தங்கத்தை கையிருப்பு: டாப் 10 உலக நாடுகள் பட்டியலில், இந்தியா அதே 9வது இடம்!.
பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் இரண்டே காரணிகள். ஒன்று தங்கம்..மற்றொன்று கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் முற்றிலும் வர்த்தகம் சார்ந்தது என்பதால் அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் தங்கத்திற்குத் தான் எப்போதும் முதலிடம். என்னதான் நாட்டுக்கு நாடு காகித கரன்சிகள் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றின் மதிப்பு நிலையில்லாதது. ஆனால் தங்கத்தின் மதிப்பு எப்போதுமே ஏறுமுகம் தான். அதனால் எந்த நாடு அதிக அளவிலான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளதோ, அந்த நாட்டின் நாணயம் தான் அதிக மதிப்பு பெறுகிறது. அதனால் தான் உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை இருப்பில் வைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
அதுவும் தங்கத்தை கையிருப்பாக கொண்டிருப்பது வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது. ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில், தங்கத்தின் கையிருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக நிதி நிச்சயமற்ற காலங்களில் நம்பகமும் மதிப்பும் கொண்ட சேமிப்பாக தங்கம் செயல்படுகிறது.1800களின் பிற்பகுதியில் படிப்படியாக உலக நாடுகளின் மத்தியில் இந்த நடைமுறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தங்கள் நாட்டு கரன்சியின் மதிப்பை குறிப்பிட்ட அளவு தங்கத்தின் மதிப்புடன், நிலையான மாற்று விகிதமாக நிர்ணயித்து இணைப்பதன் மூலம் அந்த நாடு தீர்மானிக்கிறது. அதாவது அச்சடித்து வெளியிடப்படும் ஒவ்வொரு அலகு கரன்சியும், அதற்கு சமமான தங்கத்தின் மதிப்பைக் கொண்டுள்ளது எனலாம்.
அண்மைக்காலமாக சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, நாடுகள் மத்தியில் தங்க இருப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது. நாடுகளின் மத்திய வங்கிகள் எப்போதும் தங்கத்தை முதன்மையான மற்றும் பாதுகாப்பான சொத்தாகக் காட்டுகின்றன. நவீன பொருளாதாரத்தின் அளவுகோல்கள் எப்படி மாறினாலும், தங்கத்தின் இருப்பு ஒரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை பாதிக்கும் கருவியாக உள்ளது.
அந்த வகையில் உலக அளவில் தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில், கடந்தாண்டு 795 டன் கையிருப்பு வைத்து 9ஆவது இடம் பிடித்திருந்த நம் இந்தியா இந்தாண்டு 800 டன் தங்கத்துடன் அதே 9வது இடைத்தை தக்கவைத்துள்ளது. பெரும்பாலானோரின் கணிப்பின்படியே 8,1336.46 டன்கள் தங்கத்துடன் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடங்களில் ஜெர்மனி (3,352.65 டன்), இத்தாலி (2,451.84 டன்), பிரான்ஸ் (2,436.88 டன்), ரஷ்யா (2,332.74 டன்) ஆகியவை டாப் 5 இடங்களை முறையே பிடித்துள்ளன.
இந்த வரிசையில் இந்தியாவின் அண்டை தேசமான சீனா 2,191.53 டன் தங்கத்துடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 7 மற்றும் 8வது இடங்களை சுவிட்சர்லாந்து (1,040.00 டன்), ஜப்பான் (845.97 டன்) ஆகியவை முறையே வகிக்கின்றன. 800.78 டன் தங்கத்துடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் பத்தாவது தேசமாக 612.45 டன் தங்கத்துடன் நெதர்லாந்து இடம் பிடித்துள்ளது.