பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே ராஜினாமா!- ஏன்? அடுத்து யார்?
பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பிரதமராகி முழுமையாக இன்னும் 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை என்பதும். அவர் மே 2022 ல் பிரான்சின் 2 வது பெண் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை, எலிசபெத் போர்ன் அன்றாட உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்து கவனித்து வருவார் என்று அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாடென்பது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் முக்கியமானது . இங்கு இம்மானுவேல் மக்ரோன் அதிபராக இருந்து வருகிறார். எலிசபெத் போர்ன் பிரதமராக இருந்து வந்தார். பிரான்ஸில் இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.இந்த நிலையில், இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை அதிபர் செய்யப் போவதாக தகவல் வெளியானபடி இருந்தது.இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குடியேற்றத்தை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் தோல்விகள் பற்றிய பரவலான அதிருப்தி நிலவும் சூழலில் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆனால் பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை அங்கே அதிபர் தான் பொதுவான கொள்கைகளை வகுப்பார். அதேநேரம் அன்றாட அரசாங்க நிர்வகிக்கும் பொறுப்பு பிரதமருக்குச் செல்லும். அதாவது அதிருப்தி எதாவது ஏற்பட்டால் முதலில் சிக்குவது பிரதமர் பதவியில் இருப்பவர் தான். அந்த வகையில் , பிரதமராகி 2 ஆண்டுகள் கூட ஆகாதவர் பலி ஆடு ஆக்கப்பட்டுள்ளார்.
இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது முறையாக மீண்டும் பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த மே 2022-ல் எலிசபெத் போர்ன் பிரதமராக நியமிக்கப்பட்டார்.மாக்ரோனின் அரசாங்கத்தில் சேர்வதற்கு முன்பு பல சோசலிஸ்ட் கட்சி அமைச்சர்களின் கீழ் பணியாற்றிய ஒரு தொழில் அதிகாரி ஆவார். கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் அவர் பிரதமர் பதவியை வகித்து வந்தார். பிரான்சில் பிரதமர் பதவியை வகித்த இரண்டாவது பெண் என்ற பெருமை அவருக்கு உண்டு.
தற்போது பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய பிரதமர் யார் என்பது தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை எலிசபெத் போர்ன் அன்றாட உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்து கவனித்து வருவார் என, அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸின் பிரைம் மினிஸ்டர் ரேஸில் 34 வயதான கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல், 37 வயதான பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு, நிதி அமைச்சர் புருனோ லு மைர் மற்றும் முன்னாள் விவசாய அமைச்சர் ஜூலியன் டெனோர்மாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களில் அட்டல் அல்லது லெகோர்னு ஆகிய இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்சில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் இளம் வயது நபர் ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது என்ற தகவலும் வந்துள்ளது.