காமி (Gaami) -தெலுங்குப்பட விமர்சனம்!
நம் நாட்டில் பலவிதமான மதங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் பலவிதமான நம்பிக்கைகள், விசித்திரமான சமய சடங்குகள், வழிபாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வாழ்க்கையை துறந்து காவி கட்டி திரிபவர்கள் துறவிகள், சாதுக்கள் என பல பெயர்களால் அழைக்கிறோம். முனிவர்கள், துறவிகள், ரிஷிகள் என இறை சிந்தனையுடன், இறை நிலையை உணர்ந்து இறைவனோடு கலக்க முயற்சி செய்பவர்களை பல பெயர்களில் அழைக்கிறோம். இவர்களில் ஒரு வகையினர் அரோகிகள் என்றும், அகோரி சாதுக்கள் என்றும் சொல்கிறோம். இவர்களின் உலகம், சடங்குகள், வழிபாட்டு முறைகள் என அனைத்தும் அமானுஷ்யங்கள் நிறைந்தவையாக இருக்கின்றன. அகோரிகள் என்றாலே ஆடை இல்லாமல் திரிவார்கள், மண்டை ஓடுகளை வைத்து பூஜை செய்வார்கள், மிருகங்களை பலி கொடுப்பார்கள், இறந்த மனிதர்களின் உடல்களை சாப்பிடுவார்கள் என பல விதமாக தோற்றங்கள் நமது கண்முன் வந்து போகும்.
இப்படியான சூழலில் ஹீரோ விஷ்வக்சென் ஒரு அகோரி கேரக்டரில் வாரணாசியில் வசித்து வருகிறார். மனிதர்கள் எவரேனும் அவரை தொட்டு விட்டால் அவரது உடல் முழுவதும் கருப்பாக மாறி மயங்கி விழும் அபூர்வ நோயை கொண்டுள்ளார். இந்த பிரச்னையைச் சரி செய்ய இமயமலையில் துரோணகிரி மலையில் 36 வருடங்களுக்கு ஒரு முறை வளரும் மாலி பத்ரா என்ற ஒளிரும் காளான் தேவைப்படுகிறது. இதனிடையே மற்றொரு கதையில் இரண்டு மருத்துவர்கள் மனிதர்களை அடைத்து வைத்து பயங்கரமான பரிசோதனைகளை நடந்துகின்றனர். அதே சமயம் இன்னொரு கதையில், தேவதாசியாக இருந்து வரும் அபிநயா தனது மகளுடன் ஏனையோரைப் போல் வாழ முயற்சி செய்து வருகிறார். இந்த மூன்று பேரின் பயணமும் சாகசத்துடன் ஒரு இடத்தில் ஒன்றிணைகிறது. . அதன்பிறகு நடந்தது என்ன? என்பதை சொல்லி இருப்பதே காமி படக் கதை.
அகோரியாக நடித்திருக்கும் விஷ்வன் சென், அவருடன் இமயமலைக்கு பயணப்படும் மருத்துவராக நடித்திருக்கும் சாந்தினி செளத்ரி, சிறுமி ஹரிகா பெட்டா, சிறுமியின் அம்மாவாக நடித்திருக்கும் அபிநயா, ஆய்வுக்கூட சிறைச்சாலையில் சிக்கித்தவிக்கும் சிறுவன், என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கேரக்டரின் வலுவைச் சரியாகப் புரிந்துக் கொண்டு நிறைவான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
கேமராமேன் விஷ்வநாத் ரெட்டி செலுமல்லாவின் ஒளிப்பதிவும், நரேஷ் குமரன் பின்னணி இசையும், ஸ்வீக்கர் அகஸ்த்தியின் இசையில் பாடல்களும் மட்டுமின்றி, ராகவேந்திர திருனின் படத்தொகுப்பு எதையும் குறை சொல்ல முடியாது.
ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராகச் செல்லும் இந்தப் படத்தின் இயக்குனர் வித்யாதர் காகிடா, நிறைய உழைத்திருக்கிறார். அதுவும் இந்தியாவின் பல்வேறு லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் பட்ஜெட் கருதி சிலவற்றை சமரசம் செய்துள்ளனர். அது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. பாதி இடங்களில் நேரடியாகவும், பாதிக்கும் மேல் கிரீன் மேட்டிலும் ஷூட் செய்துள்ளது அப்பட்டமாக தெரிவதால் படமே ஒட்டாமல் போய் விடுகிற்து. அத்துடன் க்ளைமாக்ஸ் ட்விஸ்டை மட்டுமே நம்பி முழுப் படத்தையும் கொடுத்துள்ளனர். அதே சமயம் இதே மாதிரியான முடிவுகள் கொண்ட சில பல படங்களில் நினைவில் வந்து விடுவதால் இந்த காமி அவ்வளவாக எடுபடவில்லை.
மார்க் 2..5/5