கங்கா ஸ்நானமா? இனிமே கனவில் மட்டும் நீராடுங்க!
சகல பாவங்களுக்கும் விமோட்சனம் கொடுக்கும் ஆற்றல் கங்கை நதிக்கு உள்ளது என்பது ஐதீகம். அதனால் தான் புண்ணிய நதியான கங்கையில் நீராட மக்கள் படையெடுக்கின்றனர். கங்கை நீரை வீட்டில் வைப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கங்கை நீரில் பொதுமக்கள் யாரும் நீராட வேண்டாம். ஏனெனில், நீராடுவதற்கு தகுதியற்றதாக கங்கை நீர் உள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லட்சக்கணக்கான இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது. இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றன்ர். அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது. தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால்,அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.
இந்நிலையில் கங்கை நதி மிக மோசமாக மாசுபட்டு இருப்பதால் நீராட உகந்ததல்ல என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இந்த கருத்தையே தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் கூறியுள்ளது.கங்கை நீர் மாசுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்க அரசு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து இருந்தது. இந்த நிலையில், அதைத் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆய்வு செய்தது. இதன் முடிவில், பல அதிர்ச்சியூட்டும் தகவலை பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
வடக்கு 24 பர்கானாஸ், முர்ஷிதாபாத், நாடியா, மால்டா, ஹூக்ளி, புர்பா பர்த்வான், ஹவுரா, பர்பா மேதினிபூர் எனப் பல மாவட்டங்களில் அறிக்கையை ஆய்வு செய்த தீர்ப்பாயம் கங்கை நதியின் நிலை மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக 24 பர்கானாஸ். மாநிலம் முழுவதும் போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு இல்லை. பூர்பா மேதினிபூர் போன்ற சில மாவட்டங்களில், ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
கங்கை நீரில் மலக் கோலிஃபார்ம் என்ற பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் முழுப் பகுதியும் குளிப்பதற்குத் தகுதியற்றதாக இருப்பதாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் 258.67 மில்லியன் லிட்டர்கள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக கலப்பதாகவும், இது மிகப் பெரிய சுகாதார அபாயத்தை ஏற்படுவதாகவும் இதனால், அப்பகுதி மக்களின் உடல் நலமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
இது இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனித நீரான கங்கையைக் காக்க தவறியதே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.