ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசு வெளியீடு!
முன்னொரு காலம் தொடங்கி பல நூறு ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சூழல்களையும் தாண்டி தொடர்ந்து தற்காலத்திலும் தமிழ் மக்களின் கூட்டுணர்வின் எழுச்சியின் குறியீடாக ஏறு தழுவுதல் இன்னமும் நடைபெற்று வருகிறது. இது அனைவரையும் பெருமைப்படுத்தும் விழாவாகும். காளையை அறிமுகம் செய்யும்போது அந்த காளையின் உரிமையாளரின் பெயர், ஊரின் பெயர் அறிவிக்கப்படும். அதைப்போலவே காளையை அடக்கி வெற்றி பெறும் இளைஞரின் பெயரும் அவரின் ஊர் பெயரோடு சேர்த்து சொல்லப்படும் எனவே இது ஒரு பெருமைப்படுத்தும் விழாவாகவே பார்க்கப்படுகிறது.இலக்கியங்கள் மட்டும் அல்லாது பாறை ஓவியங்கள் மூலமாகவும் காளைகள், மாடுகள் பற்றிய ஓவியங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கின்றன . இப்பேர்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையொட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் காளைகளுக்கு தேவையற்ற காயங்கள் ஏற்படக்கூடாது, பாதுகாப்பு கருதி பார்வையாளர் மாடங்களுக்கு இரட்டைவேலி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி முதல் மே மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் விழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அந்த போட்டிகளின்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கால்நடை பராமரிப்புத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாவட்ட கலெக்டர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.
விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக, தொடர்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும், www.jallikattu.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
காளைகளை பிடித்து வைக்கும் இடம், வாடிவாசல், பாயும் தளம், விளையாடி முடிந்த காளைகளை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் இடம் ஆகியவற்றில் தவறுகள் நடக்காதபடி, 3 பேருக்கும் குறையாத அதிகாரிகள் குழு கண்காணிக்க வேண்டும். அந்த பகுதிகளை சுற்றி இரட்டை வேலி அமைக்க வேண்டும். 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிணறுகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தூரமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். போட்டிக்காக வாடிவாசலில் காளை திறந்து விடப்பட்டதில் இருந்து அது வெளியே செல்லும் வரை வீடியோ எடுக்கப்பட வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, விழா குழுவினர், காளை உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே அனைவரும் செயல்பட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக நடப்பது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.
போட்டி நடைபெறும் களத்தில் இருந்து காளைகள் வெளியேறும் இடத்தில், கால்நடை மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவர்கள் வழங்க வேண்டும். போட்டி நடைபெறும் களத்துக்குள் பார்வையாளர்களும், வெளிநபர்களும், வீரர்கள் அல்லாத மற்றவர்களுக்கு இருக்க அனுமதியில்லை. அதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது.
மாவட்ட கலெக்டர் இம்மாத இறுதியில் கூட்டம் நடத்தி, பதிவு செய்யப்பட்ட காளைகளின் பெயர் பட்டியலை கொடுத்து, ஜல்லிக்கட்டு விதிகள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். போட்டிக்கு முன்பு பாக்கு வைத்தல் போன்ற நிகழ்ச்சியை நடத்துவதற்கு தனி இடம் அளிக்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் அதன் விதிமுறைகளை சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் போதிய விளம்பரம் செய்யப்பட வேண்டும். அனுமதிக்கப்பட வேண்டிய காளைகளின் எண்ணிக்கையை வருவாய்த்துறை அதிகாரிகள் இறுதி செய்ய வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடுதல் என அனைத்து போட்டிகளுக்கும் பொருந்தும். இவற்றைப் பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.