ராமர் கோயில் விழாவையொட்டி அரைநாள் அரசு விடுமுறை!
வரும் 22ம் தேதி பிரதிஷ்டை நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் தேதி விமரிசையாக நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த சடங்குகளை 121 ஆச்சார்யார்கள் மேற்கொண்டனர். வரும் 22ம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, பகல் 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடக்கிறது.
இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. கிரேன் இயந்திரம் மூலம் ராமர் சிலை கருவறைக்குள் வைக்கப்படுவதற்கு முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முக்கியமானவர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில் . இந்த விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் அரை நாள் விடுப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களிடமிருந்து வந்த அதிகப்படியான கோரிக்கை காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், "ஜனவரி 22ம் தேதி அன்று அயோத்தி ராம் லல்லா பிரதிஷ்டை விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்கள் அன்றையதினம் பிற்பகல் 2.30 மணி வரை அரை நாள் மூடப்பட்டிருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதுமிருந்து அதிக அளவில் கோரிக்கை வந்தது. மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஜனவரி 22ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களை அரை நாள் மூடுவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது "என்றார்.
முன்னதாக, உத்தரபிரதேச அரசு ஜனவரி 22ம் தேதி இறைச்சி, மீன் மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.