ஜென்டில்வுமன்-பட விமர்சனம்!
மாதமொரு முறை போகும் முடி திருத்தும் இடம் தொடங்கி தினமும் நான்கு தடவை போகும் டீக்கடை போன்ற இடங்களில் பெரும்பாலும் வாங்கி வைக்கப் படும் நாளிதழ்கைகளை பார்த்தால் ஒரேயடியாகக் கள்ளக் காதல் சம்பவங்கள் மிகுந்து இருக்கும். கள்ளக் காதலால் மனைவியைக் கொன்ற கணவன், கணவனைக் கொன்ற மனைவி, பெற்றப் ப்பிளைகளையே கொன்ற தாய் என்று பல சமாச்சாரங்கள் தினம் தினம் அது உரக்கச் சொல்கிறது. இதைப் படிக்கக்கூட ஒரு தனிக் கூஉட்டம் இருக்கிறதோ என்று தோன்றும். இல்லாது போனால் செய்தித்தாள்கள் இவற்றை மட்டுமே நம்பி நடத்த முடியுமா..? இச்சூழலில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற காலம் மலையேறிவிட்டது என்பதை உரத்துச் சொல்லியிருக்கும் படமே ஜெண்டில்வுமன்.
அதாவது சிங்காரச் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் ஹரி கிருஷ்ணனுடன் வசிக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் மீது கணவர் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என்று நினைக்கும் போது, கணவரின் செல்போன் மூலம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். இதனால் அதிர்ச்சியும், கடும் கோபமடையும் லிஜோமோல் ஜோஸ், கணவரை கொலை செய்து விடுகிறார். இரத்த வெள்ளத்தில் கணவர் இறந்ததை பார்த்து சற்றும் கலங்காதவர், கணவர் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு, சாதாரணமாக தனது வேலையை பார்க்க தொடங்குகிறார். இதற்கிடையே, ஹரி கிருஷ்ணன் காணவில்லை என்று அவரது காதலி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீசார், ஹரி கிருஷ்ணனுக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டுபிடித்தார்களா?, கணவரை கொலை செய்துவிட்டு சகஜமாக உலா வரும் லிஜோமோல் ஜோஸ் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாரா? இல்லையா ? என்பதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் சொல்வதே ‘ஜென்டில்வுமன்’.
ஹீரோயின் லிஜோமோல்ஜோஸின் அழகைப் பார்த்து மகிழும் ஆண்கள் இப்படத்தில் அவர் செய்யும் கொலைக் கண்டு மிரண்டு போவார்கள் என்பது நிச்சயம்.படத்தின் பெயருக்குத் தக்க இருக்க வேண்டும் என்பதற்காக கொலையைச் செய்துவிட்டு மிக இயல்பாக நடந்துகொள்ளும் விதமாக அவர் கேரக்டரைஎழுதியிருக்கிறார்கள் அதற்கு மிகப் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். ஒரு ஆண் நல்லவன் என்பதற்கு அடையாளம் கடவுள் பக்தி நெற்றியில் பட்டை போடுவது என்று காட்டி இருக்கிறார்கள்.ஆனால் அது ஒரு முகமூடி என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.இந்த வேடத்தை ஏற்று சரியாக நடித்திருக்கிறார் ஹரிகிருஷ்ணன்.அவருடைய கண்களும் முகமும் வேடத்துக்கு மொத்தமாக ஒத்துப்போகின்றன.இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, ஆணின் மீது முழுநம்பிக்கை வைக்கும் பெண்கள் எப்படியிருப்பார்கள்? என்பதற்கு எடுத்துக்காட்டான வேடமேற்று நன்றாக நடித்திருக்கிறார்.
லிஜோமோல் ஜோஸின் சிஸ்டராக வரும் தாரணி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, போலீஸ் இணை ஆணையராக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் வைரபாலன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, தனது சொந்த ஊர் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் சுதேஷ், காவல்துறையின் உயர் அதிகாரி வேடத்திற்கு அளவு எடுத்து தைத்தது போல் கச்சிதமாக பொருந்துவதோடு, காவல்துறையில் நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.
மியூசிக் டைரக்டர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. கேமராமேன் காத்தவராயனின் ஒளிப்பதிவு காட்சிகளை உறுத்தாத அளவில் எக்ஸ்போஸ் செய்துள்ளது. எடிட்டர் இளையராஜா சேகர் கத்திரியை மீரி வசனக் காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்ப்பார்ப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் வகையில் நேர்த்தியாக காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
பெண்கள் எந்த நிலைக்கு சென்றாலும், அவர்களை ஆண்கள் தங்களுக்கு கீழே தான் வைத்திருக்கிறார்கள், உள்ளிட்ட வசனங்கள் மூலம் பெண்ணியம் பேசினாலும், அதை கிரைம் சஸ்பென்ஸ் ஜானரோடு சேர்த்து கமர்ஷியலாக சொல்ல் முயன்றிருக்கிறார் டைரக்டர் ஜோஸ்வா சேதுராமன். ஆனால் தான் சொல்ல வந்தது எல்லாம் சினிமாத்தனமாகவும், நம்பும்படியாகவும் இல்லாதது பலவீனப்படுத்தி விட்டது.
மொத்தத்தில் இந்த ஜெண்டில்வுமன் - வெள்ளித்திரை சீரியலை விட பெட்டர்
மார்க் 3/5