ஹமாஸ் அமைப்பு மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்தது!
ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களை ‘பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில்’ ஒளித்து வைத்திருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 20 பேர் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து அவர்கள் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பிணைக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேரை இஸ்ரேல் மீட்டது.
இந்த நிலையில் மேலும் இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்து உள்ளது ஹமாஸ். இதனை செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த இரண்டு இஸ்ரேலியர்களை ஹமாஸ் தற்போது விடுவித்துள்ளது. “உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக வயது முதிர்ந்த இருவரை விடுவித்துள்ளோம்” என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
நூரிட் கூப்பர் (79), யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் (85) என இரண்டு பெண்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தபோது ஹமாஸ் சிறை பிடித்தது. அவர்களது கணவர்களும் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். இப்போது ஹமாஸ் விடுவித்திருக்கும் பணயக் கைதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது. மற்ற பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதை தனது நோக்கமாக இருக்கும் என்று விடுவிக்கப்பட்ட யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸின்ன் மகள் ஷரோன் தெரிவித்துள்ளார்.
85 வயதான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் தாம் நரகத்துக்குச் சென்று வந்தது போல் இருந்ததாக ஹமாஸ் பிடியில் இருந்ததைப் பற்றித் தெரிவித்தார். ஹமாஸ் துப்பாக்கி வைத்திருந்தவர்களால் மோட்டார் சைக்கிள்களில் தான் கடத்திச் செல்லப்பட்டதை விவரிக்கும் போது, தான் நரகத்தில் இருந்ததாக கூறுகிறார். மேலு மோட்டார் சைக்கிளில் தன்னை காஸாவுக்குள் கொண்டு சென்றதாகவும் சவாரி செய்ததால், காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.இஸ்ரேலிய அரசாங்கம் எல்லை வேலிக்காக கோடிக்கணக்கில் செலவழித்தாலும், அது ஹமாஸ் நுழைவதைத் தடுக்க எதுவும் செய்ய முடிவில்லை என்று அவர் கூறினார்.
சுமார் 220-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் ஹமாஸ் வசம் தற்போது இருப்பதாக தெரிகிறது. அதனால் காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் கவலைக்குரிய செய்தியாகும்.