For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச காற்று நாள்!

08:43 AM Jun 15, 2024 IST | admin
சர்வதேச காற்று நாள்
Advertisement

வீனமயமாகி விஞ்ஞான வளர்ச்சியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நமது பூமியின் எதிர்காலத்திற்கு காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், காற்று, மின்சாரம் போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஆம் தேதி உலக காற்று நாள் (Global Wind Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் காற்றின் பங்களிப்பைப் பற்றி சிந்திக்கவும், அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் நமக்கு ஒரு நினைவூட்டலாகும். உலக அளவில் காற்று தினம் 2007ஆம் ஆண்டு முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு, உலக வானிலை அமைப்பும் (World Wind Energy Association) உலக காற்று எரிசக்தி கூட்டமைப்பும் (Global Wind Energy Council) இணைந்து நடத்துகின்றன. இந்த நாளில் காற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி பெரும்பான்மையான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

Advertisement

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை. உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கு வாடை எனவும், தெற்கில் இருந்து வீசும் காற்றுக்கு சோழகம் எனவும், கிழக்கில் இருந்து வீசும் காற்றுக்கு கொண்டல் என்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றுக்கு கச்சான் எனவும் வீசும் காற்றுக்கும் கூட பெயர் வைத்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம். காற்றுக்கு சூரியக் காற்று, கோள் காற்று, வன் காற்று, சூறாவளி காற்று என அறிவியல் ரீதியான பெயர்களும் உள்ளன. சூரியனில் இருந்து வெளியேறும் வளிமங்கள் சூரியக் காற்று எனவும், கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்கள் வெளியேற்றத்தை கோள் காற்று எனவும், குறைந்த நேரத்தில் மிக வேகமாக வீசும் காற்று வன் காற்று எனவும், நீண்ட நேரம் நீடிக்கும் பலமான காற்று சூறாவளி எனவும் அழைக்கப்படுகிறது. பூமியை சூழ்ந்துள்ள காற்று மண்டலம் 79% நைட்ரஜனாலும், 20% ஆக்சிஜனாலும், 3% கரியமில வாயுவாலும், எஞ்சியவை இதர வாயுக்களாலும் நிறைந்துள்ளது.

Advertisement

கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றும் மரங்கள் காற்றின் தோழன். அந்த தோழனை வேரறுப்பதால் நச்சு வாயுக்கள் காற்று மண்டலத்தில் பரவுகின்றன. மேலும் பெருகிவரும் வாகனங்கள் வெளியிடும் புகையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை காற்றில் கலப்பதால் நச்சுப் படலத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட காடுகள், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, வாகனப் புகை போன்ற பல காரணங்களினால் காற்று மாசடைகிறது. காற்று மாசுபாட்டால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன. விஞ்ஞானத்தின் வளர்ச்சியான தொழிற்சாலைகள் வெளியேற்றும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றால் மண்ணில் அமில மழை பெய்வதன் மூலம் மண் எல்லாம் மலட்டுத் தன்மையை கொண்டதாக மாறி வருகிறது. அதிவேக விமானங்களில் இருந்து வெளியேறும் நைட்ரஜன் ஆக்ஸைடும், குளிர்சாதனப் பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவற்றில் இருந்து வெளியேறும் வாயுக்களாலும் ஓசோன் படலம் இன்று ஓட்டையாகிப் போனது. இந்த நிலை நீடித்தால் மண்ணில் உயிரினங்கள் வாழ்வது பெரும் சிக்கலாகிப் போகும். இதனை மாற்ற நாமும் இயன்றதை முயலலாம்.

மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் என்ன ஆகும்?

* கண் எரிச்சல்

* தலைவலி

* தொண்டைக்கட்டு

* காய்ச்சல்

* காச நோய்

* ஆஸ்துமா

* சுவாசக் கோளாறு

* நுரையீரல் புற்றுநோய்

* உரிய வயது முதிர்வுக்கு முன் இறப்பு (Premature Death)

காற்று மாசுபடுவதைத் தவிர்க்க சில வழிகள்:

கார்களையும் ஸ்கூட்டர்களையும் குறைவாகப் பயன்படுத்தி, பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுங்கள்.

குறைந்த தூரங்களுக்கு நடந்து செல்வதையோ அல்லது சைக்கிள் ஓட்டுவதையோ பழக்கப்படுத்துங்கள். இதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படும், காற்று மாசுபாடும் குறையும்.

பாரம்பரிய வாகனங்களைவிட மின்சார வாகனங்கள் குறைவான காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்பதால் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.

மரங்கள் காற்றைச் சுத்திகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, வீடுகளிலும் சாலையோரங்களிலும் மரங்களை நட்டு வளர்ப்பது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

குப்பைகளை எரிப்பது ஆபத்தானது மட்டுமல்ல, காற்று மாசுபாட்டையும் அதிகரிக்கும். குப்பைகளை மறுசுழற்சி செய்தல் அல்லது உரமாக மாற்றுவது சிறந்த வழியாக இருக்கும்.

வாகனத்தைச் சீராக பராமரிப்பதன் மூலம் எரிபொருள் உமிழ்வை குறைத்து, காற்று மாசுபாட்டையும் குறைக்கலாம் .

எனவே, நம்மால் முடிந்தவரை காற்றை மாசுபடுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடாமல், காற்றை தூய்மைப்படுத்தும் நடைமுறைகளை கைக்கொள்வோம். முடிந்தால் மாதம் ஒரு நட்டு வாழும் தலைமுறைக்கு உதவுவோம்

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement