ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு!
ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிகளவு காணப்படும் சிவப்பு எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டவை. அப்பகுதியினர் இந்த சிவப்பு எறும்புகளை பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த பகுதியில் இது ‘காய் சட்னி’ என்று அழைக்கப்படுகிறது. இதில் எறும்புகளோடு அதன் முட்டைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இதனை வெள்ளைப்பூண்டு, இஞ்சி, ஏலக்காய், புளி உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து சட்னியாக பயன்படுத்துகிறார்கள். இதனை பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.நல்ல சுவையோடு இதற்கு சிறந்த மருத்துவ குணம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் இதனை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த உணவுக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த 2ம் தேதி இந்த சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் பல நூற்றாண்டுகளாக பூச்சிகள் உணவு ஆதாரமாக உட்கொள்ளப்படுகின்றன. ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், சிவப்பு எறும்புகள் சட்னி அல்லது "காய் சட்னி" என்று அழைக்கப்படும் நீர் அரை-திடமான பேஸ்ட் வடிவத்தில் சட்னி உட்கொள்ளப்படுகிறது. இந்த சட்னி அதன் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து குணங்களுக்காக இப்பகுதியில் புகழ் பெற்றது. ஒடிசாவின் பழங்குடி சமூகத்தில் இருந்து உருவான இந்த தனித்துவமான சட்னியின் சிறப்பு என்ன என்று தெரிந்துக் கொள்வோமா!
இந்த சட்னி சிவப்பு எறும்புகள் அல்லது ஓகோஃபில்லா ஸ்மரக்டினாவால் செய்யப்படுகிறது. சிமிலிபால் மற்றும் மயூர்பஞ்ச் காடுகளில் பொதுவாகக் காணப்படும் இந்த வகை எறும்புகள் மிகவும் வலிமையானவை. இவை நம் தோலில் பட்டால் அவ்வளவு தான், வலியும் கொப்பளமும் ஏற்படுகிறது. ஆனால், நீண்ட காலமாக, இம்மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பங்கள் இந்த எறும்புகளை பிரதான உணவாக உட்கொண்டுள்ளனர்.
எறும்புகள் மற்றும் அவற்றின் முட்டைகள் அவற்றின் கூடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு முன்பு சுத்தம் செய்யப்படுகின்றன. உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை அரைத்து சட்னி தயாரிக்கப்படுகிறது. இதேபோன்ற சிவப்பு எறும்பு சட்னிகளை ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற கிழக்கு மாநிலங்களிலும் காணலாம்.
இந்நிலையில்தான், இந்த சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கேட்டு ஒடிசா அரசு சார்பில் புவிசார் குறியீடுக்கு (Geographical indication) விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை பரிசீலித்த அமைப்பு, புவிசார் குறியீடு அளித்துள்ளது.இதையடுத்து, இந்த சட்னியின் தரத்தை உறுதிப்படுத்தி உலகளவில் எடுத்துச் செல்ல முடியும் என அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புவிசார் குறியீடு என்பது, ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த நகரம், வட்டாரம், நாடு போன்ற இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்புக்கான சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.