உங்கள் பொன்னான வாக்கை டிரம்புக்கு அளிச்சிடுங்கோ..ஏன்னா?
அமெரிக்காவில், இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள்!இந்தநேரத்தில், 2024 என்ற எண், 20ஆல் வகுபடுமா? என்று அமெரிக்கர்கள் பலபேர் கணக்குப் போட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஏன்? என்ன காரணமாம்?அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிற ஆண்டை 20ஆல் வகுக்க முடிந்தால், அந்த ஆண்டில் வெற்றி பெற்று பதவிக்கு வரும் அதிபருக்கு அது ஆபத்தாக முடியுமாம்.இருபதால் வகுபடுகிற ஆண்டில் ஆட்சிக்கு வரும் அமெரிக்க அதிபர் ஒன்று படுகொலையாவார். அல்லது பதவியில் இருக்கும்போதே உடல்நலக்குறைவால் இறந்து போவார்.இதை ஒரு சாபம் என்கிறார்கள். இந்த சாபத்துக்கு Curse of Tippecanoe என்று ஒரு பெயர் கூட இருக்கிறது.
இந்த சாபம் 1840ஆம் வருஷத்தில் அதிபர் வில்லியம் ஹென்றி ஹாரிசனில் இருந்து ஆரம்பமானது. 1840ஆம் ஆண்டு, அவர் அதிபராகப் பதவியேற்ற ஒரே மாதத்திலே நிமோனியா வந்து இறந்து போனார். இருபது ஆண்டுகள் கழித்து அதிபரான ஆபிரகாம் லிங்கன் பதவியில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்குப் பிறகு வந்த ஜேம்ஸ்.ஏ. கார்பீல்ட், வில்லியம் மெக்கன்லி, வாரன் ஜி ஹார்டிங், பிராங்ளின் டி ரூஸ்வெல்ட், ஜான் எஃப் கென்னடி.. இப்படி அமெரிக்க அதிபர்களில் பலர் படுகொலையானார்கள் அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்கள். எல்லாம் இந்த சாபத்தின் மகிமைதானாம்.ஆனால் இந்த சாபத்தை முதல்முதலாக உடைத்த புண்ணியவான் ரொனால்ட் ரீகன்தான். 1980ஆம் வருஷம் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து ரீகன் தப்பித்தார். அதற்குப்பிறகு அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இப்போது நடப்பு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வருவோம். தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக நிற்பவர் டொனால்ட் டிரம்ப்.இந்தநிலையில் டொனால்ட் டிரம்ப்புக்கு நண்பர் ஒருவர் இப்படி யோசனை சொல்லியிருக்க வேண்டும். ‘ப்ரோ! இந்த தேர்தல் 20ஆல் வகுபடுற 2024ல் வருது. நீங்க வெற்றி பெற்று அதிபராயிட்டா உங்களுக்கு ஆபத்து இருக்கு. அதேவேளையில் நீங்க ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பிட்டா. சாபம் உங்களை ஒண்ணும் செய்யாது. ஆகவே….’ இப்படி நண்பர் ஒருவர் டிரம்ப் காதில் சொல்லியிருக்கலாம். இதே ஆண்டு ஜூலை மாதம் டொனால்ட் டிரம்ப், ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பினார். (இது அவரே ஏற்பாடு செய்த வேலையோ? கியாரே செட்டிங்கா? என்று யாரும் நினைக்கக் கூடாது. பெரிய மனிதர்களை சந்தேகப்படக்கூடாது. தப்பு!)
ஆக, கொலை முயற்சியான துப்பாக்கிச் சூட்டில் இருந்து ஒருமுறை தப்பிவிட்டதால் இனி சாபம் வேலை செய்யாது என்று டிரம்ப் தரப்பு நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை(!)அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெறக்கூடாது என்றே இதுவரை நான் நினைத்திருந்தேன். டிரம்ப் வெற்றி பெற்றால், ஏற்கெனவே எகிறிக் குதித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலை கையில் பிடிக்க முடியாது. மூன்றாம் உலகப்போர் வரவும்கூட வாய்ப்புண்டு. ஆனால், அமெரிக்கத் தேர்தலில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று அதிபராகித்தான் ஆக வேண்டும் என்றநிலையில், இப்போது, கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்குப் பதிலாக டிரம்ப் வெற்றிபெறுவது நல்லது என்று தோன்றுகிறது
அந்த வகையில் நான் திடீரென டிரம்ப் ஆதரவாளராக மாறி விட்டேன்.அமெரிக்காவில் இன்றுமாலை ஐந்தரை மணியளவில்தான் வாக்குப்பதிவு தொடங்குகிறதாம். எனவே, இறுதிக்கட்ட (பர)பரப்புரையில் இறங்குகிறேன்.‘அமெரிக்கா வாழ் வாக்காளப் பெருங்குடி மக்களே! இன்று நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அருமை அண்ணன் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு யானைச் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு உங்களை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி, வேண்டி விரும்பி, கெஞ்சி மன்றாடி (குனிந்து கும்பிட்டு விழுந்து) கேட்டுக் கொள்கிறேன். மறந்து விடாதீர். நமது வேட்பாளர் டொனால்ட் டிரம்ப். நமது சின்னம் யானைச் சின்னம்!
(பின்குறிப்பு: என்ன ஒரு வில்லத்தனம்?)