ஆய்வு நோக்கிலான தகவல்களை அறிந்து கொள்ள வழிகாட்டும் அருமையான இணையதளம்!
கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு என்று பிரத்யேகமான சமூக வலைப்பின்னல் தளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அகாடமி.எஜு, ரிசர்ச்கேட் உள்ளிட்ட இந்த தளங்கள் ஆய்வாளர்களுக்கு மட்டுமானது இல்லை. ஆய்வுலகின் போக்குகளையும், ஆயுவுலக தகவல்களையும் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்களும் இந்த தளங்களை நாடலாம். அதிலும் குறிப்பாக பத்திரிகையாளர்கள் இந்த தளங்களை பின் தொடர்வது அவசியம். இந்த வரிசையில், ஆய்வு நோக்கிலான தகவல்களை அறிந்து கொள்ள வழிகாட்டும் இன்னொரு அருமையான இணையதளமாக கெட்குடோஸ் (https://www.growkudos.com/) அமைகிறது.
இந்த தளமும் அடிப்படையில் ஆய்வறிஞர்களுக்கானது என்றாலும், ஆய்வுலகின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பயன் அளிக்கும் தளமாக விளங்குறது. சொல்லப்போனால், இந்த தளத்தின் மைய நோக்கமே இதை வெகுமக்களுக்கும் ஏற்றதாக ஆக்குகிறது.
ஆய்வுகள் எத்தனை முக்கியமாக இருந்தாலும், ஆய்வு கட்டுரைகளை படித்து புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல. ஆய்வு கட்டுரைகளை எழுதுவதற்கு என்று தனி மொழியும், நெறிமுறைகளும் இருப்பதால், அவற்றை படிப்பது என்பது கடினமானதாகவே இருக்கும். அதோடு, ஆய்வுலக சொற்களும், பிரத்யேக கருத்தாக்கங்களும் கூடுதல் சவாலாக அமையலாம்.
ஆய்வு கட்டுரைகள் அணுக முடியாமல் இருப்பது வெகு மக்களுக்கு மட்டும் சிக்கலானது இல்லை, ஆய்வாளர்களுக்கும் இது பாதகமானதே. ஏனெனில், ஆய்வு தகவல்கள் பரவலாக சென்றடைவதற்கு தடையாக அமைகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் கெட்குடோஸ் தளம் அமைகிறது.
ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளை பரவலாக கொண்டு சேர்க்க வழி செய்வதை நோக்கமாக கொண்ட இந்த தளம், ஆய்வு தகவல்களை எளிதாகவும், நேரடியாகவும் தெரிவிக்க உதவுகிறது. இதற்கேற்ப, ஆய்வாளர்களிடம் அவர்கள் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்டு அதன் சாரம்சத்தை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக அளிக்கிறது. இந்த ஆய்வு முடிவு ஏன் முக்கியமானது என்பதற்கான விளக்கமும் அளிக்கப்படுகிறது.
ஆய்வு சுருக்கம், விளக்கம் தவிர, மூலக்கட்டுரைக்கான இணைப்பு, அதன் இணை ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தொடர்பான கூடுதல் தகவல்களும் இடம் பெறுகின்றன. தொடர்புடைய ஆய்வு தகவல்களையும் காணலாம். பல்வேறு தனித்தனி தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆய்வாளர்கள், தங்கள் கட்டுரை சுருக்கங்களை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆய்வாளர்கள் தனிப்பட்ட முறையிலும் பதிவு செய்து கொள்ளலாம். ஆய்வு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம். அடிப்படை சேவை இலவசம் என்றாலும், அமைப்பு நோக்கில் பதிவு செய்ய கட்டணம் தேவை. கட்டணச்சேவையில் ஆய்வாளர்கள் தங்களுக்கான இணைய பக்கத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது. மெலிண்டா கென்வே, சார்லி ராப்லே, டேவிட் சோம்மர் (Melinda Kenneway, Charlie Rapple, David Sommer )ஆகியோர் இந்த தளத்தை துவக்கி நடத்தி வருகின்றனர். ஆய்வாளர்களுக்கான இந்த தளத்தின் நிறை குறைகளை அலசி ஆராயும் ஆய்வுக்கட்டுரை ஒன்று ரிசர்ச்கேட்டில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.