இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது!- முகேஷ்
சதுரங்க ஆட்டத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா குகேஷுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள், குகேஷ் படித்த தனியார் பள்ளியின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் குகேஷ் கலந்துகொண்டார்.
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள டி.குகேஷ் செய்தியாளர்களை சென்னையில் சந்தித்தார்.அப்போது பேசிய உலக செஸ் சாம்பியன் குகேஷ், “உலக சாம்பியன் ஆகவேண்டுமென்பது என்னுடைய சிறுவயது கனவு. என் கனவை நிஜமாக்கி வீட்டுக்கு திரும்புவதில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். நான் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம்தான் ஆகிறது. நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் எவ்வளவு பெருமையாக உள்ளது என்பதை பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இனி வீட்டில் இருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பேன்.இந்த போட்டிகளில் நிறைய உயர்வு தாழ்வுகள் இருந்தன, வேறு மாதிரியான எமோஷன் இருந்தது, 14 ஆவது சுற்றில் வெற்றி வரும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.
எதை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். செஸ் ஒரு சிறந்த விளையாட்டு, அதில் நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதும் என்னுடைய போட்டிகளை நேசித்து மனம் நிறைந்து விளையாடுவேன் நான். இப்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ” என்று பேசினார்.
.
மேலும், “14 ஆவது கூற்றில் சற்று சாதகம் இருக்கும் என்று நினைத்து, அதற்கு தயாராகவே நான் இருந்தேன். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை முதல் முறையாக ஆடுகிறேன் என்பதால் சற்று பதட்டம் இருக்கும் என்று எனக்கு தெரியும். நிறைய நல்ல டிசிஷனை எடுக்கவில்லை, ஆனால் நல்லது நடக்கும் என்று நினைத்தேன். டைபிரேக்கருக்கு ஆட்டம் போகுமென்ற எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், 14 ஆவது சுற்று இருப்பதால் எனக்கு சாதகமான சூழல் வரும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது” என்று கூறினார்.
அத்துடன் “தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் எப்பொழுது நான் வெற்றி பெற்றாலும் என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டி, ரொக்க பரிசு கொடுக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்றதால் கேண்டிடேட் செஸ் போட்டிற்கு தகுதி பெற முடிந்தது.தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பது மட்டுமில்லாமல் நிறைய உதவி எனக்கு செய்துள்ளார்கள், தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றி” என்றும் தெரிவித்தார்.