தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பூட்டு முதல் ராக்கெட் வரை சாதனை படைத்த கோத்ரெஜ் குரூப்பில் பாகப் பிரிவினை!

06:34 PM May 01, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் பெரும் நிறுவனம் கோத்ரெஜ். ஒவ்வொரு வீடுகளிலும் கோத்ரேஜ் நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொருளாவது நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என்று சொன்னால் மிகையில்லை. சோப்பு முதல், பீரோ, பூட்டு, வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்து வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்புகளிலும் முன்னணியில் விளங்கும் கோத்ரேஜ் குழுமம் இரண்டாக பிரிகிறது.1897ல் தொடங்கப்பட்ட கோத்ரேஜ் நிறுவனம் சோப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் ரியல் எஸ்டேட் தொழில் வரை பல துறைகளில் முதலீடு செய்து தற்போது வரை லாபகரமாக வெற்றிநடைபோடுகிறது. தற்போது, ஆர்தேஷிர் கோத்ரேஜ் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு, 2 குழுக்களாகப் பிரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மூத்த சகோதரரின் பிள்ளைகள் ஒருபுறமும், இளையவரின் பிள்ளைகள் இன்னொரு பக்கமும் என பிரிகிறார்கள்.அதன் 127 கால வணிகப் பின்னணியில் தற்போது முதல் முறையாக பிளவு கண்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

Advertisement

கோத்ரெஜ் சாம்ராஜயத்தின் ஆதி கோத்ரெஜ் (82) மற்றும் அவரது சகோதரர் நாதிர் (73) ஒருபுறமும், அவர்களது உறவினர்கள் ஜம்ஷித் கோத்ரெஜ் (75) மற்றும் ஸ்மிதா கோத்ரெஜ் கிருஷ்ணா (74) மறுபுறமுமாக இரண்டாக சொத்துக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமம் என்பது கோத்ரெஜ் மற்றும் போய்ஸ் துணை நிறுவனங்களை உள்ளடக்கியது. அவை விண்வெளி, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் என பல துறைகளில் முன்னிலையில் உள்ளன.

Advertisement

இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஜம்ஷித் கோத்ரெஜ் இருப்பார்; அவரது சகோதரி ஸ்மிதாவின் மகள் நைரிகா ஹோல்கர் நிர்வாக இயக்குநராக இருப்பார். மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் பிரதான நிலம் உள்ளிட்ட சொத்துக்களும் இந்த வகையில் அவர்களை சேரும்.கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியது. கோத்ரெஜின் நுகர்வோர் தயாரிப்புகள், கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், கோத்ரெஜ் அக்ரோவெட் மற்றும் அஸ்டெக் லைஃப் சயின்சஸ் உள்ளிட்ட கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு நாதிர் கோத்ரெஜ் தலைவராக இருப்பார். மேலும் இந்த குழுமம் ஆதி, நாதிர் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்படும். ஆதியின் மகன் பிரோஜ்ஷா கோத்ரெஜ், இந்த குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருப்பார். மேலும் நாதிர் கோத்ரெஜ் வகிக்கும் தலைவர் பொறுப்பில் ஆகஸ்ட் 2026-க்குப் பின்னர் பிரோஜ்ஷா கோத்ரெஜ் அலங்கரிப்பார்.

கோத்ரெஜ் குடும்பத்தினர் மத்தியிலான இந்த பங்கு பிரிப்பை பாகப்பிரிவினையாக அல்லாது கோத்ரெஜ் நிறுவன பங்குகளின் உரிமை மறுசீரமைப்பு என்று அழைக்கிறார்கள். கோத்ரெஜ் இரண்டாக பிரிந்தாலும், பிளவுற்ற இரு குழுமங்களும் கோத்ரெஜ் பிராண்டைத் தொடர்ந்து பயன்படுத்துவதோடு, பகிரப்பட்ட பாரம்பரியத்தை வளர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளன.

அடிப்படையில் வழக்கறிஞரான அர்தேஷிர் கோத்ரெஜ் தனது சகோதரருடன் இணைந்து 1897-ல் கையால் தயாரிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களில் கோத்ரெஜ் ஆலமரத்துக்கு விதையூன்றினார். ஆனால் அது தோல்வியடைந்ததில், தற்போதுவரை பிரபலமாக இருக்கும் பூட்டு தொழிலுக்கு மாறியதில் சரித்திர சாதனை படைத்தார்கள். அர்தேஷிருக்கு குழந்தைகள் இல்லாததால், கோத்ரெஜ் குழுமம் அவரது இளைய சகோதரர் பிரோஜ்ஷா மற்றும் குடும்பத்தினருக்கு கைமாறியது.பிரோஜ்ஷாவுக்கு சோராப், தோசா, பர்ஜோர் மற்றும் நேவல் என 4 குழந்தைகள். இவர்களில் சோஹ்ராப்புக்கு குழந்தைகள் இல்லை; தோசாவுக்கு ஒரு வாரிசாக ரிஷாத் இருந்தபோதும் அவருக்கு வாரிசு இல்லை. எனவே பர்ஜோர் மற்றும் அவரது வாரிசுகளான ஆதி, நாதிர் ஆகியோருக்கும், நேவல் மற்றும் அவரது வாரிசுகளான ஜம்ஷித், ஸ்மிதா ஆகியோருக்கும் கைமாறியது. இந்த வகையில் பிரோஜ்ஷாவின் 4 வாரிசுகளில் இருவர் வசம் மட்டுமே கோத்ரெஜ் குழுமம் அடங்கிப்போனது.

தற்போது அடுத்தடுத்த தலைமுறைகளில் வாரிசுகள் அதிகரித்ததில், எதிர்காலத்தின் சிக்கல்களைத் தவிர்க்க தற்போது கோத்ரெஜ் நிறுவனம் அதன் பட்டியலிட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களாக இரண்டாக பிரிந்திருக்கிறது. எனினும் கோத்ரெஜ் என்ற பாரம்பரியத்தின் பெயர் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Tags :
Aadhi GodreAnand SrinivasanFirosha GodrejGodrejNadhir Godrejகோத்ரெஜ்
Advertisement
Next Article