தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

புதிய தலைமை தேர்தல் ஆணையரானார் ஞானேஷ்குமார்! யாரிவர்?

10:10 AM Feb 18, 2025 IST | admin
Advertisement

ந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த ராஜீவ் குமார் (வயது 65) ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என மூன்று பேர் கொண்ட குழு பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, தேர்வுக் குழுவில் இடம் பெற்ற ஐந்து பேரில் ஒருவரைத் தேர்வு செய்து, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்த சிலமணிநேரங்களில் அவர் ஒப்புதல் அளித்த நிலையில், உடனடியாக நாட்டின் 26வது புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து தொடர்பாக சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 (சட்டம் எண். 49/2023) இன் பிரிவு 4-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிப்ரவரி 19, 2025 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்” என்று சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற பெருமையை ஞானேஷ்குமார் பெற்றுள்ளார்.

Advertisement

இவர் வரும் 2029, ஜனவரி 26 ஆம் தேதி வரை தனது பதவியை தொடர்வார். அதாவது அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தேர்வு செய்யப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தாண்டு பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்கள், 2027 இல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவார்.

யார் இந்த ஞானேஷ் குமார்?

ஞானேஷ் குமார் 1988 பேட்ச் கேரளா - கேடரின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech) முடித்துள்ளார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஐசிஎஃப்ஏஐ (ICFAI) பல்கலைக்கழகத்தில் வணிக நிதி தொடர்பான படிப்பு மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் எச்ஐஐடியில் (HIID) சுற்றுச்சூழல் பொருளாதாரம் தொடர்பான படிப்பையும் பயின்றுள்ளார்.

கேரளா அரசில் எர்ணாகுளத்தின் உதவி ஆட்சியராகவும், அடூர் பகுதியின் துணை ஆட்சியராகவும், எஸ்சி மற்றும் எஸ்டி (SC/ST) பிரிவுக்கான கேரள மாநில மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சியின் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்துள்ளார். மேலும், கேரளா அரசின் செயலாளராகச் செயல்பட்ட ஞானேஷ் குமார், நிதி வளங்கள், விரைவுத் திட்டங்கள் மற்றும் பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு துறைகளையும் கையாண்டுள்ளார்.

ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய காலத்தில், ஜம்மு & காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பில் முக்கிய பங்கி வகித்தார். மேலும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவை உருவாக்குவதற்கு உதவியாத இருந்தவர்.

அப்போது, உள்துறை அமைச்சகத்தின் (காஷ்மீர் பிரிவு) இணைச் செயலாளராக இருந்தார். பின்னர், உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருந்த ஞானேஷ் குமார் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் தொடர்பான ஆவணங்களையும் கையாண்டுள்ளார்.மொத்தத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவராக ஞானேஷ் குமார் அறியப்படுகிறார்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Chief Election CommissionerECIELECTION COMMISSIONER GYANESH KUMARGyanesh KumarNEW ELECTION COMMISSIONERபுதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
Advertisement
Next Article