For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கூகுள் டூடுல் கொண்டாடும் இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமீதா பானு!

01:41 PM May 04, 2024 IST | admin
கூகுள் டூடுல் கொண்டாடும் இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமீதா பானு
Advertisement

ண்களுக்கான வீரவிளையாட்டு என்று மார்தட்டி சொல்லிவந்த மல்யுத்தத்தி்ல் 320- க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு அத்தனை போட்டிகளிலும் வென்று வாகை சூடியவர் பெண் வீராங்கனை ஹமீதாபானு!. 1940 - 50 காலகட்டத்தில் ஆண்கள் ஆதிக்கம் மட்டுமே இருந்த ஒரு விளையாட்டுத் துறையில் ஹமீதா பானு காலடி எடுத்து வைத்ததை நினைவுகூரும் வகையில் இன்று கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கட்டுமஸ்தான ஹமீதா பானுவின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டு அவர் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர்.

Advertisement

நம் நாட்டு நாளிதழ்கள் மட்டுமல்லாது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நாளிதழ்களிலும் இந்திய மல்யுத்த வீராங்கனையான ஹமீதா பானுவின் பெருமை பேசப்பட்டது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.. இந்தியாவில் பெண்கள் மல்யுத்தம் செய்வது விசித்திரமாக பார்க்கப்பட்ட 1950களில், ஹமீதா பானு ஆண் மல்யுத்த வீரர்களுக்கு ஒரு சவாலாகத் திகழ்ந்தார். இந்த 32 வயது மல்யுத்த வீராங்கனை, ஆண் மல்யுத்த வீரர்களிடம் ஒரு சவால் விடுத்தார். "என்னை யார் மல்யுத்த களத்தில் தோற்கடிக்கிறாரோ அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாம்" என்பதுதான் அவர் விடுத்த சவால்.

Advertisement

இந்தியாவின் முதல் பெண் தொழில்முறை மல்யுத்த வீராங்கனையாகப் புகழ் பெற்ற ஹமீதா பானு, பெண்கள் பலவீனமானவர்களாகக் கருதப்பட்ட இந்த நாட்டின் பாரம்பரியக் கட்டுக் கதைகளைத் துணிச்சலுடன் முறியடித்து வந்தார்.அந்த நாட்களில் மல்யுத்தம் முக்கியமாக ஆண்களின் விளையாட்டாகவே கருதப்பட்டது.ஹமீதா பானு சாதாரண மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவரது எடை, உயரம், அவ்வளவு ஏன் அவரது உணவுமுறையும்கூட செய்திகளில் இடம்பிடித்தது.அவரது எடை 107 கிலோ, உயரம் 5 அடி 3 அங்குலம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தினசரி உணவில் ஐந்தரை கிலோ பால், இரண்டே முக்கால் கிலோ சூப், சுமார் இரண்டேகால் லிட்டர் பழச்சாறு, ஒரு சிக்கன், ஒரு கிலோ மட்டன், 450 கிராம் வெண்ணெய், 6 முட்டை, சுமார் ஒரு கிலோ பாதாம், 2 பெரிய ரொட்டி மற்றும் 2 தட்டுகள் பிரியாணி ஆகியவை அடங்கும். நாளொன்றுக்கு ஒன்பது மணி நேரம் உறங்குவதும், ஆறு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதும் அவரது வழக்கம் என்றும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. அவர் 'அலிகர் அமேசான்' என்று அழைக்கப்பட்டார்.

ஆனாலும் நம் இந்திய சமூகம் பெருமை மிக்க பெண்களின் வரலாறுகள் பலவற்றை திட்டமிட்டே மறைத்து வந்தது போல், பெண் என்கின்ற ஒரே காரணத்திற்காகவும், வழக்கத்தில் இல்லாத ஒன்றை அவர் உருவாக்குகிறார் என்பதற்காகவும், மற்ற பெண்கள் அவ்வாறு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் மற்ற பெண்கள் அவ்வாறு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்திய நாட்டின் முதல் மல்யுத்த வீராங்கனையான ஹமீதா பானுவின் வரலாற்றையும் திட்டமிட்டே மறைத்தே வந்துள்ள நிலையில் கூகுள் டூடுலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

ஹமீதாவைப் பற்றிய கூகுள் டூடுல் விவரிப்பில், “ஹமீதா பானு அவர் காலத்தில் தனக்கென தனி வழி வகுத்து மிளிர்ந்தவர். அவருடைய துணிச்சல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. விளையாட்டைத் தாண்டியும் அவர் தனக்குத் தானே உண்மையாக நடந்துகொண்ட விதத்துக்காகவே அவர் எப்போதும் கொண்டாடப்படுவார்” என்ற பெருமை பொங்கக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.1954 ம் ஆண்டு காலகட்டத்தில் மிகப்பெரும் மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்த ஹமீதா பானு, ரஷ்யாவின் பெண் கரடி என்றழைக்கப்பட்ட வெரா சிஸ்டிலினை வீழ்த்தி உலகப் புகழ் பெற்றார். வெரா சிஸ்டிலினை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் ஹமீதா வெற்றி கண்டதன் மூலம் இணையற்ற வீராங்கனையாக திகழ்ந்தார்.

முன்னரே குறிப்பிட்டது போல்தன்னை மல்யுத்தத்தில் தோற்கடிக்கும் ஆணை திருமணம் செய்து கொள்வதாக சவால் விடுத்தவர் இந்த ஹமீதா பானு. சவாலை ஏற்ற பஞ்சாப் மாநிலத்தின் பிரபல மல்யுத்த வீரர், கொல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு பிரபல வீரர், குஜராத்தை சேர்ந்த வீரர் என மூன்று பேரை அடுத்தடுத்து தோற்கடித்தார். இதே போல பல ஆண் போட்டியாளர்களை அவர் வெற்றி கண்டுள்ளார். அதற்காக ஹமீதா பானு மீது பார்வையாளர்கள் கல் வீசி தாக்கிய நிகழ்வுகளும் உண்டு. ஆம்.. ஹமீதா பானு இந்திய மல்யுத்தத்தின் புனிதமான அரங்கமாக கருதப்பட்ட அமிர்தசரஸ் அரங்கில் களமிறங்கிய போது, தன்னுடன் மோதும் எதிராளியை விட, உள்ளூர் பழமைவாதிகளின் கடுமையான எதிர்ப்புகளையும், மோசமான தாக்குதல்களையும் சந்திக்க வேண்டி வந்தது. பொதுவெளியில் ஒரு பெண் விளையாட்டு உடையை அணிந்துதான் அவர் வரமுடியும் என்பதை ஏற்காத அவர்கள், இந்த விளையாட்டை விட்டே அவர் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஹமீதாவின் ஆன்மாவையே அழித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடும் கற்களை வீசி கலவரத்தைத் தூண்டினர்.பாலியல் அவமதிப்புகளின் வீச்சு அமிர்தசரஸ் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. அவர்களின் கடுமையான கோபமும், எதிர்ப்பும் ஹமீதாபானுவை பஞ்சாப்பை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஹமீதா அந்த மண்ணில் இருந்துதான் வெளியேறினாரே தவிர தன் மனதின் உறுதியில் இருந்து வெளியேறவில்லை.

அக்காலக் கட்டத்தில் அனைத்து தரப்பிலும் இருந்தும் வரும் எதிர்ப்புகளை சமாளித்தவாறே ஹமீதா பானு தான் வெற்றிபெறுவதில் மட்டுமே குறிக்கோளாக இருந்து வந்தார். 1940 மற்றும் 1950 ளில் வட இந்தியாவில் மல்யுத்தம் என்றாலே ஹமீதா பானு என்ற பெயர்தான் கொடிகட்டிப் பறந்தது. பாம்பே கிரானிக்கள் என்ற செய்தித்தாள், கூங்கா பயில்வான் என்ற வீரர் 1944-ல் ஹமீதா பானுவுடன் போட்டியிட தயாராகி பின்வாங்கியது பற்றி கூறுகிறது. போட்டியைக் காண 20000 பேர் கூடியிருந்த நிலையில் கூங்கா பயில்வான் அதிக தொகை கேட்டும் சாத்தியமில்லாத சில கோரிக்கைகளை முன்வைத்தும் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டு அனைத்தையும் போட்டு உடைத்தனர்.

ஹமீதா பானுவைப் பற்றி உத்தரபிரதேச பத்திரிகையாளர் ஒருவர், "ஒரேயொரு முறை பானுவைப் பார்த்தாலே போதும். நாடிநரம்புகளில் எல்லாம் உதறலும் பயமும் தோன்றிவிடும்" என்று எழுதி இருந்ததை நினைத்தாலே இவரின் பலம் புரியும்.. ஹமீதாவின் புகழ் இந்தியாவைத் தாண்டியும் பரவியது. பம்பாயில் 1954-ல் நடந்த போட்டி ஒன்றில் ஹமீதா பானு, ரஷ்யாவின் "பெண் கரடி" என்று அழைக்கப்பட்ட 'வெரா சிஸ்டிலின்' எனும் வீராங்கனையை ஒரே நிமிடத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் என்று அப்போதைய பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தனைதான் திறமைசாலியாக இருந்தாலும் எவ்வளவு வெற்றிகள் பெற்றாலும் ஒரு பெண்ணின் வெற்றி என்பது அத்தனை சீக்கிரம் அங்கீகரிக்கப்படுவதில்லை என்கின்ற கசப்பான உண்மை ஹமீதாவின் வாழ்விலும் தொடர்ந்துகொண்டே இருந்தது. மகாராஷ்டிராவின் புனே நகரில், ஆண் மல்யுத்த வீரர் ராம்சந்திர சாலுங்கே உடன் ஹமீதா பங்கேற்கும் ஒரு போட்டியை உள்ளூர் மல்யுத்தக் கூட்டமைப்பு எதிர்த்ததால் ரத்து செய்யப்பட்டது.மகாராஷ்டிராவில் பெண்கள் மல்யுத்தத்தில் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வந்தவுடன், அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்து விளக்கம் கேட்டார் ஹமீதா. அதற்கு அவர், பெண்ணினம் விளையாடுகிறது என்பதற்காக தடைசெய்யவில்லை. விளையாட்டை நடத்துபவர்கள் மீது பல்வேறு புகார்கள் வருவதாகவதாகவும், ஹமீதாவிற்கு எதிராக டம்மிகள் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் கூறினார். மனம் நொந்துபோய் வெளியே வந்தார் ஹமீதா.

1954-ல் இந்தியாவில் பெற்ற வெற்றிகளை அடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு போட்டிகளில் பங்கேற்கச் செல்ல தயாரானார் ஹமீதா பானு. ஆனால் ஹமீதா வுடன் வாழ்ந்துவந்ததாக சொல்லப்படும் அவரின் பயிற்சியாளரான சலாம் பயில்வான் ஹமீதா ஐரோப்பா செல்வதைத் தடுக்க அவரை கடுமையாகத் தாக்கி கை கால்களை உடைத்துவிட்டார் என்று ஹமீதாவின் வளர்ப்புப் பேரன் ஷேக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ரஹில்கானும் உறுதிபடுத்தி உள்ளனர். கைகால்கள் உடைக்கப்பட்ட பின்னர் மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொள்வதில் இருந்து மாயமானார் ஹமீதா. 1987-ல் இறக்கும் வரை தன் வாழ்க்கையை பால் மற்றும் தின்பண்டங்கள் விற்பதன் மூலம் நடத்திவந்தார்.

அந்த காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டிய வீராங்கனையை தெருக்கோடியில் நிறுத்திய சமூகம் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாகவே கூகுள் டூடுல் மூலம் அறிவுறுத்தியுள்ளது எனலாம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement