500 ரூ நோட்டில் காந்திஜிக்கு பதில் அனுபம்கெர் - மோடி பிறந்த மண்ணில் மோசடி!
பாலிவுட் நடிகர் அனுபம் கெர் படம் அச்சிடப்பட்ட சுமார் 1.6 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட வைரல் வீடியோவில், மகாத்மா காந்திக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளில் அனுபம் கெரின் படம் அச்சிடப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அகமதாபாத் போலீஸார் இந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த நோட்டுகளில் 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா' என்பதற்குப் பதிலாக 'ரிசோல் பேங்க் ஆஃப் இந்தியா' என்ற பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இந்த கள்ள நோட்டுகளின் காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அனுபம் கெர் இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, "ரூ 500 நோட்டுகளில் காந்திஜியின் புகைப்படத்திற்குப் பதிலாக எனது புகைப்படம்???? எதுவும் நடக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 24 அன்று நவரங்புரா காவல் நிலையத்தில் தங்க வியாபாரி மெகுல் தக்கர் என்பவர் புகார் அளித்தார். ரூ.1.6 கோடி மதிப்பிலான 2,100 கிராம் தங்கம் வாங்குவதற்காக தனது ஊழியர் ஒருவரை சந்தேக நபர்கள் அணுகியதாக அவர் புகார் கூறினார். ரூ.30 லட்சத்தை மறுநாள் தருவதாக உறுதியளித்து, அனுபம் கெரின் படம் பொதித்த 1.3 கோடி ரூபாயை வழங்கிய அந்த நபர்கள் தங்கத்தை பெற்றுக்கொண்டு மாயமாகிவிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.