ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்வு!
நம் தமிழகக் கட்சிகள் வெளியிட்ட பார்லிமெண்ட்டுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக மட்டுமின்றி அதிமுகவும் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவோம் என்று கூறியுள்ள நிலையில், ஏப்ரல் 1 ந்தேதி முதல் மீண்டும் சுங்கச் சாவடி கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு அவை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 1 ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதியும் மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ந்தேதியும் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு ஏப்ரல்1ந்தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்கிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்று திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 1 ந்தேதி முதல் மீண்டும் கட்டண உயர்வை, மத்திய அரசின் தேசிய ஆணையம் அறிவித்துள்ளதை அடுத்து, வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.