தனிநபர் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட்!
பொதுநலன் என்ற பெயரில் தனிநபர் சொத்துகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்ப்பை அளித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் 9 பேர் கொண்ட அமர்வு இதுதொடர்பான வழக்கை விசாரித்தது.அப்போது 8 நீதிபதிகள் பெரும்பான்மை அடிப்படையில் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பொதுநலன் என்ற பெயரில் தனிநபருக்குச் சொந்தமான அனைத்து நிலத்தையும் மாநில அரசு கையகப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டனர்.
1986-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு, மகாராஷ்டிரா வீட்டு வசதி திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை சீரமைப்புக்காக அரசு கையப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு சொத்து உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை எதிர்த்து மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.1991-ல் அந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், ஏழைகளுக்கு வீடு வழங்குவது என்பது அரசின் கடமை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, 1992-ம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் சங்கம் மேல்முறையீடு செய்தது. பல்வேறு தரப்பினரும் மகாராஷ்டிரா அரசின் சொத்து கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.கடந்த ஏப்ரல் முதல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில், பொது நலனுக்காகவே இருந்தாலும் அனைத்து தனியார் சொத்துக்களையும் அந்த சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கைப்பற்ற முடியாது என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் சாசன பிரிவு 39(B) பிரிவின் கீழ் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ண ஐயர் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டல், சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பி.வி. நாகரத்னா ஆகிய 7 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஆதரித்த நிலையில், அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சுதான்சு துலியா இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.