பட்டது. இதற்குப்பிறகு உடனடியாக உலகெங்கும் ஏ.டி.எம் மையங்கள் முளைத்ததும், இந்த இயந்திரங்கள் வங்கி சேவையில் முக்கிய இடத்தைப் பிடித்ததும் வரலாறு. இந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம் இயந்திரமானது 1987-ல் மும்பையில் ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் மூலம்தான் அறிமுகமானது. இப்போது உலகம் முழுவதும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான ஏ.டி.எம்கள் பயன்பாட்டில் உள்ளன. அது சரி எப்படி இந்த இயந்திரம் நம் வாழ்க்கையில் நுழைந்தது?

Advertisement

உலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரமானது ஜூன் 1967-ல் லண்டனில் இருக்கும் ஒரு தெருவில் உள்ள பார்க்லேஸ் வங்கியின் ஒரு கிளையின் மூலமாக அமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை ஜான் ஷெப்பர்ட் பரோன் என்ற பிரிட்டிஷ் நாட்டுக்காரர் கண்டுபிடித்தார். இயந்திரத்தில் காசு போட்டால், சாக்லெட் தரும் இயந்திரங்கள்தான் இந்த ஏ.டி.எம் மெஷினுக்கு அடிப்படையாக இருந்தன. ஆரம்ப காலத்தில் ஏ.டி.எம் மெஷினைப் பயன்படுத்த பலரும் தயங்கினார்கள். பிற்பாடு அதில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டபிறகு எல்லோரும் பயன்படுத்தத் தொடங்கினர்.

Advertisement

1967ல் அறிமுகம் செய்யப்பட்ட ஏ.டி.எம் மிஷின் மூன்றே வருடங்களில் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளில் புகழ் பெற்றது. டெலிபோன் தொழில்நுட்பத்தை இணைத்து அமெரிக்காவில் கடந்த 1970ஆம் ஆண்டுகளில் ஏ.டி.எம் மிஷின்கள் இயங்க ஆரம்பித்தன. இந்த நாட்களில் அமெரிக்காவில் வரிசையில் நின்று பணம் எடுக்க விரும்பாத அமெரிக்கர்கள் பெரும்பாலும் ஏடிஎம்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அது அப்படியே இந்தியா உள்படப் பல நாடுகளில் பரவி இன்று அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

அப்போது பிளாஸ்டிக் கார்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ரசாயன குறியிடப்பட்ட சிறப்பு செக் அடிப்படையாகக் கொண்டு அந்த ஏடிஎம் கரன்சியை வழங்கியது.
இந்த செக்கை ஒரு டிராயரில் வைத்துவிட்டு தனி அடையாள குறியீட்டை (பின் நம்பர்) தெரிவித்தால் மற்றொரு டிராயரில் பிரிட்டிஷ் பவுண்டு வரும். மேலும், 6 இலக்க பின் நம்பரை பதிவு செய்யும் வகையில் ஏடிஎம்மை வடிவமைத்திருந்தார். அதை நினைவில் வைத்துக் கொள்வதற்கு சிரமமாக இருப்பதால் 4 இலக்கமாகக் குறைத்து வடிவமைத்தார். பின்னர் பிளாஸ்டிக் கார்டை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இனி ஏ டி எம் பற்றி கொஞ்சம் அடிசினல் தகவல்;

ஏடிஎம் போல ஒரு மெஷின் தயாரிக்க வேண்டும் என ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு முயன்றன. இருந்தாலும் அந்த பெருமையைத் தட்டிக் கொண்டு போனது “லூத்தர் ஜார்ஜ் சிம்ஜியன்” என்பவர் தான். 1939 களுக்கு முன்பே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கான காப்புரிமையை 1963ல் தான் பெற்றார் !

1939 ம் ஆண்டு நியூயார்க்கில் “சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க்” ஒரு மெஷினை வைத்தது. அதை “பேங்கோகிராஃப்” என்று அழைத்தார்கள். நமது ஏ.டி.எம் களின் முன்னோடி என்று அதைச் சொல்லலாம். ஆனாலும் அதில் பணம் பட்டுவாடா செய்யும் வசதி இருக்கவில்லை. டெபாசிட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. ஆனாலும் இதை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆறே மாதத்தில் மூட்டையில் கட்டி பரணில் போட்டார்கள்.

பணம் பட்டுவாடா செய்யும் மெஷின் தனது கணக்கைத் துவங்கியது 1966ம் ஆண்டு, டோக்கியோவில். அதற்கு அடுத்த வருஷம் அது ஸ்வீடனிலும் சுவடை எடுத்து வைத்தது !

1967ம் ஆண்டுதான் இப்போதைய வகையான ஏடிஎம் மெஷினை உருவாக்கினார்கள். ஆனாலும் அப்போதைய அந்த ஏடிஎம் மெஷினுக்கும் இப்போதைய மெஷினுக்கும் ஏணி என்ன ? ராக்கெட் விட்டால் கூட எட்டாத அளவுக்கு இடைவெளி இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1972ம் ஆண்டு யூகேவில் அறிமுகமான ஏ.டி.எம் தான் இன்றைய நவீன ஏடிஎம் களின் ஒற்றை ஸ்டைல் பணிகளைச் செய்தது எனலாம்

தங்க முலாம் பூசப்பட்ட ஏ.டி.எம்

முதல் தங்கமுலாம் பூசப்பட்ட இயந்திரம் அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் அரண்மனை ஹோட்டலின் லாபியில் வைக்கப்பட்டது. தங்கத்தால் செய்யப்பட்ட 320 பொருள்களை இந்த தங்க ஏ.டி.எம் விநியோகிக்கிறது. தற்போது மூன்று கண்டங்களில் இருபது தங்க விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன

மிதக்கும் ஏ.டி.எம்

இது கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இதனை கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஐ.என்.சி) சொந்தமான ஒரு படகில் நிறுவியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான எர்ணாகுளம் மற்றும் வைபீன் இடையே ஜங்கர் என்ற படகு சேவையில் இந்த ஏ.டி.எம் அமைக்கப்பட்டுள்ளது.

தனிமையான ஏ.டி.எம்

உலகின் தனிமையான ஏ.டி.எம் அன்டார்டிகாவில் உள்ளது. அன்டார்டிகாவில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சி மையமான மெக்முர்டோ நிலையத்தில் இரண்டு ஏ.டி.எம்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஏ.டி.எம் மட்டுமே இயங்குகிறது. இன்னொன்று பேக்கப்பாக இருக்கிறது.

மிக உயரமான ஏ.டி.எம்

உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ள ஏ.டி.எம் நாதுலாவில் வைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் கடல்மட்டத்திலிருந்து 14,300 அடி. இது யூனியன் பாங்க் ஆப் இந்தியாவால் இயக்கப்படுகிறது. இந்தோ-சீனா எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்காக இந்த ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement