தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்ட் புக்கின் நியூ எடிசன் அவுட்!

07:10 PM Oct 14, 2023 IST | admin
Advertisement

1955-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27ஆம் நாளில்தான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்துபவர்களின் திறமையை ஆவணப்படுத்தி வரும் புத்தகம் முதன்முதலில் வெளியானது. அந்தப் புத்தகம், `தி கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்.’ இந்தப் புத்தகம் வெளியானதற்குப் பின்னணியில் ஒரு போட்டி இருந்தது என்பதுதான் ஆச்சர்யத் தகவல்.

Advertisement

சர் ஹ்யூக் பீவர் (Sir Hugh Beaver) என்ற பெயர் கொண்ட இங்கிலாந்துக்காரர். ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில், அவர்களின் காவல் பணியில் சேர்ந்து (1910) இந்தியாவில் பணியாற்றியவர். 1921-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திரும்பியவர், ஒரு இன்ஜினீயரிங் கம்பெனியில் வேலைபார்த்தார். பிறகு, கனடா அரசு அவருக்கு வேலை கொடுத்தது. அந்த நாட்டு துறைமுகங்களை மேற்பார்வை செய்யும் வேலை. கனடாவில் இருந்தபோது, ஏழு மாத காலம் நியூ பிரன்ஸ்விக் நகரத்தில் இருக்கும் செயின்ட் ஜான் துறைமுகத்தின் மறுகட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். துறைமுகத்தில் ஒரு பெரிய தீ விபத்து. அந்தப் பணியை விடவேண்டியதானது. பிறகு, வேறு ஒரு நிறுவனத்தில் வேலை, அரசுப்பணி என போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. 1946-ம் ஆண்டு, `ஆர்தர் கின்னஸ், சன் அண்ட் கோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார். அது, ஒரு பியர் தயாரிக்கும் தொழிற்சாலை.

Advertisement

ஒருநாள் அயர்லாந்தில் நடக்கும் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். அது, நம் ஊர் விருந்து மாதிரி அல்ல. ஆங்கிலத்தில் `ஷூட்டிங் பார்ட்டி' (Shooting Party) என்று சொல்வார்கள். ஒரு ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோ மக்கள், கூட்டமாகக் கூடுவார்கள். துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும். எல்லோரும் தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள். எது சிக்குகிறதோ அதைச் சுட்டுத் தள்ளுவார்கள். அன்றைக்கு ஸ்லேனி ஆற்றங்கரையில் ஷூட்டிங் பார்ட்டி. அங்கே ஒரு விவாதம். ஐரோப்பாவில் இருக்கும் பறவைகளில் வேகமானது எது... ‘கோல்டன் குளோவரா?’ (ஒருவகை ஆட்காட்டிக் குருவி) `கிரௌஸா?’ (சதுப்பு நிலத்தில் வாழும் ஒருவகைக் கோழி). விவாதத்தில் முடிவே கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது, இரு பறவைகளில் எது வேகமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; எந்தக் குறிப்புகளும் இல்லை; அது தொடர்பான ஒரு புத்தகம்கூட இல்லை.

அதன் பிறகு ஹ்யூக்-குக்கு இதுபோல எத்தனையோ சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அதிக நேரம் தூங்கியவர் யார்; நீண்ட நேரம் பாடியவர் யார்... இப்படி பல கேள்விகள். தன்னைப்போல பதில் கிடைக்காமல் பலரும் இதுபோன்ற கேள்விகளோடு தவிப்பார்கள் என்பதும் அவருக்குப் புரிந்தது. இது தொடர்பாக ஒரு புத்தகம் வெளியிட்டால் நன்கு விற்பனையாகுமே, புகழ் பெறுமே என்கிற எண்ணமும் தோன்றியது. அதற்கு உதவினார் ஒருவர், ஹியூக்கின் கின்னஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். 'கிறிஸ்டோபர் சாட்டாவே' என்பது அவர் பெயர். கிறிஸ்டோபர், தன்னுடைய நண்பர்களான நோரிஸ் மற்றும் ரோஸ் மெக்வ்ரிட்டர் இருவரையும் அறிமுகப்படுத்தினார். அவர்கள், லண்டனில் நிகழ்வுகளைக் கண்டுபிடித்து தொகுக்கும் ஒரு ஏஜென்ஸி நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். இவர்களின் கூட்டு முயற்சியால் 1955-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி, 198 பக்கங்கள் கொண்ட முதல் ‘கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ புத்தகம் வெளியானது. கின்னஸ் என்பது ஓர் உயரிய அங்கீகாரம். சாகசம் புரிபவர்களுக்கு கிடைக்கும் கௌரவம். அப்படிப்பட்ட கின்னஸ் உலக சாதனைகளின் புதிய பதிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நம் இந்தியா உட்பட உலகெங்கிலும் இருந்து 2,638 சாதனைகளை இந்த புத்தகம் கொண்டுள்ளது.

இதிலிருக்கும் உலக சாதனைகளின் பட்டியலில், இந்தியா மற்றும் இந்தியர்களின் சாதனைகள் தனி சுவாரசியம் தருபவை. பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தால் இந்தியாவில் விநியோகமாகும் இந்த புத்தகம் 9 அத்தியாயங்களை கொண்டிருக்கிறது. மனிதர்கள், சாகசங்கள், வரலாறு, அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு என அந்த அத்தியாயங்கள் நீள்கின்றன.உலகெங்கிலும் இருந்து 2,638 சாதனைகளை அடக்கியிருக்கும் இந்த புத்தகத்தில் இந்தியாவின் 60க்கும் மேற்பட்ட சாதனைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பலதும் வெகு சுவாரசியமானவை; பிரம்மாண்டத்துக்கும் இந்தியர்களின் பெருமிதத்துக்கும் உரியவை.

உதாரணமாக சிரபுஞ்சியின் மழை சாதனையை சொல்லலாம். மேகாலயாவின் உயர நகரமான சிரபுஞ்சியில் 1995ம் ஆண்டு ஜூன் 15-16 ஆகிய நாட்களில், 2.493 மீ மழை பெய்திருக்கிறது. மழைப்பொழிவை பொதுவாக மிமீ என்பதில் குறிப்பார்கள். பெருமழையை அதிகபட்சம் செமீ என்பதில் குறிப்பார்கள். சிரபுஞ்சியில் பெய்திருப்பதோ உலக சாதனைக்குரிய வகையில் 48 மணி நேரத்தில் சுமார் 2.5 மீ பொழிந்திருக்கிறது.

சவுத்ரி மற்றும் அவரது மனைவி நீனா சவுத்ரி ஆகியோர், காரில் உலகைச் சுற்றிவந்த முதல் அதிவேக ஆண்-பெண் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறார்கள். 1989-ல் 69 நாட்கள் 19 மணி 5 நிமிடங்களில், ஆறுகண்டங்களின் 40,075 கிமீ தொலைவை தங்களது இந்துஸ்தான் கான்டசா கிளாசிக் கார் மூலமே கடந்து இந்த ஆச்சர்ய தம்பதி சாதனை படைத்திருக்கிறது.

இவை உட்பட இன்னும் 60 இந்திய சாதனையாளர்கள் இந்த கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் 2,638 உலக சாதனைகளும், அவற்றை சாதித்தவர்களுமாக, சுவாரசியத்துக்கும், உத்வேகத்துக்கும் குறைவில்லாது அமைந்திருக்கிறது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் அண்மை பதிப்பு என்பது தனிச் சிறப்பு.

Tags :
AchivementsGuinnessGuinness Book of World RecordsNew EditionWow
Advertisement
Next Article