நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழந்தது!
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்த பெற்ற, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பழமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இக்கோயில் விழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் சுவாமிக்கு முன் செல்லும் காந்திமதி என்ற பெயர் கொண்ட யானை உயிரிழந்து விட்டது.
நெல்லையப்பர் கோயிலில் உள்ள யானை காந்திமதி (56), நன்கொடையாளர்களால் 1985ல் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக காந்திமதி உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் படுத்த யானையால் மீண்டும் எழ முடியவில்லை. எனவே கோயில் அதிகாரிகள், கால்நடைத்துறை டாக்டர்கள் முன்னிலையில் யானை கிரேன் பெல்ட் மூலம் கட்டி துாக்கி நிறுத்தப்பட்டது. எனினும் நிற்க முடியவில்லை.
நேற்று முன் தினம் இரவு நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வலி தாங்காமல் அப்படியே சாய்ந்து படுத்து விட்டது. நேற்று காலை யானையை எழுப்பும் முயற்சியில் பாகன் ஈடுபட்டபோது அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக எனவே கோவில் நிர்வாகத்தினர் மருத்துவக் குழுவினருக்கு தகவல் அளித்தனர்.
தலைமை மருத்துவர் டாக்டர் முருகன், மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் மனோகரன், மதுரை பன்னோக்கு கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன், மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் மாதேஷ், டாக்டர் செல்வ மாரியப்பன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் யானை காந்திமதியை நேரில் வந்து ஆய்வு செய்து, யானையின் ரத்த மாதிரிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. காந்திமதி யானை, நெல்லை மக்களின் அன்பைப் பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காந்திமதி யானையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். காந்திமதி யானைக்கு, அன்போடும், பாசத்தோடும் உணவுப்பொருட்களை நெல்லை மக்கள் வழங்கி வந்தன. கோவில் யானை காந்திமதி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காந்திமதி உயிரிழந்ததைஅடுத்து நெல்லையப்பர் கோயில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு மோட்ச கால பூஜைகள் நடைபெற்ற நிலையில், யானை உடல் அருகே அமர்ந்து அதன் பாகன் கதறி அழுதார். இதை தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த திரளான மக்கள், காந்திமதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின் யானை கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது அமைச்சர் கே.என்.நேரு யானைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்திய நிலையில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடிநின்று யானைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து யானையின் உடல் தாமரைகுளம் மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.