சர்வதேச கை கழுவுதல் தினம்
இன்னமும் நினைவில் இருந்து அகலாத கொரோனா காலத்துக்கு முன்னர் கைகளை கழுவுவதன் மூலம் உயிரை காப்பாற்றி கொள்ளலாம் என்று எவரேனும் சொல்லியிருப்பின், பலரும் வாய்விட்டு சிரித்திருப்பார்கள். ஆனால் கொரோனா தந்த பாடங்களில் ஒன்றாக கை கழுவுதலும் சேர்ந்திருக்கிறது. அக்டோபர் 15 அன்று சர்வதேசளவில் அனுசரிக்கப்படும், கை கழுவுதல் தினம் அதனை நாம் மறவாதிருக்க வலியுறுத்துகிறது.
அதென்ன கைகழுவும் தினம்...' என்று கேள்வி கேட்டவுடன் `சந்தையில் புதிது புதிதாக வரும் சோப்புகளை மார்க்கெட் பண்றதுக்கான ட்ரிக் தான், இந்தக் கை கழுவுற நாள்...' என்று சிலர் பதிலளிப்பதைக் கேட்டிருக்கிறோம்.கை கழுவுதலின் அவசியத்தை முதன்முதலாக ஒரு மருத்துவர், மற்ற மருத்துவர்களிடம் சொல்லும்போதும் இதே எதிர்ப்பைத்தான் சந்தித்தாராம். கலிலியோவின் கண்டுபிடிப்பை ஏற்காத மதவாதிகள் அவரை சிறையில் அடைத்ததைப் போல, `உங்கள் கைகளைக் கழுவுங்கள்...' என ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூற அவரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
1847-ம் ஆண்டு குழந்தைப்பேற்றுக்குப் பிறகு, 5 பெண்களில் ஒருவருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் முழுவதும் சீழ்பிடித்து இறந்திருக்கின்றனர். இதைக் கண்ட `இக்னாஸ் செம்மல்வீல்ஸ்' என்ற மகப்பேறு மருத்துவர், பிரசவம் பார்க்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் பிரசவம் பார்க்கும் முன் குளோரின் நீரில் கைகளைக் கழுவுவதன்மூலம் பிரசவக்காலத்துக்குப் பிறகான இறப்பைத் தடுக்கலாம் என்பதை உணர்ந்தார். அதை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் அவர் வலியுறுத்த அவரது கருத்துகள் ஏற்கப்படாததுடன் அப்போதைய அரசு, அவரை மனநல காப்பகத்தில் உள்ள தனிமைச் சிறையில் அடைத்தது. கை கழுவுதலின் அவசியத்தை நன்கு உணர்ந்திருந்த டாக்டர் இக்னாஸ், சிறையிலும் கிருமித் தொற்றினைத் தடுக்கும் முறைகள் பற்றித் தொடர்ந்து பேசி வந்ததுடன் அதுபற்றிய புத்தகங்களையும் எழுதினார். அவர் செய்த அந்தச் செயல்களுக்குத் தண்டனையாக அவரை அடித்துக் காயப்படுத்தினர். இதனால் அவரது உடல் முழுவதும் கிருமிகள் பரவி, பிரசவத்துக்குப் பிறகு இந்தப் பெண்களைப் போலவே, இக்னாஸும் உயிரை இழந்தார்.
இதையடுத்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு அதே டாக்டர் இக்னாஸின் ஆய்வை முன்னிறுத்தி ஜோசப் லிஸ்டர் என்ற மருத்துவர் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறைகளைப் பரிந்துரைத்தார். அதேபோல், லூயிஸ் பாஸ்டர் நோய்க் கிருமிகள் ஒழிக்கும் முறையைப் பரிந்துரைத்தார். இவர்கள் இரண்டுபேரும் சொன்னதையடுத்தே கை கழுவுதலின் அவசியம் மருத்துவ உலகத்துக்குப் புரிந்ததாம். அன்றிலிருந்து இன்று வரை, மருத்துவ உலகம் மக்களிடம் கை கழுவுதலின் அவசியத்தை வலியுறுத்தும்போதெல்லாம், இதுபோல சில எதிர்ப்புகளைச் சந்தித்துதான் வருகிறது.
வளர்ந்த மற்றும் ஏழ்மை நாடுகளில் அதிகளவிலான உயிர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் பலியாவதற்கு, முறையாக கை கழுவும் பழக்கம் இல்லாததே காரணம் என கண்டறியப்பட்டது. இறப்புகளுக்கு வித்திடக் காரணமான வயிற்றுப்போக்கு முதல் சுவாச தொற்று மற்றும் காலரா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் சோப்புகள் கொண்டு கை கழுவுவதன் மூலம் நிவர்த்தி பெறலாம்.2008, அக்.15-ல் உலகளாவிய கை கழுவுதல் தினம் அறிமுகமானபோது, உலகின் 70 நாடுகளைச் சேர்ந்த 12 கோடி குழந்தைகள் ஒரே நேரத்தில் கைகளை கழுவி, உலகளாவிய கை கழுவுதல் விழிப்புணர்வில் பங்கெடுத்தார்கள். அப்போது அதனை அலட்சியம் செய்தவர்கள் கூட, கொரோனா காலத்தில் உயிரச்சத்தோடு கைகளை அடிக்கடி கழுவிப் பழகினார்கள்.
கைகளை கழுவுவதன் மூலமே சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு வித்திடும் சிறப்பான வழிகாட்டுதல்களை, இந்த நாளில் பழக்கலாம். தனி நபர் சுகாதாரம் மட்டுமன்றி பொதுசுகாதாரத்திலும் கை கழுவுதலுக்கு முக்கிய இடம் உண்டு.புற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரைநோய், ரத்தக் கொதிப்பு, எய்ட்ஸ் ஆகியவை பெரியவர்களுக்கு எப்படி உயிர்க்கொல்லி நோயாக இருக்கிறதோ, அதேபோல 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு முக்கியக் காரணமாக விளங்குவது வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா காய்ச்சல் என்கிறது சிடிசி (CDC)என்ற உலக நோய் எதிர்ப்பு அமைப்பு.
உலகளவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 14 லட்சம் குழந்தைகளை வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா நோய் காரணமாக நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் மட்டுமே கைகளை ஒழுங்காகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கினால், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒரு லட்சம் குழந்தைகளை இழக்கவும் நேரிடுகிறது. முறையான கைகழுவுதல், இந்த நோய்கள் பரவுவதைப் பெருமளவு தடுப்பதுடன், இத்தனை லட்சம் குழந்தைகளையும் காக்க முடியும் என்பதால், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதியன்று உலக கை கழுவும் நாளாக அனுசரித்து வருகிறது உலக சுகாதார அமைப்பு.
பொதுவாகவே எந்தவொரு பொருளைத் தொடும்போதும் நமது கைகளிலும், விரல்களிலும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நூற்றுக்கணக்கான கிருமிகள் உயிர்வாழ்வதுடன் பரவவும் செய்கின்றன. அதனாலேயே, மருத்துவ உலகம் மனிதக் கைகளை, `கிருமித் தொழிற்சாலை' (Germ Factory) என்று அழைக்கிறது. இந்தக் கிருமித்தொழிற்சாலையில் எப்போதும், ஸ்டேஃபிளோகோகஸ் எபிடிர்மீடிஸ் (Staphylococcus epidermidis), புரோப்யோனிபாக்டீரியம் (Propionibacterium), டிப்திராய்ட்ஸ் (Diphtheroids) போன்ற வீரியம் குறைந்த பாக்டீரியாக்களும், சில நேரங்களில் ஈ கோலி (E.coli), ஷிகெல்லா (Shigella), ஸ்டீஃபிலோகோகஸ் ஆரியஸ் (Staphylococcus aureus), ஸ்டெப்டோகோகஸ் (Streptococcus) போன்ற வீரியம் நிறைந்த பாக்டீரியாக்களும் காணப்படுகின்றன..
கழுவப்படாத அசுத்தமான விரல்களின் மூலம் உடலின் உள்ளே நுழையும் இந்த பாக்டீரியாக்களின் வீரியத் தன்மையைப் பொறுத்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காலரா, டைஃபாய்டு, சீதபேதி, அமீபியா வயிற்றுப்போக்கு, நிமோனியா, கண்நோய் எனப் பற்பல நோய்களை ஏற்படுத்துகின்றன. பாக்டீரியா நோய்கள் மட்டுமன்றி ஹெபடைடிஸ் நோய், ஃபுளூ காய்ச்சல், மஞ்சள்காமாலை, எபோலா நோய் போன்ற வைரஸ் கிருமிகளைப் பரப்புவதிலும் நமது கைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. அதனால்தான், கைகளைக் கழுவுவதன் அவசியம் பற்றியும், கைகளைக் கழுவும் முறைகள் பற்றியும், அதனால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நாளாக இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. முறையான கைகழுவுதலை குழந்தைகளிடையே தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டும். வயிற்றுப்போக்கை 50 சதவிகிதமும், நிமோனியா காய்ச்சலை 25 சதவிகிதமும் குழந்தைகளிடையே குறைக்க முடியும் என்கிறது யுனிசெஃப்.
தினமும் கைகளைக் கழுவிக் கொண்டுதானே இருக்கிறோம். அது என்ன முறையான கைகழுவுதல் என்று சிலர் கேட்கலாம். நாம் பிறந்த முதல் வருடத்திலிருந்து நடந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஒரு ராணுவ வீரரின் நடை நேர்த்தி எப்படி நம்மிடம் இருப்பதில்லையோ, அதேபோல நாம் இத்தனை வருடங்களாகக் கைகளைக் கழுவினாலும், முறையாகக் கழுவுவதில்லை என்பதுதான் உண்மை. `கைகழுவுதல் என்பது நாம் தினந்தோறும் செய்யும் செயல்தான் என்றாலும் கட்டை விரல், அனைத்து விரல்களின் நகங்கள், விரல் இடுக்குகள், புறங்கை ஆகியவற்றைக் கழுவும்போது எளிதில் விடுபட்டுப் போகும் இடங்கள் என்பதாலேயே கைகழுவுதலுக்கு முறையான வழிமுறைகள் தேவை' என்கிறார்கள் மருத்துவர்கள்
நிலவளம் ரெங்கராஜன்