For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஏலியனை மெய்யாலுமே சந்தித்து ஹலோ சொல்லத் தயாராகுங்கள்!

06:54 AM Apr 28, 2024 IST | admin
ஏலியனை மெய்யாலுமே சந்தித்து ஹலோ சொல்லத் தயாராகுங்கள்
Advertisement

லியன்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ எழுவதுண்டு. ஏலியன்கள்’ என்றழைக்கப்படும் அந்நிய கிரக ஜீவராசிகள் குறித்து நம்ம எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963ஆம் வெளியான விண்வெளி குறித்த முதல் தமிழ் படம் கலை அரசி. அப்போதிருதே ஏலியன்கள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கற்பனைகளும் இருந்து வருகின்றன என்பதற்கு அதுவே சாட்சி. அது சரி ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? இதற்கு எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் தான் பதில் சொல்ல வேண்டும். “இருக்காங்க, ஆனா இல்ல...”. ஆம் இப்போது கூட பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட உயிர்க்கோளமான பூமிக்கு அப்பால், அதே போன்ற இன்னொரு கிரகத்தில் உயிர்களின் சாத்தியத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்திருக்கிறது.

Advertisement

வானில் ஏலியன்களை போன்ற உருவங்களைப் பார்த்ததாகப் பல பதிவுகள் இணையதளத்தில் (Internet) ஆங்காங்கே காணப்படுவதை நாம் கவனித்திருப்போம். ஆனால், அவற்றின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படாத ஒன்று. சமீபத்தில், அமெரிக்காவின் இராணுவம் (American army) ஏலியன்களை பற்றி வெளியிட்ட ஒரு பதிவில், ஏலியன்களின் இருப்பை உறுதி செய்வது போலத் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தான், மக்கள் மத்தியில் ஏலியன்கள் உண்மையாக இருக்குமோ? என்பது போன்ற கருத்துக்கள் அதிகம் பரவ ஆரம்பித்தன. இப்போது சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தை, உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளுடன் ஜேம்ஸ் வெப் விண்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை ஏவப்பட்டவற்றில் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தந்திருக்கும் தரவுகள், விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளன.

Advertisement

கடந்த ஜனவரியில் அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து கீழே இறங்கி வந்ததாக ஒரு தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்தது. அதாவது அமெரிக்க நாட்டில் உள்ள ப்ளோரிடா மாகாணம், மியாமி பகுதியில் மால் ஒன்று அமைந்துள்ளது. அந்த மாலில் 10 அடி உயரம் கொண்ட ஏலியன் ஒன்று சுற்றித் திரிவதாக திடீரென புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டளது. அதேபோல் மியாமி மாலுக்கு மேலே ஏலியன்கள் வாகனங்கள் என பரவலாக கூறப்படும் பறக்கும் தட்டுகளின் வெளிச்சம் தென்பட்டதும் இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டது. இதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் இந்த வீடியோ மற்றும் ஏலியன் வருகை எல்லாமே சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என, தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் K2-18b கிரகம் பலவகையிலும் பூமியை ஒத்துள்ளது. பூமியின் அளவில் 2.6 மடங்கு பெரிதான K2-18b, பூமி போன்றே கடல்கள் சூழ அமைந்துள்ளது. கூடவே இந்த கிரகம் உயிர்கள் வாழத் தகுதியானது என்பதை நிரூபிக்கும் தரவுகளும் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இவை உலகம் முழுக்க விண்வெளி அறிவியலாளர்களை K2-18b திசைக்கு திருப்பியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கிரகத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டாலும், அண்மை ஆய்வுகள் அதில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் உறுதிசெய்து வருகின்றன.

குறிப்பாக உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட ஆய்வுகள் மேற்படி கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு இருப்பை உறுதிப்படுத்த முயன்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும் என்றும் நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருக்கும் ஏலியன்கள் அல்லது ஏதோவொரு உயிர்களை, மேலும் நெருக்கமாக ஆராய்வதற்கு பூமிக்கும் K2-18b கிரகத்துக்கும் இடையிலான தொலைவு பெருந்தடையாக உள்ளது. 124 ஒளியாண்டுகள் தொலைவு என்பது, K2-18b கிரகத்தை நோக்கி பயணம் மேற்கொள்வதில் மனிதனின் அற்பமான ஆயுளோடு ஒப்பிடுகையில் மிகப் பிரம்மாண்டமானது.

மணிக்கு 38,000 மைல் வேகத்தில் சீறும் வாயேஜர் விண்கலத்தில் ஏறி விரைந்தாலும் கூட, அந்த கிரகத்தை அடைய சுமார் 22 லட்சம் ஆண்டுகள் ஆகும். தலைசுற்றச் செய்யும் இந்த தொலைவுதான் K2-18b ஏலியனுக்கும் நமக்கும் இடையே பெரும் தடையாக இருக்கிறது. இதற்கு தீர்வு தரும் தொழில்நுட்பம் கண்டறியப்படும்போது K2-18b ஏலியனை மெய்யாலுமே சந்தித்து ஹலோ சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயமாகி இருக்கிறது. நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இல்லை.

இச்சூழலில் இப் பிரபஞ்ச ரகசியங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோமா?

* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடம், 20 விநாடிகள் ஆகிறது.

* சூரியனின் ஒளிக்கு எடை உண்டு. சதுர மைல் பரப்பில் விழும் சூரிய ஒளியின் எடை மூன்று பவுண்ட்.

* சூரியனைப் பூமி சுற்றும் வேகம், துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டின் வேகத்தைப் போல் எட்டு மடங்கு.

* சந்திரன் பூமியை நோக்கி, ஒவ்வொரு ஆண்டும் அரை அங்குலம் நகர்ந்துவருகிறது.

* செவ்வாய் கோளின் வானம் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது.

* வியாழன் கோளின் ஒரு சந்திரனின் பெயர், ’அயோ’

* தொலைநோக்கி வசதியின்றி, வெற்றுக் கண்களால் பார்க்கக்கூடிய கோள், வீனஸ் - வெள்ளி அல்லது சுக்கிரன் (விடி வெள்ளி).

* விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம், லைகா என்கிற நாய். அந்நாய், 1957-ம் ஆண்டு, ரஷ்ய விண்கலத்தில் பரிசோதனை முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

* மின்னலின் வேகம் விநாடிக்கு 1.90 லட்சம் மைல்.

* ஒரு மழை மேகத்தில், சராசரியாக 6 டிரில்லியன் (லட்சம் கோடி) நீர்த்துளிகள் இருக்கும்.

இந்த ரகசியங்களுடன் மேற்படி ஏலியனுக்கு இரண்டு இதயம் என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement