Vao,உதவியாளர் உட்பட 6,244 பணிகளுக்கான குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியில் குறைந்தபட்ச கல்வி தகுதியில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய தேர்வாக பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை கொண்டு நிரப்பப்படும் இத்தேர்வின் மூலம் இம்முறை 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.ஆம்.. கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.அரசு பணி மீதான மோகம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இந்தாண்டு நடக்க உள்ள தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி வலைதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. இன்று (ஜன. 30, 2024) முதல் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரையில் இந்த தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. அதனடிப்படையில் தேர்வர்கள் தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வறைகளுக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருத்தம் :
பின்னாளில் விண்ணப்பங்களின் ஏதேனும் பிழையோ அல்லது திருத்தமோ செய்ய விரும்பினால் அதனை மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் மாதம் 6ஆம் தேதிக்குள் சரி செய்து கொள்ளலாம். அதற்கு பின்னர் விண்ணப்பங்களின் திருத்தம் செய்வது முடியாது.
தேர்வு தேதி :
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது தமிழக முழுவதும் ஒரே நேரத்தில் ஜூன் மாதம் 9ஆம் தேதி (09.06.2024) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில் மூன்று மணி நேரம் நடைபெறும்.
கேள்விகள் – மதிப்பெண்கள் :
இதில் வழக்கம் போல் 200 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் கட்டாயம் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர்த்து பொதுவான கேள்விகளாக 75 கேள்விகள் இருக்கும், இவை தவிர்த்து ஆப்டிடியூட் எனப்படும் கேள்விகள் 25 இடம்பெறும் , மொத்தமாக 200 கேள்விகள் இடம்பெறும். அதற்கு மொத்தமாக 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாவது அடிப்படையிலான கேள்விகள் இடம்பெற உள்ளன. ஓஎம்ஆர் எனப்படும் சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது. இதில் அதிக மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை உள்ளவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.