புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்.15-ல் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி பதவியை திடீர் என்று ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாகவே புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது.
தற்போது தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது. இக்குழுவில், மத்திய அமைச்சர் ஒருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த தேர்வுக் குழுவில், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். இக்குழு இன்று காலை கூடி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும். இக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி இருவரையும் தேர்தல் ஆணையர்களாக நியமிப்பார்.
தேர்வுக்குழுவின் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதில் அரசு சார்பில் இருவர் இருப்பதால் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. முன்னதாக அவர்கள் என்னிடம் 212 பேர் கொண்ட பட்டியலை அளித்தார்கள். இருவரை தேர்வு செய்வதற்கு 10 நிமிடங்கள் முன்பாக வெறும் 6 பேரின் பட்டியல் மட்டும் வழங்கப்பட்டது. பின்னர், ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வுக்குழுவில் முன்பு இருந்த சுப்ரீம் கோர்ட்த் தலைமை நீதிபதி தற்போது இல்லை என்பதால், தங்களுக்கு சாதகமானவர்களை தேர்தல் ஆணையர்களாக நியமித்துக் கொள்வதற்கு ஏற்ப அரசு சட்டம் இயற்றி உள்ளது. எனவே, அதன் அதிகார வரம்பு குறித்து நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், தேர்வு செய்வதற்கான நடைமுறை சரியானது அல்ல" என தெரிவித்தார்.
ஆக மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், புதிய சட்டப்படி இரண்டு தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், ஞானேஷ் குமார் கேரளாவையும், சுக்பிர் சிங் சாந்து பஞ்சாபையும் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை மேற்கூறிய புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் இயற்றப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் அலுவலக விதிமுறைகள்) சட்டம், 2023ன் கீழ் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என ஜெயா தாகூர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ள வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது